அப்பா சாஹேப் குல்கர்ணி:-
1917 ஆம் ஆண்டு அப்பா சாஹேப் குல்கர்ணிக்கு ஒரு வாய்ப்பு நேரிட்டது. அவர் தாணேவுக்கு மாற்றப்பட்டு, பாபா சாஹேப் பாடேயால் அளிக்கப்பட்ட பாபாவின் படத்தை வழிபடத் தொடங்கினார். உண்மையான ஆர்வத்துடன் அவர் வழிபாடு செய்தார். பூ, சந்தனம், நைவேத்யம் இவைகளைத் தினமும் பாபாவின் படத்தின்முன் சமர்ப்பித்தார். அவரை நேரில் காணவும் விரும்பினார். இது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிடலாம். பாபாவின் படத்தை ஆர்வத்துடன் பார்ப்பதானது, அவரை நேரில் காண்பதற்குச் சமமாகும். கீழ்வரும் கதை இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறது.
அவர் தாணேவில் இருந்தபோது பிவண்டி என்னுமிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு வாரத்திற்குள் அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அவர் இல்லாதபோது மூன்றாவதுநாள் பின்வரும் ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. மத்தியானம் ஒரு பக்கிரி அப்பா சாஹேபின் வீட்டிற்கு வந்தார். அவருடைய அங்க அமைப்பெல்லாம் பாபாவின் படத்துடன் சரியாக ஒத்திருந்தன. குல்கர்ணியின் மனைவியும், குழந்தைகளும் அவரை அவர் ஷீர்டி சாய்பாபாவா? எனக் கேட்டனர். அதற்கு அவர் இல்லை என்று கூறி ஆனால் தாம் அவரின் பணிவுள்ள ஒரு வேலையாள் என்றும், அவ்விடத்திற்கு அவர்தம் கட்டளைப்படியே அவர்களின் குடும்ப நலத்தை விசாரிக்க வந்திருப்பதாகவும் கூறினார். பின்னர் அவர் தஷிணை கேட்டார். அப்பெண்மணி ஒரு ரூபாய் கொடுத்தாள். அவர் உதிப் பொட்டலம் ஒன்றைக் கொடுத்து அதை வழிபாட்டுக்காக பூஜையறையில் படத்துடன் வைக்கும்படி கூறினார். பின்னர் அவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். இப்போது சாயியின் அற்புதமான லீலையைக் கேளுங்கள்.
அப்பா சாஹேப், தனது குதிரை பிவண்டியில் நோய்வாய்ப்பட்டதால் பயணத்தைத் தொடர முடியவில்லை. அந்நாள் மாலை அவர் வீட்டிற்குத் திரும்பினார். மனைவியின் மூலம் பக்கிரி விஜயத்தைப் பற்றி அறிந்தார். தான் அப்பக்கிரியின் தரிசனம் பெறாததையும் ஒரே ஒரு ரூபாய் மட்டும் தஷிணையாக அளிக்கப்பட்டது குறித்து திருப்தியில்லாததையும் நினைத்து மனதில் சிந்தனை செய்தார். தாம் அப்போது இருந்திருந்தால் பத்து ரூபாய்க்குக் குறைவாக தஷிணை அளித்திருக்கமாட்டேன் என்று கூறினார். பின் உடனே பக்கிரியைத் தேடிக்கொண்டு சென்றார். உணவு உட்கொள்ளாமல் மசூதியிலும் மற்ற இடங்களிலும் அவரைத் தேடினார். எங்கு தேடியும் காண இயலவில்லை. பாபாவின் கொள்கையை வாசகர்கள் 32ம் அத்தியாயத்தில் கண்டிருக்கலாம். அதாவது வெறும் வயிற்றுடன் கடவுளைத் தேடுதல் கூடாது என்பதாம். உணவுக்குப்பின் சித்ரே என்ற நண்பருடன் அவர் உலாவப் புறப்பட்டார்.
சிறிதுதூரம் சென்றபின், விரைவாக ஒரு பக்கிரி அவர்களை நோக்கி வருவதைக் கண்டனர். பாபாவின் புகைப்படத்தில் இருந்த அந்த அடையாளங்களுடன் இப்பக்கிரியினது உருவமும் ஒத்திருந்ததால் இவரே மத்தியானம் தமது வீட்டிற்கு வந்தவராக இருக்கக்கூடும் என்று அப்பா சாஹேப் எண்ணினார். பக்கிரி உடனே தமது கையை நீட்டி தஷிணை கேட்டார். அப்பா சாஹேப் அவருக்கு ஒரு ரூபாயை அளித்தார். அவர் மீண்டும் கேட்கவே அப்பா சாஹேப் மேலும் இரண்டு ரூபாய் கொடுத்தார். அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. பின்னர் அவர் சித்ரேயிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி அதை அவருக்குக் கொடுத்தார். பக்கிரி மேலும் விரும்பினார். அப்பா சாஹேப் மீண்டும் அவருக்கு மூன்று ரூபாய் கொடுத்தார். மொத்தத்தில் ஒன்பது ரூபாய். பக்கிரி திருப்தியடைந்தவராகக் காணப்படவில்லை. மேலும் கேட்டார். பின்னர் தம்மிடம் ஒரு பத்து ரூபாய் கரன்ஸி நோட்டு இருப்பதாக அவரிடம் கூறினார். பக்கிரியும் அதையே கேட்டு வாங்கிக்கொண்டு ஒன்பது ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். முன்னர் அப்பா சாஹேப் தாம் பத்து ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறினார். அத்தொகையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட ஒன்பது ரூபாய்களும் அவரிடமே திருப்பித்தரப்பட்டன. ஒன்பது என்ற எண் குறிப்பிடத்தக்கது. அது நவவித பக்தியைக் குறிக்கிறது. (21ஆம் அத்தியாயத்தைப் பார்க்க) லக்ஷ்மிபாயி ஷிண்டேவுக்கு பாபா தமது கடைசித் தருணத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்ததைக் கவனிக்கலாம்.
அப்பா சாஹேப் உதிப்பொட்டலத்தைச் சோதனை செய்தார். அதில் சில மலர் இதழ்களும், அக்ஷதைகளும் இருப்பதைக் கண்டார். பின் சில நாட்களுக்குப் பிறகு ஷீர்டி சென்றபோது பாபாவின் ரோமம் ஒன்று அவருக்குக் கிடைத்தது. அதையும் உதிப்பொட்டலத்தையும் ஒரு தாயதிற்குள் வைத்து எப்போதும் தமது புயத்தில் அணிந்துகொண்டார். அப்பா சாஹேப் உதியின் சக்தியை உணர்ந்துகொண்டார். அவர் மிகவும் புத்திசாலியாய் இருந்தபோதும் ஆரம்பத்தில் சம்பளமாக ரூ.40 பெற்று வந்தார். பாபாவின் படமும், உதியையும் பெற்றான பிறகு நாற்பது ரூபாயைப் போலப் பலமடங்கு அவர் மாதச் சம்பளமாகப் பெற்றார். அதிக ஆற்றலும், செல்வாக்கும் படைத்தவரானார். இந்த உலக நன்மைகளுடன் கூட அவர்தம் ஆன்மிக முன்னேற்றமும் துரிதமானது.
எனவே பாபாவின் உதியைப் பெற்றிருக்கும் நல்லதிர்ஷ்டம் உடையவர்கள், அதை குளித்தபின் நெற்றியில் இட்டுக்கொண்டு சிறிதளவு எடுத்துத் தண்ணீரில் கரைத்துப் புனித தீர்த்தமாகக் குடித்துவிடவேண்டும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment