Tuesday, 28 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 46 - பகுதி 3

No comments
இரண்டு ஆடுகள்:-

ஒருமுறை லெண்டியிலிருந்து பாபா திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, ஆட்டு மந்தையொன்றைக் கண்டார்.  அவைகளில் இரண்டு அவரின் கவனத்தைக் கவர்ந்தன.  அவைகளிடம் சென்று அவற்றைத் தடவிக்கொடுத்து அன்புசெலுத்தி அவைகளை ரூபாய் 32க்கு விலைக்கு வாங்கினார்.  பாபாவின் இந்தச் செயலைக்கண்டு பக்தர்கள் ஆச்சரியமுற்றனர்.  இவ்வியாபாரத்தில் பாபா ஏமாற்றப்பட்டார் எனவும், ஒரு ஆடு ரூ.2 வீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 அல்லது 4 வீதம் இரண்டு ஆடுகளும் ரூ.8 மட்டுமே பெறும் எனவும் நினைத்தனர்.  அவர்கள் இதற்காக பாபாவைக் கடிந்துகொண்டனர்.  ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்.  ஷாமாவும், தாத்யா கோதேவும் அதற்கு விளக்கம் கேட்டனர்.  தமக்கென வீடும், கவனிக்கக் குடும்பமும் இல்லாதபடியால் தாம் பணத்தைச் சேமிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.  தமது செலவில் நான்குசேர் பருப்பு வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படி கூறினார்.  இது முடிந்தபின், பாபா அவ்வாடுகளை மந்தையின் சொந்தகாரருக்குக் கொடுத்துவிட்டு, ஆடுகளைப் பற்றிய தமது பழைய ஞாபகத்தையும், கீழ்கண்ட கதையையும் கூறினார்.  

"ஓ! ஷாமா, தாத்யா!, இவ்வியாபாரத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என நீங்கள் நினைக்கிறீர்கள்.  கிடையாது.  அவைகளின் கதையைக் கேளுங்கள்.  அவைகளின் முந்தைய பிறவியில் மனிதர்களாய் இருந்தனர்.  எனது நண்பர்களாய் இருந்து, எனது அருகில் அமரும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்.  அவர்கள் ஒருதாய் மக்கள்.  முதலில் ஒருவரையொருவர் நேசித்தனர்.  ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாய் ஆகிவிட்டனர்.  மூத்தவன் சோம்பேறி, பின்னவன் சுறுசுறுப்பானவன்.   ஆதலால் பெரும்பொருள் திரட்டினான்.  மூத்தவன் பேராசையும், பொறாமையும் கொண்டு பின்னவனைக் கொன்று பணத்தை எடுத்துக்கொள்ள விரும்பினான்.

தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவர் சண்டை போடத்தொடங்கினர்.  மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு அவனது முயற்சிகளில் தோல்வியடைந்தான்.  இவ்வாறாக அவர்கள் மரண விரோதியானார்கள்.  முடிவாக ஒரு சந்தர்ப்பத்தில் மூத்தவன், இளையவன் தலையில் தடிக்கம்பால் பலத்த மரணஅடி ஒன்று கொடுக்க, இளையவன் மூத்தவனை கோடாரியால் தாக்க இதன் விளைவாக இருவரும் அவ்விடத்திலேயே மாண்டனர்.  அவர்கள் வினையின் காரணமாக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர்.  சற்றுமுன் என்னைக்கடந்து சென்றபோது, நான் அவர்களை அறிந்துகொண்டேன்.  அவைகளின் முந்தைய பிறவிகளை நினைவுகூர்ந்து இரக்கம்கொண்டு அவைகளுக்கு இளைப்பாறுதாலும், சௌகரியமும் தர விரும்பி என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன்.  இதற்காகத்தான் நீங்கள் என்னைப் குறை கூறுகிறீர்கள்.  நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவைகளை மேய்ப்பவனிடமே திருப்பி அனுப்பிவிட்டேன்", என்றார்.  ஆடுகளிடம் சாயியின் அன்பு அத்தகையது.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)


No comments :

Post a Comment