Thursday, 30 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 50 - பகுதி 2

No comments

காகா சாஹேப் தீஷித் (1864 - 1926):-

ஹரி சீதாராம் என்னும் காகா சாஹேப் தீஷித் 1846ல் வத்நாகர நகர், காண்ட்வாவில் (மத்திய மாகாணம்) பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார்.  அவர் ஆரம்பக் கல்வி காண்ட்வா, ஹிங்கான்காட் என்னும் ஊர்களிலும், நடுத்தரக் கல்வி நாக்பூரிலும் பயின்றார்.  மேற்படிப்புக்காக பம்பாய் வந்து வில்ஸன் கல்லூரியில் முதலிலும், பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் பயின்றார்.  1883இல் பட்டம் பெற்ற பிறகு அவர் L.L.B. யிலும் வக்கீல் பரீட்சையிலும் தேறி, அரசு தரப்பு வக்கீல்களின் லிட்டில் & கம்பெனி என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சிறிது காலத்திற்குப்பின் தாமே சொந்தமாக வழக்குரை அறிஞர்கள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

1909ஆம் ஆண்டுக்கு முன்னர் சாயிபாபாவின் பெயர், காகா சாஹேப் தீஷித்துக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அதற்குப்பின் அவர் பாபாவின் ஒரு பெரும் பக்தராக ஆனார். லோனாவாலாவில் தங்கியிருந்தபோது தனது பழைய நண்பரான நானா சாஹேப் சாந்தோர்கரைச் சந்திக்க நேர்ந்தது.  பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் இருவரும் சிறிதுநேரத்தைச் செலவழித்தனர்.  காகா சாஹேப், தாம் லண்டனில் ஒரு டிரெயினில் போய்க்கொண்டிருக்கும்போது எங்ஙனம் ஒரு விபத்து நேரிட்டு தனது பாதம் நழுவிக் காயமடைந்தார் என்று அவருக்கு விளக்கினார். நூற்றுக்கணக்கான சிகிச்சைகள் செய்தும் எதுவும் அவருக்குப் பலனை அளிக்கவில்லை.

நானா சாஹேப் அவரிடம் அவர்தம் காலின் ஊனத்தையும், வழியையும் நீக்கிக்கொள்ள விரும்பினால் தனது சத்குரு சாயிபாபாவிடம் செல்லவேண்டும் என்றார்.  மேலும் சாயிபாபாவைப்பற்றிய முழு விபரத்தையும் அவர் காகாவுக்குக் கொடுத்து சாயிபாபாவின் மஹாவாக்கியமான "எனது மக்களை நெடுந்தொலைவிலிருந்தும், ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கிறேன்" என்பதைக் கூறினார்.

பாபாவின் ஆளாயில்லாவிட்டால் அவர் பாபாவால் கவரப்படமாட்டார் என்பதையும், தரிசனம் அளிக்கப்படமாட்டார் என்பதையும் அவர் தெளிவாக்கினார். இவைகளையெல்லாம் கேட்க காகா சாஹேபுக்கு மகிழ்வுண்டாயிற்று.  தாம் பாபாவிடம் போவதாகவும், அவரைத் தரிசித்துப் பிரார்த்தித்து கால் ஊனத்தை அவ்வளவாக குணமாக்காவிடினும் ஊனமான ஒட்டித்திரியும் மனத்தை ஒழுங்காக குணப்படுத்தி தமக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கும்படியும் வேண்டிக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

காகா சாஹேப் தீஷித் சில நாட்களுக்குப் பிறகு பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக, ஓட்டுக்கள் பெறும் நோக்குடன் அஹமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகருடன் தங்கினார்.  காகா சாஹேப் மிரீகருடைய புதல்வரான பாலா சாஹேப் மிரீகர் என்னும் கோபர்காவனின் மம்லதார், அச்சமயத்தில் அஹமத்நகருக்கு அவ்விடத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியைக் காணும்பொருட்டு வந்தார்.  தேர்தல் வேலை முடிந்ததும் காகா சாஹேப் தீஷித் ஷீர்டி செல்ல விரும்பினார். தந்தையும், மகனுமாகிய இரு மிரீகர்களும், அவருடன் அனுப்புவதற்கு ஒரு தகுதியான, ஒழுங்கான வழிகாட்டியாக யாரை அனுப்பலாம் என்று தங்கள் இல்லத்தில் யோசித்துக்கொண்டிருந்தனர்.

