ஹேமத்பந்தின் ஹோலிப்பண்டிகை விருந்து:-
பாபா தமது சித்திர ரூபத்தில் தோன்றி தமது அடியவரின் ஆவலைப் பூர்த்தி செய்தார் என்பதைக் கூறும் மற்றொரு கதையைக் காண்போம்.
1917ம் ஆண்டு பங்குனி மாதம் பௌர்ணமி ஹோலிப்பண்டிகையன்று காலை ஹேமத்பந்த்க்கு ஒரு காட்சி தோன்றியது. பாபா அவரது கனவில் நன்றாக உடையணிந்த ஒரு துறவியைப்போன்று தோன்றி அவரை எழுப்பி அன்று உணவுக்காக அவரிடம் வருவதாகக் கூறினார். கண்விழித்து எழுந்த அவர் துறவியையோ அல்லது சாயியையோ காணவில்லை. ஆனால் அவர் கனவு நினைவுகூரத் தொடங்கியபோது, கனவில் துறவி கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகத்தில் கொணர்ந்தார்.
ஏழு ஆண்டுகளாக பாபாவுடன் அவர் தொடர்புடையவராக இருந்தாலும், பாபாவையே எப்போதும் தியானித்தபோதிலும் பாபா உணவுக்காகத் தம் வீட்டுக்கு வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் பாபாவின் மொழிகளால் மனம் மகிழ்ந்து தமது மனைவியிடம் சென்று அன்று ஒரு புனிதமான நாளாக இருப்பதால் ஒரு துறவி விருந்தாளி உணவுக்காக வருகிறார் என்றும், அதிகமான உணவு தயார் செய்யவேண்டுமென்றும் கூறினார். அவள் விருந்தாளியைப் பற்றி யார்? எப்போது வருகிறார்கள்? எனக் கேட்டாள். தமது மனைவியை அலைக்கழிக்காத நியதியின் பொருட்டும், தப்பு எண்ணத்தைத் தவிர்த்தற்காகவும் உண்மையை அதாவது கனவினைப் பற்றி அவளிடம் கூறினார்.
பாபா, அவ்விடத்திற்கு (பாந்த்ரா) ஷீர்டியிலிருந்து அங்குள்ள நேர்த்தியான உணவை விடுத்து சாதாராணமான தங்கள் வீட்டு உணவை ஏற்க வருவாரா என்று அவள் ஐயத்துடன் கேட்டாள். ஹேமத்பந்த் அவளுக்கு, பாபா நேரிடையாக வரமாட்டார் என்றும், ஒரு விருந்தினர் ரூபத்தில் வருவார் என்றும் உறுதியளித்து இன்னும் சற்று அதிகமாக சாதம் வடிப்பதினால் அவர்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் கூறினார்.
இதன்பின்னர் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மதியத்திற்குள் அது தயாராகியது. ஹோலி வழிபாடும் செய்யப்பெற்று இலை போடப்பட்டது. அதைச் சுற்றிலும் கோலமிடப்பட்டது. நடுஸ்தானம் விருந்தாளிக்கெனவும் மற்றவர்களுக்கு இரண்டு வரிசைகளிலும் இலைகள் போடப்பட்டன. குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும், மகன்கள், பேரன்கள், புத்திரிகள், மருமகன்கள் அனைவரும் வந்து தத்தமது இடங்களில் அமர்ந்தனர். பல்வேறுவித உணவுவகைகள் பரிமாறப்பட்டன. இது நிகழ்ந்துகொண்டிருக்கையில் அனைவரும் விருந்தாளிக்காக எதிர்பார்த்திருந்தனர்.
மதியம் கடந்துவிட்டபோதிலும் ஒருவரும் வரவில்லை. பின்னர் கதவு சாத்தப்பெற்று தாளிடப்பட்டது. பின் அன்னசுத்தி (நெய்) விடப்பட்டது. இதுவே உண்ண ஆரம்பிப்பதற்கு அடையாளம். அக்கினிக்கு முறையான சமர்ப்பணமும், கிருஷ்ணருக்கு நைவேத்தியமும் கூட ஆயிற்று. குடும்பத்தினர் உண்ண ஆரம்பிக்கும் அதே தறுவாயில் வாசலில் காலடிச் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஹேமத்பந்த் உடனே சென்று கதவைத் திறந்தார். அலி முகமது, மௌலான இஸ்மு முஜாவர் ஆகிய இருவரைக் கண்டார். உணவு தயாராக இருப்பதையும், குடும்பத்தினர் உண்ணத் தயாராக இருப்பதையும் அவ்விருவரும் கண்டு ஹேமத்பந்த்திடம் மிகுந்த வருத்தம் தெரிவித்துத் தங்கள் குறுக்கீட்டுக்கு மன்னிப்புக் கோரினர்.
அவர்கள், "எங்களுக்காக நீங்கள் இருக்கையைவிட்டு எழுந்து ஓடி வந்திருக்கிறீர்கள். மற்றவர்கள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே தயவுசெய்து இந்த உங்கள் பொருளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாங்கள், அதன் வியத்தகு கதை முழுவதையும் தங்களுக்குச் சௌகரியப்ப்படும்போது பின்னர் விவரிப்போம்" என்று கூறினார்கள். இவ்வாறு கூறிக்கொண்டே பழைய செய்தித்தாள் ஒன்றை மேசையின்மேல் வைத்தார்கள். ஹேமத்பந்த் அதனைப் பிரித்துப் பார்க்கையில், அவருக்குப் பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் விளைவிக்கும் வகையில் சாயிபாபாவின் பெரிய அழகிய படம் (Bas-Relief) ஒன்றைக் கண்டார். உடம்பு முழுவதும் மயிர்க்கூச்செறிய, கண்களில் நீர்வழிய மிகவும் மனமுருகி தனது தலையைத்தாழ்த்தி படத்திலுள்ள பாபாவின் பாதங்களில் வைத்துக்கொண்டார். பாபா இத்தகைய ஆச்சர்ய லீலையால் தம்மை ஆசீர்வதித்திருப்பதாக நினைத்தார். அறிவதற்கு ஆர்வம் மேலிட, அப்படத்தை அவர்கள் எப்போது வாங்கினார்கள் என்று கேட்டார்.
அலி முஹமது தாம் அதை ஒரு கடையிலிருந்து வாங்கியதாகவும் எல்லோரும் காத்திருப்பதால் அப்படத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் பிறிதொரு சமயம் சொல்லுவதாகவும் மற்றவர்களுடன் அவரை உண்ணச் செல்லுமாறும் கூறினார். ஹேமத்பந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பிவிட்டுச் சாப்பிட வந்தார். பின்னர் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் படம் வைக்கப்பட்டு நைவேத்தியம் உரியமுறையில் செய்தான பிறகு அனைவரும் உண்ணத் தொடங்கினார்கள். படத்திலுள்ள அழகிய ரூபத்தைக்கண்டு அனைவரும் மிகமிக சந்தோஷமடைந்தனர். இவையெல்லாம் எங்ஙனம் நிகழ்ந்தன என்பது குறித்து வியந்தனர்.
ஹேமத்பந்த்தின் கனவில் கூறிய மொழிகளை பாபா இவ்வாறாக நிறைவேற்றினார். எல்லா விவரங்களுடன் கூடிய அப்படத்தின் கதை அதாவது எங்ஙனம் அலி முஹமது அதை பெற்றார்? ஏன் அதை அவர் வாங்கினார்? ஹேமத்பந்த்திடம் பின் ஏன் அதைக் கொடுத்தார்? என்பவை எல்லாம் அடுத்த அத்தியாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

No comments :
Post a Comment