தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி (அகல்) விளக்குகள் எரிந்துகொண்டிருக்க பாபா உறங்கினார். பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுதுண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார். (அத்தியாயம் 10) ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும் மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்கவிடுகிறேன்" என்றார்.
பாபா: மஹல்ஸாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை.
காகா: மஹல்ஸாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன்.
பாபா: அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்? பலகையின் மீது தூங்குவது எளிதல்ல. தன்னிடத்து பல நல்ல குணங்கள் - பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும். தனது கண்கள் 'அகல விழித்திருக்கும் நிலையில்' தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும். நான் தூங்கப்புகும்முன் மஹல்ஸாபதியை என் அருகில் அமரச் சொல்லி எனது நெஞ்சின் மீது கைவைத்து நாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன். இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை. தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான். எனது நெஞ்சில் அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான். தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்குமுடியாமல் தடுமாறுபவனும் தனது ஆசனம் (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்?
மற்ற அநேக முறைகளில் அடியோர்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம் இருக்கிறது. எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார்.

No comments :
Post a Comment