ஷீர்டியில் சாயிபாபா அவர்களின் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.  ஷாமாவுக்கு அவரின் மாமனாரிடமிருந்து ஷாமாவின் மாமியார் தீவிரமாகக் காய்ச்சலாக இருப்பதையும், ஷாமா தனது மனைவியுடன் அவளைக் காண அஹமத்நகர் வரவேண்டுமென்றும் ஒரு தந்தி வந்தது.  ஷாமா பாபாவின் அனுமதியுடன் அங்கு வந்து தனது மாமியார் முன்னைவிட இப்போது நலமாகி வருவதைக் கண்டார்.  நானா சாஹேப் பான்சேயும், அப்பா சாஹேப் கத்ரேயும் அவர்கள் குதிரைக் கண்காட்சிக்குப் போகும்வழியில் ஷாமாவைக் கண்டு, அவரை மிரீகரின் வீட்டுக்குச் சென்று காகா சாஹேப் தீஷித்தைப் பார்த்து ஷீர்டிக்கு அவரையும் உடனழைத்துச் செல்லும்படி கூறினார்கள்.  காகா சாஹேப் தீஷித்துக்கும், மிரீகர்களுக்கும் கூட ஷாமாவின் வருகை தெரிவிக்கப்பட்டது.  மாலையில் ஷாமா மிரீகர்களிடம் வந்தார்.  அவரை அவர்கள் காகா சாஹேப் தீஷித்துக்கு அறிமுகப்படுத்தினர்.  

ஷாமா, காகா சாஹேப் தீஷித்துடன் இரவு 10 மணி ரயில் வண்டியில் கோபர்காவனுக்குச் செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டது.  இது முடிவானதும் ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது.  பாலா சாஹேப் மிரீகர் பாபாவின் படத்தின்மீது இருந்த திரையை அகற்றிவிட்டு அதை காகா சாஹேப் தீஷித்துக்குக் காண்பித்தார்.  யாரைப் பார்க்க ஷீர்டிக்குப் போகப் போகிறாரோ அவர் அவ்விடத்திலேயே தமது சித்திர ரூபத்தில் வரவேற்க இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்.  அவர் மிகவும் மனமுருகி படத்தின்முன் வீழ்ந்துபணிந்தார்.  அப்படம் மேகாவுடையது.  அதன்மேல் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டதால், பழுதுபார்க்க அது மிரீகர்களிடம் அனுப்பபட்டிருந்தது.  தேவையானபடி பழுது பார்க்கப்பட்டு விட்டபடியால் படத்தை இப்போது ஷாமாவிடமும், காகா சாஹேபுடனும் அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பத்து மணிக்கு முன்னரே அவர்கள் ரயில் நிலையத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டனர்.  ஆனால் வண்டி வந்ததும் இரண்டாம் வகுப்பு மிகவும் கூட்டமாக இருப்பதையும், அவர்களுக்கு இடமில்லாதிருப்பதையும் அறிந்தனர்.  அதிர்ஷ்டவசமாக அந்த வண்டியின் கார்டு, காகா சாஹேபின் நண்பராக இருந்தார்.  அவர்களை முதல் வகுப்பில் அமர்த்தினார்.  இவ்வாறாக அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணம் செய்து கோபர்காவனில் இறங்கினார்கள்.  ஷீர்டிக்குச் செல்ல நானா சாஹேப் சாந்தோர்கரும் அங்கு வந்திருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

காகா சாஹேபும், நானா சாஹேபும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.  பிறகு புனித கோதாவாரியில் நீராடிய பின்னர் அவர்கள் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.  அங்கு போய்ச்சேர்ந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடன் காகா சாஹேபின் மனது உருகியது. அவர் கண்கள் குளமாயின. அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டார்.  

பாபா அவரிடம் தாம்கூட அவருக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும், அவரை வரவேற்பதற்காகவே ஷாமாவை முன்னால் அனுப்பியதாகவும் கூறினார்.

பின்னர் காகா சாஹேப் பல சந்தோஷமான வருடங்களை பாபாவின் கூட்டுறவில் கழித்தார்.  ஷீர்டியில் அவர் ஒரு வாதா(சத்திரம்) கட்டினார்.  ஏறக்குறைய அதையே நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டார்.  பாபாவிடமிருந்து அவர் பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவையாதலால் அவைகளை எல்லாம் கூறுவதற்கு இங்கு இடமில்லை.  இது குறித்து சாயிலீலா சஞ்சிகை (தொகுப்பு 12, எண் 6,7,8,9) 'காகா சாஹேப் தீஷித்" சிறப்புமலரைப் பார்க்குமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஒரே ஒரு உண்மையைக் கூறி இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறோம்.  பாபா அவரை "நான் உன்னை புஷ்பக விமானத்தில் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறியிருந்தார்.  (அதாவது மகிழ்வான மரணத்தை அவருக்குக் கொடுத்தல்) இது உண்மையாயிற்று.  1926ஆம் வருடம் ஜூலை மாதம் 5ஆம் தேதி அவர் ஹேமத்பந்துடன் ரயிலில் செல்லும்போது சாயிபாபாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.  அவர் நினைவிலேயே ஆழ்ந்திருந்தார்.  திடீரெனத் தமது கழுத்தை ஹேமத்பந்தின் தோள்களில் சாய்த்து எவ்வித வலியோ, அசௌகரியமோ இன்றிக் காலமானார்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment