ஜோகின் சந்நியாசத்தைப் பற்றிய செய்தியுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற வர்க்காரி விஷ்ணுபுவா ஜோக் என்பவரின் மாமா சகாராம் ஹரி என்ற பாபு சாஹேப் ஜோக் ஆவார். அவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து (P.W. டிபார்ட்மெண்டில் சுப்பர்வைசர்) 1909ல் ஓய்வு பெற்றதும், தமது மனைவியுடன் ஷீர்டிக்கு வந்து வசித்து வந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. கணவனும், மனைவியும் பாபாவை நேசித்தனர். பாபாவை வழிபடுவதிலும், அவருக்குச் சேவை செய்வதிலும், தங்கள் முழுநேரத்தையும் செலவிட்டனர். மேகாவின் மரணத்திற்குப்பின் மசூதியிலும், சாவடியிலும் பாபாவின் மஹாசமாதிவரை ஜோக் ஆரத்தி எடுத்தார். சாதேவின் வாதாவில் ஞானேஷ்வரியையும், ஏக்நாத் பாகவதத்தையும் மக்களுக்குப் படித்து விவரிக்கும் வேலையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜோக் பல ஆண்டுகள் பாபாவுக்குச் சேவை செய்தபின்னர் பாபாவை நோக்கி, "நான் இத்தனை காலம் தங்களுக்குச் சேவை செய்தேன். எனது மனம் இன்னும் அமைதியும், சாந்தியும் பெறவில்லை. ஞானிகளுடன் எனக்கு உண்டான தொடர்பு எங்ஙனம் என்னை முன்னேற்றாமல் இருக்கிறது? எப்போது என்னைத் தாங்கள் ஆசீர்வதிப்பீர்கள்?" என்று கேட்டார்.
பக்தரின் வேண்டுகோளைச் செவிமடுத்த பாபா, "உரிய காலத்தில் உனது தீவினைகள் (அவைகளின் விளைவு அல்லது பயன்) அழிக்கப்பட்டுவிடும். உனது நன்மை, தீமை யாவும் சாம்பலாக்கப்படும். எல்லாப் பற்றுக்களையும் துறந்து, அடங்காச் சிற்றின்ப அவாவையும், சுவை உணர்வையும் ஜெயித்து, எல்லாத் தடைகளையும் ஒழித்துவிட்டு, முழு மனதுடன் கடவுளுக்கே சேவை செய்து பிச்சைப் பாத்திரத்தை எப்போது நாடி அடைகிறாயோ (சந்நியாசம் ஏற்கிறாயோ) அன்றே நான் உன்னை புனிதமடைந்தவனாக நினைப்பேன்" என்றார். சில நாட்களுக்குப் பின் பாபாவின் மொழிகள் உண்மையாயின. அவரது மனைவி அவருக்குமுன் இயற்கை எய்தினாள். வேறு பற்றொன்றும் அவருக்கு இல்லை. அவர் சுதந்திரமானார். இறப்பதற்குமுன் சந்நியாசம் ஏற்றார். வாழ்க்கையின் இலட்சியத்தை எய்தினார்.

No comments :
Post a Comment