Wednesday, 22 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 43 - பகுதி 1

No comments

முன்னேற்பாடு:-

ஒருவன் மரணத்தறுவாயில் இருக்கும்போது அவனது போகும்வழி இயற்கையாகவும், எளிதாகவும் இருக்கும்பொருட்டு, உலக விஷயங்களிலிருந்து அவன் மனதை மீட்டு ஆன்மிக விஷயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் எண்ணத்துடன் சில மத சம்பந்தமான நூல்கள் பராயணம் செய்யப்படுவது இந்துக்களிடையே உள்ள பொதுவான வழக்கமாகும்.  ஒரு அந்தண ரிஷியின் புதல்வனால் பரீக்ஷித்து மஹாராஜன் சாபமிடப்பட்டு மரணத்தறுவாயில் இருந்த நாட்களில் மாபெரும் ரிஷியான சுகர் புகழ்பெற்ற பாகவத புராணத்தை (சப்தாஹம்) அவருக்கு விளக்கினார்.

இப்பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இன்னும் பல புனிதநூல்களும் மரணத்தறுவாயில் இருப்பவர்களிடம் வாசிக்கப்படுகிறது.  கடவுளின் அவதாரமான பாபாவுக்கு அத்தகைய உதவி எதுவும் தேவையிருக்கவில்லை.  ஆனால், மக்களுக்கு வழிகாட்டும் பொருட்டாக இவ்வழக்கத்தை அவர் பின்பற்றினார்.  தாம் விரைவில் காலமடையப் போவதை அறிந்த அவர், வஸே என்பாரை தம்மிடம் ராமவிஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார்.  வஸே வாரமொருமுறை அதைப் படித்தார்.பின்னர் இரவும், பகலும் அதையே படிக்கும்படி பாபா கேட்டுக்கொண்டார்.  அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார்.  இவ்வாறாக பதினோரு நாட்கள் சென்றன.  பின்னர் மீண்டும் மூன்று நாட்கள் படித்துக் களைப்படைந்து விட்டார்.  எனவே பாபா அவரைப்போக அனுமதித்துவிட்டு தாமே அமைதியாக இருந்துகொண்டார்.  தமது ஆத்மபோதத்திலேயே மூழ்கினவராய் தமது கடைசி வினாடிக்காகக் காத்திருந்தார். 

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே தமது காலை சஞ்சாரத்தையும், பிக்ஷாதனம் பெறச்செல்லும் நியமத்தையும் அவர் நிறுத்திவிட்டு மசூதியிலேயே தங்கிவிட்டார்.  தமது இறுதி வினாடிவரை உணர்வுடன் இருந்து தமது அடியவர்களை மனமுடைய வேண்டாமென்று உபதேசித்துக்கொண்டிருந்தார்.  தாம் சமாதி அடையவுள்ள சரியான தருணத்தை அவர் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை.  மசூதியில் தினந்தோறும் அவருடன் காகா சாஹேப் தீஷித்தும், பூட்டியும் மதிய உணவு உண்டனர்.  ஆனால் அன்று (அக்டோபர் 15) ஆரத்திக்குப் பின்னர் பாபா அவர்களை, தங்கள் இருப்பிடங்களுக்குச் சாப்பிடச் செல்லும்படி பாபா கூறினார் என்றாலும் லக்ஷ்மிபாய் ஷிண்டே, பாகோஜி ஷிண்டே, பஜாஜி, லக்ஷ்மண் பாலா ஷிம்பி, நானா சாஹேப் நிமோண்கர் போன்றவர்கள் அங்கேயே இருந்து கொண்டனர்.

ஷாமா கீழே படிகளில் அமர்ந்திருந்தார்.  லக்ஷ்மிபாய் ஷிண்டேவுக்கு ரூ.9 கொடுத்தபின்பு பாபா தமக்கு மசூதியில் சௌகரியமாய் இல்லையென்றும், பூட்டியினுடைய தகடி வாதாவுக்கு (கல் கட்டிடம்) எடுத்துச் செல்லப்படவேண்டும் என்றும், அங்கு தாம் நலமுற்றுவிடப் போவதாகவும் கூறினார்.  இக்கடைசி மொழிகளை உதிர்த்துவிட்டு பஜாஜி கோதேயின் மேனியில் சாய்ந்துகொண்டு உயிர் நீத்தார்.  அவரது மூச்சு நின்றுவிட்டதை பாகோஜி கவனித்து கீழே அமர்ந்திருந்த நானா சாஹேப் நிமொண்கரிடம் கூறினார்.  நானா சாஹேப் சிறிது தண்ணீர் கொணர்ந்து பாபாவின் வாயில் ஊற்றினார்.  அது வெளியே வந்துவிட்டது.

பின்னர் அவர் பலமாக "ஓ! தேவா" என்று கதறினார்.  பாபா சிறிதே தமது கண்களைத் திறந்து "ஆ!" என்று மெல்லிய குரலில் கூறுவதைப் போன்றிருந்தது.  ஆனால், பாபா தமது பூத உடலை க்ஷேமமாக நீத்துவிட்டார் என்பது சீக்கிரமாக நிதர்சனமாயிற்று.பாபா காலமான செய்தி ஷீர்டி கிராமத்தில் காட்டுத்தீபோல் பரவியது.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யாவரும் மசூதிக்கு ஓடி வந்து இந்த இழப்பின் துயரைப் பல்வேறு விதங்களில் வெளியிட்டனர்.  சிலர் பலமாகக் கதறினர்.  சிலர் தெருவில் உருண்டு புரண்டனர்.  சிலர் மூர்ச்சித்து விழுந்தனர்.  எல்லோருடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாக நீர் வழிந்தது.  அனைவரும் வருத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

சிலர் சாயிபாபாவின் மொழிகளை நினைவூட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.  வரப்போகும் காலங்களில் தாம் ஒரு எட்டுவயதுப் பையனாகத் தோன்றப்போவதாக மஹராஜ் (சாயிபாபா) தம் பக்தர்களிடம் தெரிவித்ததாகச் சிலர் கூறினர்.  இவைகள் ஞானியின் மொழிகள்.  எனவே, இது குறித்து யாரும் ஐயுறத் தேவையில்லை.  ஏனெனில் கிருஷ்ணாவதாரத்தில் சக்ரபாணி (மகாவிஷ்ணு) இதே காரியத்தைத்தான் நிகழ்த்தினார்.  சிறையிலிருந்த தேவகியின்முன் கிருஷ்ணர் ஒளி பொருந்திய நிறத்தினராகவும், தமது நான்கு கரங்களிலும் ஆயுதங்கள் தரித்த எட்டுவயது பையனாகவும் தோற்றமளித்தார்.   

அந்த அவதாரத்தின்போது கிருஷ்ணர் பூமியின் பாரத்தைக் குறைத்தார்.  இந்த அவதாரம் தமது பக்தர்களின் முன்னேற்றத்திற்கானது.  எனவே ஐயத்துக்குரிய காரணம் எங்கேயுள்ளது?  ஞானிகளின் வழியோ உண்மையான அறிவெல்லை கடந்தது.  சாயிபாபாவுக்குத் தமது பக்தர்களுடன் உண்டான தொடர்பு இந்த ஒரு தலைமுறைக்குரியது மட்டுமன்று அது கடந்த 72 ஜென்மங்களின் தொடர்பாகும்.  இத்தகைய அன்புப் பிணைப்புக்களை உருவாக்குதற் பொருட்டே மஹராஜ் (சாயிபாபா) திக்விஜயம் செய்யச் சென்றுள்ளார் போலத்தோன்றுகிறது.  அவர் மீண்டும் விரைவில் திரும்பி வருவார் என்று அவர் பக்தர்கள் உறுதியான நம்பிக்கை பூண்டுள்ளனர்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment