Wednesday, 29 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 49 - பகுதி 3

No comments

சோமதேவ் ஸ்வாமி:-

பாபாவை சோதிக்கவந்த மற்றொரு மனிதரின் கதையை இப்போது கேளுங்கள்.  காகா சாஹேபின் சகோதரரான பாயிஜி நாக்பூரில் தங்கியிருந்தார்.  1906ம் ஆண்டில் இமயமலை சென்றிருந்தபோது கங்கோத்ரி பள்ளத்தாக்கில் உள்ள உத்தர் காசியில், ஹரித்வாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமி என்பாருடன் அறிமுகமானார்.  இருவரும் ஒருவர் மற்றவரின் பெயரை தங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிக்கொண்டனர்.  ஐந்தாண்டுகளுக்குப்பின் சோமதேவ் ஸ்வாமி, பாயிஜியின் விருந்தினராக நாக்பூருக்கு வந்தார்.  பாபாவின் லீலைகளைக் கேட்டு மகிழ்வெய்தினார்.

ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காண அவருக்கு ஒரு பெரும் ஆசை எழுந்தது.  பாயிஜியிடம் இருந்து அறிமுகக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, ஷீர்டிக்குக் கிளம்பினார்.  மன்மாட், கோபர்காவன் இவைகளைக் கடந்ததும், ஒரு வண்டியமர்த்திக்கொண்டு ஷீர்டிக்குப் போனார்.  ஷீர்டிக்கு அருகில் வந்ததும் மசூதியில், இரண்டு உயரமான கொடிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டார்.  வெவ்வேறு ஞானிகளிடம் வெவ்வேறு விதமான குணாதிசயங்களும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளும், வெவ்வேறு புறப்பரிவாரங்களும் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம்.  ஆயின் இப்புறச் சின்னங்கள் அந்த ஞானிகளின் தகுதிகளை எடை போடுவதற்கு உகந்த அளவுகோல் ஆகா.  ஆனால் சோமதேவ் ஸ்வாமியின் விஷயத்தில், அது வேறு விதமாய் இருந்தது.  கொடிகள் பறப்பதை அவர் கண்டவுடனே, "ஞானி ஒருவர், கொடிகள் மீது ஏன் ஆர்வம் வைக்கவேண்டும்?  இது துறவையா உணர்த்துகிறது?  இது அந்த ஞானி புகழுக்காக ஏங்குவதை அல்லவா உணர்த்துகிறது" என எண்ணினார்.

இவ்வாறாக அவர் தமது ஷீர்டி விஜயத்தை ரத்துச் செய்ய விரும்பி, தாம் திரும்பிப் போவதாக கூட வந்த சக பயணிகளிடம் கூறினார்.  அவர்கள் அதற்கு, "பின் இவ்வளவு தூரம் நீங்கள் ஏன் வரவேண்டும்.  கொடியைக் கண்டே தங்கள் மனம் கலக்கமுறும்போது ஷீர்டியில் ரதம், பல்லக்கு, குதிரை மற்றும் பல பரிவாரங்களையெல்லாம் கண்டால் தங்கள் மனம் எவ்வளவு நிலைகுலையும்" என்றார்கள்.  இதைக்கேட்டு ஸ்வாமி மேலும் குழப்பமடைந்தவராக, "குதிரை, பல்லக்கு இன்னோரன்ன படாடோபங்களையுடைய சாதுக்கள் சிலரை மட்டும் நான் கண்டதில்லை, (அனேகரைக் கண்டிருக்கிறேன்)  அத்தகைய சாதுக்களைக் காண்பதைவிட திரும்பிப் போதலே எனக்கு நன்று" என்றுரைத்தார்.  இதைக்கூறிக்கொண்டு அவர் திரும்பிப்போகக் கிளம்பினார்.  உடன் வந்தோர் அங்ஙனம் செய்யவேண்டாம் என்றும், தொடர்ந்து போகலாம் என்றும் வற்புறுத்தினர்.

பாபாவை இங்ஙனம் குறுகிய மனமுள்ளவராக சிந்திப்பதை நிறுத்தும்படியும், அந்த சாது (அதாவது பாபா) கொடிகளையோ, பரிவாரங்களையோ, புகழையோ எள்ளளவும் பொருட்படுத்துபவர் அல்ல என்று கூறினர்.  அன்பாலும், பக்தியாலும் அவரது அடியவர்களும், பக்தர்களுமே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினர்.  முடிவாகப் பயணத்தைத் தொடரும்படி அவரை இணங்கவைத்து ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசிக்கச் செய்தனர்.  பாபாவை முற்றத்திலிருந்து கண்டவுடன் அகமுருகி கண்களில் கண்ணீர் மல்க குரல் நெகிழ அவரது கெடுதலான எண்ணங்களெல்லாம் அவரைவிட்டு அகன்று போயின.  "எங்கே நமது மனம் மிகமிக மகிழ்ந்து களிப்படைகிறதோ, அதுவே நமது இருப்பிடமும், களைப்பாறும் இடமுமாகும்", என்ற அவரது குருவின் மொழிகளை நினைவுகூர்ந்தார்.  பாபாவின் பாதத் தூளிகளில் அவர் புரள விரும்பி பாபாவை நெருங்கியபோது, பாபா கடுங்கோபமடைந்து "எங்களுடைய டம்பமெல்லாம் எங்களுடம் இருக்கட்டும்.  நீ திரும்ப உன் வீட்டிற்குப் போ.  இம்மசூதிக்குள் வந்தாயோ, ஜாக்கிரதை.  மசூதிமேல் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் தரிசனத்தை ஏன் காணவேண்டும்?  இது துறவின் அறிகுறியா?  இங்கே கணமேனும் இருக்காதே" என்றார்.  ஸ்வாமி ஆச்சரியத்தால் திடுக்கிட்டார்.

பாபா தமது உள்ளத்தைப் படித்து அதைப் பேசினார் என உணர்ந்தார்.  எத்தகைய நிறைபேரறிவுடையவர் அவர்!  தாம் ஞானமற்றவர் என்றும், பாபா புனிதமான உயர்ந்தோர் என்றும் அவர் உணர்ந்தார்.  சிலரை பாபா அரவணைப்பதையும், வேறு ஒருவரைக் கையால் தொடுவதையும், மற்றவர்களைத் தேற்றுவதையும், சிலரை நோக்கிப் புன்னகை செய்வதையும், சிலருக்கு உதிப்பிரசாதம் அளிப்பதையும், இவ்வாறாக அனைவரையும் மகிழ்வூட்டி, திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டார்.  தான் மட்டும் ஏன் அவ்வளவு கடுமையாக நடத்தப்பட வேண்டும்?  அதைப்பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்து, தமது அந்தரங்க எண்ணமே பாபாவின் நடத்தையில் எதிரொலிப்பதை உணர்ந்து இதையே ஒரு பாடமெனக் கருதி முன்னேறவேண்டுமென நினைத்தார்.  பாபாவின் கோபம் மறைமுகமான ஆசீர்வாதமே.  பிற்காலத்தில் பாபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை, உறுதிப்படுத்தப்பட்டு பாபாவின் ஒரு முற்றிலும் பற்றுறுதியுள்ள அடியவராக ஆனார் என்று சொல்லத் தேவையில்லை.  

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :

Post a Comment