முன்பாகவே உணர்த்திய குறிப்பு:-
வாசகர்கள் இதுவரை பாபாவின் வாழ்க்கையைப் பற்றிய கதைகளைக் கேட்டார்கள். அவர்கள் தற்போது பாபாவின் மறைவைப்பற்றி கவனத்துடன் கேட்கட்டும். பாபாவுக்கு 1918 செப்டம்பர் 28ம் திகதி லேசான ஜூரம் கண்டது. ஜூரம் இரண்டு, மூன்று நாட்கள் இருந்தது. பின்னர் பாபா உணவு சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டார். அதனால் நாளுக்கு நாள் பலவீனமானார். 17வது நாளன்று அதாவது 1918 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி மாலை சுமார் 2:30 மணிக்கு பாபா தமது பூத உடலை நீத்தார். விவரங்களுக்கு தாதா சாஹேப் கபர்டேவுக்கு பேராசிரியர் நார்கேயின் 1918 நவம்பர் 5ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் சாயிலீலா சஞ்சிகையில் (முதல் வருடம், பக்கம் 78) பார்க்க. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1916ல் பாபா, தாம் இயற்கை எய்துவதைப் பற்றிய குறிப்பு ஒன்றைக் கொடுத்தார். ஆனால் அதை அவர்கள் அப்போது புரிந்து கொள்ளவில்லை. அது பின்வருமாறு:
"விஜயதசமியன்று (தசரா) மாலையில் மக்கள் ஷிமோலங்கணிலிருந்து (ஷிமோலங்கண் என்பது கிராம எல்லையைத் தாண்டுதல்) திரும்பிவரும்போது பாபா திடீரென்று கோபாவேசமடைந்து தமது தலையணி, கஃப்னி லங்கோடு முதலியவைகளை எல்லாம் கழற்றி அவைகளைக் கிழித்து அவருக்கு முன்னால் உள்ள துனியில் எறிந்தார்". இந்தச் சமர்ப்பணத்தை உண்டு துனியிலுள்ள தீ, மிக்க ஒளியுடன் எரிந்து பிரகாசிக்கத் தொடங்கியது. பாபா முற்றிலும் நிர்வாணமான நிலையில் அங்கு நின்றார். நெருப்பைப்போன்ற சிவந்த கண்களுடன் எல்லோரையும் நோக்கி, "ஓ! பேர்வழிகளே, இப்போது என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்து, நான் ஒரு இந்துவா அல்லது முஸ்லீமா என்பதைத் தீர்மானியுங்கள்" என்று உரக்கக் கூறினார். எல்லோரும் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தனர். ஒருவருக்கும் பாபாவிடம் நெருங்கத் தைரியமில்லை.
கொஞ்ச நேரத்திற்குப்பின் பாபாவின் தொழுநோய் அடியவரான பாகோஜி ஷிண்டே தைரியத்துடன் அருகில் சென்று லங்கோடை கட்டிவிடும் முயற்சியில் வெற்றிபெற்றார்.
"பாபா என்ன இதெல்லாம். இன்றைக்கு ஷிமொலங்கண் - தசரா விடுமுறை" என்றார். பாபா தமது சட்காவைத் தரையில் அடித்து, "இது என்னுடைய ஷிமொலங்கண்" என்றார். இரவு பதினோரு மணிவரை சாந்தமடையவில்லை. அன்றிரவு சாவடி ஊர்வலம் நடக்குமா என்று அனைவரும் ஐயம் அடைந்தனர்.
ஒரு மணி நேரத்திற்குப்பின் பாபா தமது சாதாரண நிலைக்குத் திரும்பினார். வழக்கம்போல் உடையணிந்துகொண்டு முன்னமே விளக்கப்பட்டவிதமாக சாவடி ஊர்வலத்தில் பங்குகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தசராவே தமது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்ற கருத்தை அவர் தெரிவித்தார். ஆனால் ஒருவரும் அதன் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை. மற்றுமொரு குறிப்பாலும் பாபா இதனை உணர்த்தினார். அது பின்வருமாறு.

No comments :
Post a Comment