பாபாவை மேகா இரண்டு இடங்களில் வழிபட்டான். மசூதியில் நேரடியாகவும், வாதாவில் நானா சாஹேப் சாந்தோர்கர் அளித்த பாபாவின் பெரிய படத்தின் மூலமாகவும் பூஜித்து வந்தான். இதை அவன் ஓராண்டுகாலம் செய்துவந்தான். பின்னர் அவனது பக்தியை மெச்சி அவனது நம்பிக்கையை உறுதி செய்வதற்காக பாபா அவனுக்கு ஒரு காட்சி நல்கினார். ஒருநாள் அதிகாலையில், மேகா இன்னும் படுக்கையைவிட்டு எழாமலிருக்கையில் ஆனால் கண்கள் மூடியிருந்த நிலையில் (விழிப்புடன்), பாபாவின் உருவத்தை அவன் தெளிவாகக் கண்டான்.
அவன் விழித்திருப்பதை அறிந்து பாபா அவன்மீது அக்ஷதையை வீசியெறிந்து "மேகா! திரிசூலம் வரை" என்று உரைத்து மறைந்துவிட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவன் ஆவலுடன் கண்களைத் திறந்தான். ஆனால் அங்கு பாபாவைக் காணவில்லை. அக்ஷதை மட்டும் அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதைக் கண்டான். பின்னர் பாபாவிடம் சென்று காட்சியைப்பற்றிக் கூறி ஒரு திரிசூலம் வரைவதற்கு அவரின் இசைவையும் கேட்டான்.
பாபா: திரிசூலம் வரையும்படி நான் உன்னைக் கேட்ட மொழிகளை நீ கேட்கவில்லையா? எனது மொழிகள் எப்போதும் பொருள் என்னும் சூல் கொண்டிருக்கின்றன.ஒருபோதும் வேருமையானதல்ல.
மேகா: என்னைத் தாங்கள் எழுப்பியதாகக் கருதினேன். ஆனால் எல்லாக் கதவுகளும் மூடியிருந்ததால் அதை ஒரு காட்சியாக நினைத்தேன்.
பாபா: நான் நுழைவதற்கு எனக்கு எவ்விதக் கதவும் தேவையில்லை. எனக்கு எவ்வித உருவமோ, நீளமோ கிடையாது. எப்போதும் எங்கும் நான் வசிக்கிறேன். என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டதைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்.
மேகா, வாதாவுக்குத் திரும்பிவந்து பாபாவின் படத்தருகே சிவப்பு திரிசூலம் ஒன்றைச் சுவரில் வரைந்தான். மறுநாள் புனேவில் ஒரு ராம்தாஸி பக்தர் வந்து பாபாவை வணங்கி அவருக்கு ஒரு லிங்கத்தைச் சமர்ப்பித்தார். இச்சமயத்தில் மேகாவும் அவ்விடம் வந்தான். பாபா அவனிடம், "பார், சங்கர் வந்துவிட்டார். இப்போது அவரைக் காப்பாற்று (அதாவது வழிபடு). சூலத்தை, லிங்கம் உடனே தொடர்ந்து வந்தது கண்டு மேகா அதிசயமடைந்தான். வாதாவிலும் கூட காகா சாஹேப் தீஷித் குளித்தபின் கையில் துவட்டிய துண்டுடன் நின்று சாயியை நினைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மனக்காட்சியில் ஒரு லிங்கத்தைக் கண்டார். இது குறித்து அவர் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கையில் மேகா அவரிடம் வந்து, பாபா தனக்கு பரிசளித்த லிங்கத்தை அவரிடம் காட்டினான். தான் சில நிமிட நேரங்களுக்கு முன் காட்சியில் தரிசித்த லிங்கம் இதனுடன் அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு அவர் மிகவும் மகிழ்வுற்றார். சில நாட்களில் திரிசூலம் வரைவதும் முடிவடைந்தது. பாபா அந்த லிங்கத்தை, மேகா வழிபட்டுக்கொண்டிருந்த பெரிய படத்தின் அருகில் ஸ்தாபித்தார். சிவா பூஜை செய்வது மேகாவுக்கு மிகவும் பிடித்தமானது. திரிசூலம் வரையச் செய்வித்தும், அதனருகில் லிங்கத்தை ஸ்தாபித்தும் பாபா அவனது நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தார்.
பல ஆண்டுகள் தொடர்ந்த சேவைக்குப் பின்னர், ஒவ்வொரு நாள் மத்தியானமும், மாலையும் வழக்கமான வழிபாட்டையும், ஆரத்தியையும் செய்த பின்பு, 1912ல் மேகா சிவபதம் சேர்ந்தான். பின்னர் பாபா தனது கைகளை அவனது உடல்மீது தடவி, "இவன் என் உண்மை பக்தன்" என உரைத்தார். தமது சொந்த செலவிலேயே வழக்கமான சாப்பாடு பிராமணர்களுக்குச் செய்துவைக்க ஆணையிட்டார். இது காகா சாஹேப் தீஷித்தால் நிறைவேற்றப்பட்டது.

No comments :
Post a Comment