இந்த அத்தியாயத்தில் ஹேமத்பந்த் இரண்டு விஷயங்களை விவரிக்கிறார்.
(1 ) பாபா எங்ஙனம் தமது குருவைக் காடுகளில் சந்தித்தார்? அவர் மூலம் கடவுள் சந்திப்பு.
(2 ) மூன்று நாட்கள் விரதமிருக்க எண்ணிய திருமதி.கோகலேயை எங்ஙனம் பாபா பூரணப்போளியைச் சாப்பிடச் செய்தார்.
முன்னுரை:-
முதலில் கண்ணுக்குத் தெரியும் இச்சம்சார வாழ்க்கையை ஹேமத்பந்த் ஆலமரத்துடன் ஒப்பிடுகிறார். கீதையின் சொற்களில் வேர் மேலும், கிளைகள் கீழும் என்பதாக, அதன் கிளைகள் மேலும், கீழும் பரவுகின்றன. குணங்களால் போஷிக்கப்படுகின்றன. அதன் துளிர்கள் புலன்களாகின்றன. அதன் வேர்கள் செயல்களாக மனிதர்களின் இவ்வுலகம்வரை நீண்டிருக்கின்றன. இவ்வுலகத்தில் அதன் ரூபமோ, முடிவோ, ஆரம்பமோ அல்லது அதன் பற்றுக்கேடோ தெரியாது. வலிமையான வேர்களுள்ள இவ்வாலமரத்தைப் பற்றின்மை என்னும் கூரிய ஆயுதத்தால் வெட்டுவதன் மூலம் அதற்கப்பாலுள்ள பாதையை ஒருவன் தேடவேண்டும். அதில் செல்பவன் திரும்பிவருதல் கிடையாது.
இப்பாதையில் செல்வதற்கு நல்ல வழிகாட்டியின் (குரு) உதவி இன்றியமையாதது. ஒருவன் எவ்வளவுதான் கற்றறிந்தவனாய் இருப்பினும் வேதவேதாந்தங்களில் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுடையவனாக இருப்பினும் தனது பயணமுடிவை அவன் பத்திரமாகச் சென்றடைய முடியாது. வழிகாட்டி ஒருவர் அவனுக்கு உதவ அங்கிருந்தால் சரியான வழியைக் காண்பித்துப் பயணத்தின் போதுள்ள இடர்கள், குழிகள், கொடிய மிருகங்கள் இவற்றை ஒதுக்கிச் செல்லமுடியும். பயணமும் இலகுவானதாகிவிடும். இவ்விஷயத்தில் பாபாவின் சொந்த அனுபவமாக அவர் சொன்ன கதை உண்மையில் ஆச்சரியமானது. கேட்டறியும்போது நம்பிக்கை, பக்தி, ரஷணை ஆகியவற்றை அளிக்கிறது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

No comments :
Post a Comment