இந்த அத்தியாயம் ஷாமா காசி, பிரயாகை, கயா முதலிய இடங்களுக்குப் பயணம் செல்வதையும், பாபா எங்ஙனம் அவருக்கு முன்னால் சென்று அங்கிருந்தார் என்பதையும் விளக்குகிறது. மேலும் இரண்டு ஆடுகளைப்பற்றிய பாபாவின் பழைய நினைவுகளையும் விவரிக்கிறது.
முன்னுரை:-
ஓ! சாயி, தங்களது பாதங்களும் தங்களைப் பற்றிய நினைவுகளும் தங்களது தரிசனமும் புனிதமானவை. அவை எங்களை கர்ம தளைகளிலிருந்து விடுவிக்கிறது. எங்களுக்குத் தங்கள் ரூபம் தெரியாமலிருந்தாலும், இப்போதும் அடியவர்கள் தங்களை நம்பினால் பிரத்தியட்சமான அனுபவங்களை உடனே தங்களிடமிருந்து பெறுகிறார்கள். கட்புலனுக்குத் தென்படாத சூட்சுமமான நூலால் தாங்கள் அருகிலும், தொலைவிலுமுள்ள பக்தர்களைத் தங்கள் பாதகமலங்களுக்கு ஈர்த்து இழுத்து, அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல அரவணைக்கிறீர்கள். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடியவர்கள் அறியவில்லையென்றாலும், தாங்கள் அவர்களின் அருகிலேயே இருந்து அவர்களுக்கு உதவி புரிந்து ஆதரிக்கிறீர்கள் என்பதைக் கடைமுடிவாக அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை இழுக்கிறீர்கள்.
தங்கள் அஹங்காரத்தின் காரணமாக புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் இவர்களெல்லோரும் சம்சாரக் குழியில் விழுகிறார்கள். ஆனால் மிகவும் ஏழ்மையான, சாதாரண பக்தர்களைத் தங்கள் சக்தியினால் காப்பாற்றுகிறீர்கள். ஆன்மஸ்வரூபமாகவும் யாரும் அறியாதபடியும் எல்லா லீலைகளையும் புரிந்துவிட்டு அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் தோற்றமளிக்கிறீர்கள். தாங்களே செயல்களைச் செய்கிறீர்கள். ஆனால் செய்யாதவரைப் போன்று காட்சியளிக்கிறீர்கள். ஒருவருக்கும், ஒருபோதும் தங்கள் வாழ்க்கையைப்பற்றித் தெரியாது. எனவே எங்களது பாவங்களைப் போக்கும் எங்களுக்குண்டான சிறந்த வழி, மனம், மொழி, மெய் இவற்றால் தங்கள் பாதாரவிந்தங்களைச் சரணடைந்து தங்களது நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்வதேயாகும். அடியவர்களின் ஆசைகளைத் தாங்கள் பூர்த்தி செய்கிறீர்கள். பற்றற்றவர்களுக்குப் பேரானந்தப் பெருநிலையை அளிக்கிறீர்கள். தங்கள் இனிமையான பெயரை ஸ்மரணம் செய்வதே அடியவர்களுக்கு மிகமிக எளிதான சாதனமாகும்.
இச்சாதனங்களால் ராஜச, தாமசப் பண்புகள் மறைந்து சத்துவ குணமும், நேர்மையும் முக்கியத்துவம் அடைகின்றன. விவேகம், பற்றின்மை, ஞானம் முதலியவையும் தொடர்கின்றன. பின்னர் நாம், நமது ஆன்மாவுடனும், குருவிடமும் ஒன்றிவிடுவோம். (இரண்டும் ஒன்றே) இதுவே குருவிடம் பூரண சரணாகதி அடைவது என்பதாகும். நமது மனம் அமைதியும், சாந்தியும் பெறுவதே இதற்கான ஒரே நிச்சயமான அடையாளமாகும். இச்சரணாகதி, பக்தி, ஞானம் இவற்றின் பெருமை தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் அமைதி, பற்றின்மை, புகழ், முக்தி முதலியவை அதைத் தொடர்ந்து வருகின்றன.
ஒரு அடியவரை பாபா ஏற்றுக்கொண்டால், அவரை அவர் தொடர்கிறார். இரவும், பகலும், வீட்டிலும், வெளியிலும் அவருடனேயே இருக்கிறார். அவர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அறிவுக்கெட்டாத வகையில் ஏதாவது ஒரு ரூபத்தில் அவருக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment