சிலர் தங்களுக்கே உரியமுறையில் அனுமானித்துக்கொண்டும், யூகித்துக்கொண்டும் சாயி ஒரு பிராமணர் என்றும், சிலர் அவர் ஒரு முஹமதியர் என்றும் கூறினர். உண்மையில் அவர் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல. எப்போது எந்த ஜாதியில் பிறந்தார் என்பதையும், அவரது பெற்றோர் யார் என்பதையும் ஒருவரும் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை.
முன்பே அத்தியாயம் 7ல் உள்ள பாபாவின் சொந்த கூற்றுப்படி அவர் பிராமணர் என்றாலும் பரமாத்மாவிடம் தன்னை முழுவதும் சரணாகதிசெய்து, அஹங்காரத்தையும் - உடல் உணர்வையும் ஒழித்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி - தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை. பின்னர் அவர் எங்ஙகனம் ஒரு பிராமணராகவோ, முஹமதியராகவோ இருக்கமுடியும்? அவர் ஒரு முஹமதியர் என்றால், மசூதியில் அணையாமல் எப்போதும் துனியை எங்ஙகனம் எரியவைத்துக் கொண்டிருக்கமுடியும்? அங்கு எங்ஙனம் ஒரு துளசி பிருந்தாவனம் இருக்க முடியும்? சங்கோசை, மணி ஓசை, இன்னிசைக்கருவிகள் ஆகியவைகளை அனுமதிக்க முடியும்? அவர் ஹிந்து வழிபாட்டு முறைகளின் எல்லா அம்சம்களையும் எங்ஙனம் நடக்கவிட்டிருக்க முடியும்? அவர் ஒரு முஹமதியராக இருந்தால், அவர் காதுகள் குத்தப்பட்டிருக்குமா? ஹிந்து கோவில்களைச் செப்பனிடத் தம் கையில் இருந்த பணத்தை அவர் செலவு செய்திருக்க முடியுமா? மாறுபாடாக ஹிந்து கோவில்களையும், தெய்வங்களையும் மதியாமல் இருப்பதை அவர் சிறிதும் சகிப்பதில்லை.
ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கர் பினிவாலே என்ற தனது ஷட்டகருடன் ஷீர்டிக்கு வந்தார். அவர்கள் மசூதிக்குச்சென்று பாபாவின் முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது பாபா திடீரென்று நானா சாஹேபின் மீது கோபம் அடைந்தார். "நீ இவ்வளவு காலம் எனது கூட்டுறவில் இருக்கிறாய். எங்ஙனம் நீ இவ்விதம் நடந்துகொள்கிறாய்?" என்று அவரைக் கேட்டார். முதலில் நானா சாஹேபுக்கு ஒன்றும் புரியவில்லை. தாழ்மையுடன் விளக்கும்படி கேட்டுக்கொண்டார். பாபா அவரை கோபர்காவன் எப்போது வந்தாரென்றும், அங்கிருந்து ஷீர்டிக்கு எங்ஙனம் வந்தாரென்பதையும் கேட்டார்.
உடனே நானா சாஹேப் தன் தவறைப் புரிந்துகொண்டார். அவர் ஷீரடிக்கு வரும்போதெல்லாம் கோபர்காவனில் கோதாவரிக் கரையிலுள்ள தத்தரின் கோவிலை வழிபட்டு வருவது வழக்கம். ஆனால் இம்முறை தத்தரின் பக்தரான தனது உறவினரையும், அக்கோவிலுக்குப் போகாமல் தடுத்து, தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஷீர்டிக்கு நேரடியாக வந்துவிட்டார். இக்குற்றத்தை எல்லாம் அவர் பாபாவிடம் ஒப்புக்கொண்டு கோதாவரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெரியமுள் அவர் பாதத்தில் குத்திவிட்டதனால், அது அவருக்கு மிகுதியான தொல்லையைக் கொடுத்தது என்று கூறினார். பாபா அது அவருக்கு லேசான தண்டனை என்று கூறி எதிர்காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறினார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment