Monday, 13 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 29 - பகுதி 2

No comments

அற்புதக் காட்சி:-

இம்மாதிரியாக எல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது ஒருநாள் இரவு அவள் கணவர் தன் கனவில் அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார்.  அது கீழ்வருமாறு:

அவர் ஒரு பெரிய நகரத்தில் இருக்கிறார்.  போலீஸ் அவரைக் கைதுசெய்து கைகளைக் கட்டி, லாக்-அப்பில் வைத்திருக்கிறது.  போலீஸ் நன்றாக அழுத்திக் கட்டிக்கொண்டிருக்கும்போது ஜெயிலுக்கு வெளியில் சாயிபாபா அமைதியாக நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறார்.  பாபா இவ்வளவு அருகில் இருப்பதைக் கண்டு வெளிப்படையான குரலில் அவரிடம் "உமது புகழைக் கேள்விப்பட்டு நான் உமது திருவடிகளிடையே வந்தேன்.  தாங்களே நேரில் நின்றுகொண்டிருக்கும்போது எனக்கு இந்தக் கேடு ஏன் நிகழ வேண்டும்? என வினவுகிறார். 

பாபா:  உனது கர்மத்தின் விளைவை நீ அனுபவித்தாக வேண்டும்.

அவர்: இந்தப் பிறவியில் இத்தகைய துரதிர்ஷ்டத்தை அளிக்கும் விதத்தில் நான் ஏதும் செய்யவில்லையே?

பாபா:  இப்பிறவியில் இல்லையென்றால் உனது போன பிறவியில் நீ ஏதும் பாவம் செய்திருப்பாய்.

அவர்:  எனது முந்தைய பிறவிபற்றி எனக்கு ஏதும் தெரியாது.  ஆனால் அப்படியே நான் செய்திருப்பதாகவே வைத்துக்கொண்டபோதிலும் தங்கள் சாந்நித்யத்தின் முன்னர், நெருப்பில் வைக்கோல் எரிவதைப்போன்று ஏன் அவைகள் அழிக்கப்படக்கூடாது?

பாபா:  உனக்கு அத்தகைய நம்பிக்கை உண்டா?

அவர்:  ஆம்.

பாபா:  உனது கண்களை மூடு.

அவர் கண்களை மூடியது தான் தாமதம் ஏதோ ஒன்று நிலத்தில் விழுந்து பலத்த அடி விழுவதுபோல் கேட்டது.  அவர் கணைகளைத் திறந்த போது தாம் விடுதலையாகி இருப்பதையும், போலீஸ் இரத்தம் சிந்தி கீழே விழுந்து கிடப்பதையும் கண்டார்.  மிகவும் பீதியடைந்து பாபாவை அவர் பார்த்தார்.

பாபா:  நீ இப்போது நன்றாகப் பிடிபட்டுக்கொண்டாய்.  இப்போது அதிகாரிகள் வந்து உன்னைக் கைது செய்வார்கள். 

அவர்: (கெஞ்சினார்) தங்களைத் தவிர என்னைக் காப்பாற்றுவார் வேறு ஒருவரும் இல்லை.  எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்.

பின்னர் பாபா அவரை மீண்டும் கண்களை மூடச் சொன்னார்.  அவர் அதே மாதிரியாகச் செய்து பின் கண்களைத் திறந்ததும் அவர் ஜெயிலுக்கு வெளியே விடுதலையாகி இருப்பதையும் பாபா அவரருகில் இருப்பதையும் கண்டார்.

பாபாவின் காலடிகளில் அப்போது அவர் வீழ்ந்தார், "இந்த நமஸ்காரத்திற்கும் முந்தைய நமஸ்காரங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா?" என்று பாபா கேட்டார்.  "ஏராளமான வித்தியாசம் இருக்கிறது.  எனது முந்தைய நமஸ்காரங்களெல்லாம் தங்களிடமிருந்து பணம் பெறுவதற்காகச் செய்யப்பட்டன.  ஆனால் இந்த நமஸ்காரமோ தாங்கள் கடவுள் என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறது.  அத்துடன் தாங்கள் முஸ்லீமாக இருந்துகொண்டு ஹிந்துக்களைப் பாழ்படுத்துவதாக நினைத்தேன்.

பாபா:  முஹமதியக் கடவுள் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?

அவர்:  இல்லை.

பாபா:  'பஞ்சா' என்ற உலோகத்தாலான கை அடையாளம் உங்கள் வீட்டில் இல்லையா?  'தாபூத்' (மொஹரம்) சமயத்தில் நீ அதனை வழிபடுவதில்லையா?  கல்யாணம் மற்றும் இதர பண்டிகைக் காலங்களில் நீங்கள் அமைதிப்படுத்தி ஆற்றும் காட்பீபீ என்ற மற்றொரு முஹமதியப் பெண் தெய்வம் உங்கள் வீட்டில் இல்லையா?

அவர் இவைகளையெல்லாம் ஒத்துக்கொண்டார்.

பாபா:  உனக்கு வேறென்ன வேண்டும்?

அவரது குரு ராம்தாஸின் தரிசனத்தைப் பெற அவர் மனதில் அவா ஒன்று எழுந்தது.  அப்போது பாபா பின்னால் திரும்பிப் பார்க்கச் சொன்னார்.  அவர் திரும்பியபோது ராம்தாஸ் நின்றுகொண்டிருந்தார்.  அவர் காலடியில் விழப்போனபோது ராம்தாஸ் மறைந்துவிட்டார்.  பின்னர் அவர் பாபாவை விருப்பத்துடன் "நீங்கள் வயதானவராகத் தோன்றுகிறீர்களே, உங்கள் வயது என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார்.

பாபா:  என்ன! நான் கிழவன் என்றா சொல்கிறாய்?  என்னோடு ஒரு ஓட்டப்பந்தயம் விட்டுப்பார்த்துவிட்டுச் சொல்.

இதைக் கூறிவிட்டு பாபா ஓடத் தொடங்கினார்.  அவரும் பின்னால் ஓடினார்.  ஓடும்போது பாபா அவர்தம் பாதத்தால் எழுப்பிய தூசியில் மறைந்துவிட்டார்.  அவரும் கண்விழித்தார்.

விழித்தபின் கனவுக்காட்சியைப் பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்தார்.  அவரது மனோபாவனை முற்றிலுமாக மாறிவிட்டது.  பாபாவின் பெருமையை அவர் உணர்ந்துகொண்டார்.  இதன்பின் அவரது பறிக்கும் குணமும், சந்தேகமும் மறைந்து ஒழிந்தன.  பாபாவின் பாதாம்புயத்தில் உண்மையான பக்தி அவருக்கு ஏற்பட்டது.  அக்காட்சி கனவுதான்.  ஆனால் கேட்கப்பட்ட வினா விடைகள் மிகவும் விருவிறுப்பானதும் பொருள் செறிந்ததும் ஆகும்.

மறுநாள் காலை எல்லோரும் ஆரத்திக்காக மசூதியில் குழுமியபோது பாபா அவருக்கு இரண்டு ரூபாய் மதிப்புள்ள இனிப்புக்களையும், தம் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் பணமும் எடுத்து பிரசாதமாக அளித்தார்.  மேலும் சில நாட்கள் அவரை அங்கு தங்கச்செய்து, "அல்ல உனக்கு தாராளமாக அளிப்பார்.  உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்" என்று ஆசி கூறினார்.  அங்கு அவர் அதிகமாகப் பணம் பெறவில்லை.  ஆனால் அதற்கும் மேலானவைகளைப் பெற்றார்.  அதாவது பாபாவின் ஆசியை!  அது அவருக்குத் தொடர்ந்து நன்மையளித்து வந்தது.  பின்னால் அக்கோஷ்டிக்கு ஏராளமான பணம் கிடைத்தது.  அவர்களது பிரயாணம் வெற்றிகரமாக முடிவடைந்தது.  அவர்கள் பிரயாணத்தின்போது எவ்வித அசௌகரியமோ, தொல்லையோ ஏற்படவில்லை.  பாபாவின் அருளால் எய்திய ஆனந்தத்தையும், ஆசிகளையும் நினைந்தவாறே பத்திரமாகவும், சௌக்கியமாகவும் வீடு திரும்பினர்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment