Thursday, 23 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 44 - பகுதி 1

No comments


72 மணி நேர சமாதி:-

இதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1886ல் பாபா எல்லைக்கோட்டை (ஆயுள் என்ற எல்லை) தாண்ட முற்சித்தார்.  ஒரு மார்கழிப் பௌர்ணமி தினத்தன்று பாபா கடுமையான ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டார்.  அதைத் தொலைப்பதற்கு பாபா தனது பிராணனை மிகஉயர எடுத்துச்சென்று சமதிநிலையை அடையத் தீர்மானித்தார்.  பகத் மஹல்ஸாபதியிடம் "எனது உடலை மூன்று நாட்கள் பாதுகாப்பாயாக.  நான் திரும்பினால் எல்லாம் சரியாகிவிடும்.  நான் திரும்பவில்லை என்றால் அந்த திறந்தவெளியில் (சுட்டிக்காண்பித்து) எனது உடலைப் புதைத்துவிட்டு அதன்மேல் இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டுவிடு" என்று கூறினார்.

இதைக் கூறிவிட்டு இரவு சுமார் பத்துமணிக்கு பாபா கீழே சாய்ந்தார்.  அவரது மூச்சும், நாடியும் நின்றுபோயின.  உடம்பை விட்டுவிட்டு உயிர் அகன்றுவிட்டதைப்போல் தோன்றியது.  கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் அங்குவந்து விசாரணை ஒன்றை நடத்தி, பாபாவால் சுட்டிக்காண்பிக்கபட்ட இடத்தில் அவரை அடக்கம்செய்ய வந்தனர்.  ஆனால் மஹல்ஸாபதி இதைத் தடை செய்தார்.  தமது மடியிலேயே வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் விடாமல் காத்திருந்தார்.  மூன்று நாட்கள் கழிந்ததும் காலை 3 மணிக்கு பாபாவிடம் உயிரின் அறிகுறிகள் தெரிந்தன.  அவரது சுவாசம் ஆரம்பித்து, அடிவயிறு அசையத் தொடங்கியது.  கண்கள் திறந்தன.  தனது அங்கங்களை நீட்டிக்கொண்டு மீண்டும் உணர்வுக்கு வந்தார்.

இதிலிருந்தும் மற்ற காரணங்களாலும் வாசகர்கள், சாயிபாபா இத்தனை ஆண்டுகளாக உறைந்த 3½ முழ அளவான உடலைக் கொண்டவர்தானா, அதை விட்டுவிட்ட பிறகு அவர் நீங்கிவிட்டாரா, அல்லது அகத்தே உறையும் ஆத்மவடிவாக விளங்கினாரா என்று தீர்மானித்துக்கொள்ளலாம்.  பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.

இப்பரம்பொருளாகிய சாயியே அண்ட பேரண்டங்களிலும் இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கிறார்.  இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கிறார்.  குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக இவ்வுடம்பை எடுத்துக்கொண்டார்.  தமது குறிக்கோள் நிறைவேறியதும் தமது அழியும் உடம்பைத் (வரையறையுள்ள பண்புக்கூறு) துறந்துவிட்டு தமது வரையறையற்ற பண்புக்கூற்றை அடைந்தார்.  கடவுள் தத்தர், கனகாபூரைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி போன்ற முந்தைய அவதாரங்கள் போலவே சாயி எப்போதும் வாழ்கிறார்.  அவரது மரணம் ஒரு புறத்தோற்றமே தவிர உயிருள்ளவற்றிலும், ஜடப்பொருட்களிலும் நிலைபெற்று ஆதிக்கம் செலுத்தி அவைகளைக் கட்டுப்படுத்துகிறார்.  இது இயல்பானதே.  இப்போதும் கூடத் தங்களைத் தாங்களே முழுமையும் சரணாகதியடைவோரும் அவரையே முழுமனதாக பக்தியுடனும் வணங்குவோருமாகிய பலரும் அனுபவபூர்வமாக இதை உணரலாம்.

பாபாவின் ஸ்தூல உருவத்தை நாம் தற்போது காண இயலாவிடினும், இப்போதும்கூட ஷீர்டிக்குச் செல்வோமானால், மசூதியில் அவரது அழகான, தத்ரூபமான சித்திரம் காட்சியளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.  பாபாவின் புகழ்பெற்ற அடியவரும், சித்திரக்காரருமான ஷாம்ராவ் ஜெயகரால் இந்த ஓவியம் வரையப்பட்டது.  கற்பனைவளம், பக்தியுள்ள பார்வையாளருக்கு இப்படம் இன்றும் பாபாவின் தரிசனம் தரும் திருப்தியையளிக்கிறது.  பாபா இப்போது உடல் உருவில் இல்லையாயினும் அவர் அங்கும், எங்கும் இருந்து அவர் பூதவுடலுடன் இருந்த சமயம் எவ்வாறு பக்தர்களை நலமுடன் ஆராதித்தாரோ அவ்வாறே இப்போதும் அருள் செய்கிறார்.  பாபாவைப் போன்ற ஞானிகள் மனிதர்களைப்போன்று தோன்றினாலும், இறப்பதே இல்லை.  உண்மையில் அவர்கள் கடவுளே ஆவர்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :

Post a Comment