Monday, 13 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 28 - பகுதி 7

No comments

கங்கா ஸ்நானம்:-  

ஒரு மகர சங்கராந்தி தினத்தன்று பாபாவின் உடலில் சந்தானம் பூசி அவரைக் கங்கை நீரால் குளிப்பாட்ட மேகா விரும்பினான்.  இந்த செயல்முறைக்கு உடன்பட முதலில் பாபா மனதில்லாதவராய் இருந்தார்.  ஆனால் அவனது தொடர்ந்த வேண்டுதல்களின் காரணமாக சம்மதித்தார்.  கோமதி ஆற்றிலிருந்து புனிதநீர் கொணர்வதற்காக அவன் 24 மைல் நடந்து போய்வர வேண்டும்.  அவ்வாறு நீர் கொண்டுவந்து மத்தியான ஸ்நானத்திற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, பாபாவை அதற்காகத் தயாராய் இருக்கும்படி கேட்டுக்கொண்டான்.

ஒரு பக்கிரி என்ற முறையில் தனக்கும் கங்கை நீருக்கும் ஒன்றும் தொடர்பு இருக்கவில்லை என்றுகூறி மீண்டும் அவனிடம் இந்தக் குளியலிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டினார்.  ஆனால் மேகா அதற்குச் செவி சாய்க்கவில்லை.  கங்கை நீர் அபிஷேகத்தால் சிவபெருமான் மகிழ்கிறார் என்று அவனுக்குத் தெரியும்.  அந்த நல்ல நாளன்று அவனது சிவனுக்கு (பாபா) அந்த அபிஷேகத்தைச் செய்தாக வேண்டும்.  பின்னர் பாபா சமதித்துக் கீழிறங்கி வந்து ஆசனப் பலகையில் அமர்ந்து தலையை முன்னால் நீட்டிக்கொண்டு "ஓ! மேகா, இதையாவது தயவு செய்வாயாக, தலையே உடம்பின் பிரதான பாகமாதலால் தலைமேல் மட்டும் நீர் ஊற்று.  உடம்பு முழுவதும் குளிப்பதற்கு அது சமமாகும்" என்றார்.  "அப்படியே என்றான் மேகா.  அபிஷேக கலயத்தை மேலே தூக்கி தலையின்மேல் ஊற்றத் தொடங்கினான்.  ஆனால் அப்படி செய்துகொண்டிருக்கும்போது அன்பால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு "ஹர்... ஹர்... கங்கே!" என்று கூவிக்கொண்டே அவர் உடல் முழுவதும் நீரை ஊற்றிவிட்டான்.  கலயத்தைப் புறத்தில் வைத்துவிட்டுப் பாபாவைப் பார்க்கத் தொடங்கினான்.  அவனது வியப்புக்கும் ஆச்சரியத்துக்கும் ஏற்ப பாபாவின் தலை மட்டுமே நனைந்திருந்தது.  உடம்பு ஈரமில்லாமலே இருந்தது.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment