ஜாம்நேர் அற்புதம்:-
சுமாராக 1904-05ம் ஆண்டில், நானா சாஹேப் சாந்தோர்கர் ஷீர்டியிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள கான்தேஷ் ஜில்லாவிலுள்ள ஜாம்நேரின் மம்லதாராக இருந்தார். அவரது மகளான மைனாதாயி கருவுற்றுப் பிரசவிக்க இருந்தாள். அவளது பிரசவம் மிகவும் கஷ்டமாகி இரண்டு மூன்று நாட்களாக பிரசவ வேதனையால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாள். நானா சாஹேப் எல்லாவிதப் பரிகாங்களைச் செய்ய முயற்சித்தும் பலனில்லை. அவர் பாபாவை நினைவுகூர்ந்து அவரின் உதவியைத் தொழுது வேண்டினார். அப்போது ஷீர்டியில் பாபுகீர்புவா என்று பாபா கூப்பிடும் ராம்கீர்புவா என்பவர் காந்தேஷிலுள்ள தமது சொந்த ஊருக்குப் போக விரும்பினார்.
பாபா அவரைக் கூப்பிட்டு, அவர் வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள ஜாம்நேரில் சிறிது தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு செல்லுமாறும் நானா சாஹேபிடம் உதியையும், ஆரத்தியையும் அளிக்கும்படியும் சொன்னார். ராம்கீர்புபா தன்னிடம் இரண்டே ரூபாய்கள் தான் இருப்பதாகவும் ஜல்காவன் வரையிலுள்ள ரயில்வே கட்டணத்துக்கு மட்டுமே இது போதுமானது என்றும், ஜல்காவனில் இருந்து முப்பது மைல் தூரத்திலுள்ள ஜாம்நேர் வரை போவது தம்மால் இயலாது என்றும் கூறினார். இதற்கு பாபா, எல்லா ஏற்பாடுகளும் செய்யப்ப்படுமாதலால் அவரைக் கவலைப்பட வேண்டாம் என்றும் உறுதியளித்தார்.
பின்னர் மாதவ் அட்கரால் புனையப்பட்ட புகழ்பெற்ற ஆரத்திப்பாடலை (அதன் மொழிபெயர்ப்பு இறுதியில் அளிக்கப்படுகிறது) ஷாமாவிடம் எழுதச்சொல்லி, அதன் பிரதியை உதியுடன் ராம்கீர்புபாவிடம் கொடுத்து, நானா சாஹேபிடம் கொடுக்கும்படி கூறினார். பின்னர் ராம்கீர்புவா பாபாவின் மொழிகளை நம்பி ஷீர்டியைவிட்டுப் புறப்பட்டு ஜல்காவனை அதிகாலை இரண்டு மணியளவில் அடைந்தார். அப்போது அவரிடம் இரண்டே அணாக்கள்தாம் மீதமிருந்தன. மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தார். அவரது பெருஞ்சுமை தணிவுறும் வகையில், "யார் ஷீர்டியைச் சேர்ந்த பாபுகீர்புவா?" என்று யாரோ கூப்பிடுவது கேட்டது. பின்னர் அவர் அவனிடம் சென்று, தாமே பாபுகீர்புவா என்று கூறினார். தாம் நானா சாஹேபிடமிருந்து வருவதாகவும் அவருடைய வேலையாள் என்றும் கூறி நல்ல ஜோடிக் குதிரைகளுடன் கூடிய ஒரு பிரமாதமான வண்டியிடம் அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரும் அதில் பிரயாணம் செய்தார்கள். வண்டி வேகமாக ஓடியது. அதிகாலையில் அவர்கள் ஓடைக்கரையொன்றை அடைந்தனர். வண்டியோட்டி குதிரைகளைத் தண்ணீர் குடிக்க அழைத்துச் சென்றான். பியூன், ராம்கீர்புவாவை சிறிது உணவு உட்கொள்ளுமாறு கூறினான். பியூனின் தாடி, மீசை இவைகளையெல்லாம் ராம்கீர்புவா பார்த்துவிட்டு அவனை முஹமதியனாகச் சந்தேகப்பட்டு எவ்விதச் சிற்றுண்டியையும் அவனிடமிருந்து பெற விருப்பமில்லாதவராய் இருந்தார். ஆனால் வேலையாளோ தாம் ஒரு ஹிந்து, கார்வாலைச் சேர்ந்த க்ஷத்திரியன் என்றும், நானா சாஹேப் இந்த சிற்றுண்டிகளையெல்லாம் அனுப்பியிருந்ததாகவும் இதை ஏற்றுக்கொள்வதில் எவ்விதக் கஷ்டமோ, சந்தேகமோ வேண்டியதில்லையென்றும் கூறினான். பின்னர் அவர்கள் இருவரும் சிற்றுண்டி உண்டு மீண்டும் புறப்பட்டனர். பொழுது விடியும்போது ஜாம்நேரை அடைந்தனர். ராம்கீர்புவா சிறுநீர் கழிக்கச் சென்று சிலநிமிடங்களில் திரும்பி வந்தார். அப்போது குதிரைவண்டியையும், வண்டியோட்டியையும் காணாது பேச்சற்றவரானார்.
பின்னர் அருகிலுள்ள கச்சேரிக்குச் சென்று விசாரித்து மம்லதார், வீட்டில் இருப்பதை அறிந்துகொண்டார். நானா சாஹேபின் வீட்டுக்குச் சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பாபாவின் உதியையும், ஆரத்தியையும் அளித்தார். இத்தருணத்தில் மைனாதாயின் விஷயம் மிகமிகத் தீவிரமடைந்து வீட்டிலிருந்தோர் அனைவரும் அவளைக் குறித்து ஆழ்ந்த கவலையுற்றனர். நானா சாஹேப் தனது மனைவியை அழைத்து உதியைத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கும்படியும், ஆரத்தியைப் பாடும்படியும் கேட்டுக்கொண்டார். பாபாவின் உதவி, உற்ற சமயத்தில் கிடைத்திருக்கிறதென அவர் நினைத்தார். சில நிமிடங்களில் பிரசவம் பத்திரமாக ஆனது என்றும், கண்டம் கடந்து போய்விட்டது என்றும் பிரசவ அறையிலிருந்து செய்தி கிடைத்தது. ராம்கீர்புவா நானா சாஹேபிடம், பியூன், வண்டி, சிற்றுண்டி முதலியவைகளுக்காக நன்றி செலுத்தியபோது நானா பெருமளவு ஆச்சரியப்பட்டார். ஏனெனில் அவர் ஸ்டேஷனுக்கு ஒருவரையும் அனுப்பவில்லை. ஷீர்டியிலிருந்து எந்த ஆள் வருவதும் அவருக்குத் தெரியாது.
தாணேவைச் சேர்ந்த திரு B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதார் இதைப்பற்றி நானாவின் புதல்வனான பாபுராவ் சாந்தோர்கரிடமும், ஷீர்டியைச் சேர்ந்த ராம்கீர்புவாவிடமும் விசாரித்துவிட்டு தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொண்ட பின்பு, சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 13, எண்.11,12 &13) ஒரு பகுதி உரைநடையாகவும், ஒரு பகுதி கவிதையாகவும் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
சகோதரர் B.V.நரசிம்மஸ்வாமியும் (1) மைனாதாயி, (2) பாபு சாஹேப் சாந்தோர்கர், (3) ராம்கீர்புவா இவர்களிடமிருந்து 1.6.1936, 16.9.1936, 1.12.1936 ஆகிய தேதிகளிடப்பட்ட வாக்குமூலத்தைப் பெற்று "அடியவர்களின் அனுபவங்கள்" பகுதி Ⅲல் பதிப்பித்து இருக்கிறார். ராம்கீர்புவாவின் வாக்குமூலம் கீழ்வருமாறு.
"ஒருநாள் பாபா என்னை அவரிடம் அழைத்து, உதிப்பொட்டலம் ஒன்றையும், பாபாவின் ஆரத்தியின் பிரதி ஒன்றையும் கொடுத்தார். அச்சமயம் நான் கான்தேஷ் போகவேண்டியிருந்தது. பாபா என்னை ஜாம்நேர் போகும்படியும், ஆரத்திப்பாடலையும், உதியையும் ஜாம்நேரில் நானா சாஹேப் சாந்தோர்கரிடம் கொடுக்கும்படியும் கூறினார். என்னிடம் இருப்பதெல்லாம் ரூ.2 என்றும் கோபர்காவனிலிருந்து ஜல்காவன், பின்னர் வண்டியில் ஜல்காவனிலிருந்து ஜாம்நேர் செல்வதற்கும் அது எங்ஙனம் போதும் என்று நான் அவரிடம் கேட்டேன். பாபா "கடவுள் கொடுப்பார்" என்று கூறினார்.
அன்று வெள்ளிக்கிழமை. நான் உடனே புறப்பட்டேன். மன்மாட் இரவு 7:30 மணிக்குச் சென்றேன். பின்னர் ஜல்காவனிற்கு காலை 2:45க்குச் சென்றேன். அந்த நாட்களில் பிளேக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஜாம்நேர் செல்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று நான் கண்டுபிடிக்க வேண்டியதிருந்தது. காலை சுமார் 3 மணியளவில் பூட்ஸ், டர்பன், நல்ல உடைகளுடன் கூடிய ஒரு வேலையாள் என்னிடம் வந்து என்னை வண்டியில் அமர்த்தி ஓட்டிச்சென்றான். நான் திகிலுடன் இருந்தேன். வழியில் பாகூரில் சிற்றுண்டி உட்கொண்டேன். ஜாம்நேரை நாங்கள் அதிகாலை அடைந்தோம். நான் சிறுநீர் கழிக்கச் சென்று திரும்பியபோது குதிரைவண்டியைக் காணவில்லை. வண்டிக்காரனும் மறைந்துபோனான்".
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment