Wednesday, 22 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 43 - பகுதி 2

No comments

சமாதி மந்திர் (கோவில்):-

பின்னர் பாபாவின் பூதவுடலை எங்ஙனம் அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தது.  சில (முஸ்லிம்கள்) பாபாவின் உடல் திறந்த வெளியில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் ஒரு சமாதி கட்டவேண்டும் என்றனர்.  குஷால் சந்த்தும், அமீர் ஷக்கரும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.  ஆனால் ராமச்சந்திர பாடீல் என்னும் கிராம அதிகாரி உறுதியான தீர்மானமான குரலில் கிராம பரிஷத்தை நோக்கி, "எங்களுக்கு உங்கள் கருத்து சம்மதமில்லை.  வாதாவைத் தவிர வேறு எவ்விடத்திலும் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்படக்கூடாது" என்று கூறினார்.  மக்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகொண்டு முப்பத்தாறு மணிநேரம் வரை இதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.  புதன்கிழமை காலை பாபா, லக்ஷ்மண் மாமா ஜோஷியின் கனவில் தோன்றி அவரைத் தம் அருகில் அழைத்து, "சீக்கிரம் எழுந்திரு, பாபு சாஹேப் நான் இறந்துவிட்டதாக நினைக்கிறார்.  எனவே அவர் வரமாட்டார்.  நீ வழிபாட்டை நடத்தி காகட் (காலை) ஆரத்தி செய்" என்றார்.  லக்ஷ்மண் மாமா, கிராம ஜோசியரும் ஷாமாவின் தாய் மாமனுமாவார்.  அவர் ஒரு வைதீகப் பிராமணர்.  பாபாவைக் காலையில் வணங்கிய பின்னர் கிராம தெய்வங்களை வணங்கினார்.  பாபாவிடம் அவருக்கு மிகுந்த பக்தி உண்டு.  இக்கனவுக்குப் பின்னர் பூஜாத்திரவியங்கள் அனைத்துடனும் வந்து மௌல்விகளின் எதிர்பையும் பொருட்படுத்தாது உரிய சம்பிரதாயங்களுடன் பூஜையும், காலை ஆரத்தியும் காண்பித்துச் சென்றுவிட்டார்.  பின்னர் மத்தியானம் பாபு சாஹேப் ஜோக் மற்றெல்லாருடனும் வந்து வழக்கம்போல் மத்தியான ஆரத்தியைச் செய்தார். 

பாபாவின் இறுதி மொழிகளுக்கு கிராமமக்கள் உரிய மதிப்புக் கொடுத்து அவர்தம் திருமேனியை வாதாவில் வைக்க முடிவுசெய்து, அதன் நடுப்பகுதியைத் தோண்டத் துவங்கினார்கள்.  அடுத்தநாள் மாலை ராஹாதாவிலிருந்து சப்-இன்ஸ்பெக்டரும் மற்ற இடங்களிலிருந்து மக்களும் வந்து எல்லோரும் கலந்து பேசி அம்முடிவை ஏற்றுக்கொண்டனர்.  அடுத்தநாள் காலை பம்பாயிலிருந்து அமீர்பாயும், கோபர்காவனிலிருந்து மம்லதாரும் வந்தனர்.  மக்கள் கருத்து வேறுபாடு கொண்டதாகத் தோன்றியது.  சிலர் அவர் உடம்பு திறந்தவெளியில் அடக்கம் செய்வதற்கு வற்புறுத்தினர்.  எனவே மம்லதார் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி வாதாவை உபயோகப்படுத்தும் தீர்மானம் மற்றதைப் போல் இரண்டு பங்கு ஓட்டுக்கள் பெற்றதைக் கண்டார்.

ஆயினும் அவர் கலெக்டரிடம் இதுகுறித்து குறிப்பிட விரும்பியதையொட்டி காகா சாஹேப் தீஷித் அஹமத்நகருக்குப் புறப்பட ஆயத்தமானார்.  இத்தருணத்தில் பாபாவின் அகத்தூண்டுதலால் மறுசாராரிடம் ஒரு கருத்துமாற்றம் ஏற்பட்டு அனைவரும் எதிர்ப்பின்றி ஒரே முடிவை ஆதரித்தனர்.  புதன்கிழமை மாலை பாபாவின் திருமேனி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாதாவுக்கு கொண்டுவரப்பட்டு உரிய சம்பிரதாயங்களுடன் முரளீதரின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட மத்திய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  உண்மையில் பாபா முரளீதர் ஆனார்.

எங்கே அவ்வளவு அதிகமான பக்தர்கள் அமைதியும், சாந்தியும் தேடிச்சென்றார்களோ, சென்று கொண்டிருக்கிறார்களோ அத்தகைய கோவிலாகவும், புனித ஆலயமாகவும் வாதா திகழத் தொடங்கியது.  பாபாவின் இறுதிச் சடங்குகள் யாவும் பாலா சாஹேப் பாடேயாலும், பாபாவின் ஒரு பெரும் அடியவரான உபாஸனியாலும் நிறைவேற்றப்பட்டது.

பேராசிரியர் நார்கே கவனித்த விதமாக இந்த இடத்தில் இது குறிப்பிடப்படுகிறது.  முப்பத்தாறு மணிநேரம் பாபாவின் உடல் திறந்து வைக்கப்பட்டிருந்தபோதிலும் சடலம் விறைத்துப் போகாமலும், அங்கங்கள் வளைந்து கொடுக்கும் விதத்திலும் மிருதுவாக இருந்ததால் அவர் அணிந்துகொண்டிருந்த கஃப்னி துண்டுகளாகக் கிழிக்கபடாமல் கழற்றி எடுக்கப்பட்டது.
 
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :

Post a Comment