பாலாராம் துரந்தர் (1878 - 1925):-
பாலாராம் துரந்தர், பம்பாய் சாந்தாகுருசைச் சேர்ந்த பதாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர். அவர் பம்பாய் ஹைகோர்ட்டின் வக்கீலாகவும், சிறிது காலம் பம்பாய் அரசாங்க சட்டப்பள்ளியின் (Law School) தலைவராகவும் பணியாற்றினார். துரந்தர் குடும்பம் முழுவதுமே தெய்வபக்தியும், மத உணர்வும் கொண்டது. பாலாராம் தனது இனத்தாருக்குச் சேவை செய்தார். அதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அதைப் பதிப்பித்தார்.
பின்னர் அவர் ஆன்மிக மத விஷயங்களுக்கு திரும்பினார். கீதையையும், அதற்கான வியாக்கியானமான ஞானேஸ்வரியையும், மற்ற தத்துவ நூல்களையும், நுண்ணியல் கோட்பாட்டு நூல்களையும் ஆழ்ந்து படித்தார். அவர் பண்டரீபுரத்து விட்டோபாவின் பக்தர். பாபாவுடன் 1912ல் தொடர்பு கொண்டார். அதற்கு ஆறு மாதங்களுக்குமுன் பாபுல்ஜி, வாமன்ராவ் என்ற அவரின் இரு சகோதரர்களும் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றனர். வீடு திரும்பி அவர்களின் இனிய அனுபவங்களை பாலாராமுக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தனர். அதன் பின்னர் அவர்களெல்லோரும் சாயிபாபாவைத் தரிசிக்கத் தீர்மானித்தார்கள்.
அவர்கள் ஷீரடிக்கு வரும்முன்னரே பாபா வெளிப்படையாக "இன்று எனது தர்பாரைச் சேர்ந்த பெருபாலோர் வருகிறார்கள்" என உரைத்தார். துரந்தர் சகோதரர்கள் முன்கூட்டியே செய்தி ஏதும் அனுப்பவில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து பாபா கூறிய இக்குறிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர். மற்றவர்கள் எல்லோரும் பாபாவின் முன் வீழ்ந்து வணங்கி அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். பாபா அவர்களிடம் "நான் முன்னரே குறிப்பிட்ட எனது தர்பார் மக்கள் இவர்களே" எனக்கூறி, துரந்தர் சகோதரர்களிடம் "கடந்த அறுபது தலைமுறைகளாக நாம் ஒருவரோடொருவர் உறவுபூண்டு இருக்கிறோம்" என்றார். அச்சகோதரர்கள் எல்லோரும் எளிமையுடனும், பணிவுடனும் உற்றுப் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர். கண்ணீர், தொண்டை அடைத்தல், மயிர்க்கூச்செறிதல் முதலான எல்லா சத்துவ உணர்வுகளும் அவர்களை உருக்கின.
அவர்களெல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குச் சென்று உணவு உட்கொண்டு சிறிது களைப்பாறிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். பாபாவுக்கு, பாலாராம் அமர்ந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை அவரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை வாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார். பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம். ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் அவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது. இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும்.
அவர்கள் சென்றிருந்த தினம் வியாழக்கிழமையாதலால் துரந்தர் நண்பர்கள் சாவடி ஊர்வலத்தை அன்று இரவு கண்டுகளிக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர். சாவடியில் ஆரத்தி நிகழ்ச்சியின்போது பாலாராம் பாபாவின் முகத்தில் பாண்டுரங்கரின் ஜோதியைக் கண்டார். மறுநாள் காலை காகட் ஆரத்தியின்போதும் அதே அபூர்வ நிகழ்ச்சியை, அதாவது அவரின் அன்புக்குரிய தெய்வமான பாண்டுரங்கரின் ஜோதி பாபாவின் முகத்தில் ஒளிர்ந்ததைக் கண்டார்.
பாலாராம் துரந்தர் மராத்தியில் மகாராஷ்ட்ர ஞானி துகாராமின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதினார். ஆனால், அதன் பதிப்பைக் காண அவர் உயிருடனிருக்கவில்லை. பின்னர் 1928இல் அவரது சகோதரர்களால் பிரசுரிக்கப்பட்டது. பாலாராமின் வாழ்க்கையைப்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு அந்நூலின் ஆரம்பத்தில் உள்ளது. பாலாராமைப் பற்றிய மேற்கூறிய தகவல் அதில் முழுவதுமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. (அந்தப் புத்தகத்தின் 6ம் பக்கத்தில் காண்க)
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment