ஒருமுறை பாலாஜியின் திவசத்தின்போது சில விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்டதைப் போல் மூன்று மடங்குபேர் வந்துவிட்டனர். பாலாஜியின் மனைவி திகைத்துப் போய்விட்டாள். குழுமியிருந்த மக்களுக்கு உணவு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவள் நினைத்தாள்.
அவளது மாமியார் "பயப்படாதே, அது நம்முடைய உணவல்ல, சாயியினுடையது. ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதியைப்போட்டு ஒரு துணியால் மூடி அதைத் திறக்காமலே அவர்களுக்குப் பரிமாறு! சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார்" என்று கூறித் தேற்றினாள். அவள் கூறியபடியே செய்தாள். தங்களது வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப பரிமாறப்பட்ட உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமாக மீதமும் இருந்ததைக் கண்டார்கள். "ஒருவன் எவ்வளவு அதிகம் மனமார்ந்த அக்கறையுடன் உணர்கிறானோ அவ்வளவு அதிகமாக அவன் செயலுருவாக்கிக் காண்கிறான்" என்னும் மொழி இவ்விஷயத்தில் நிரூபணமாக்கப்பட்டது.**
** என்னுடைய நண்பரும் பாபாவின் பெரிய பக்தருமான B.A.Soukul (First Class Sub-Magistrate) இதைப்போன்ற ஒரு விஷயத்தை என்னிடம் அறிவித்தார். 1943ஆம் ஆண்டு மாசி மாதம், அஹமத்நகர் ஜில்லாவிலுள்ள கர்ஜத்தில் பூஜைத் திருவிழாவும், பொதுஜன விருந்தும் நடந்தது. பின்னைய நிகழ்ச்சிக்கு, விருந்துக்கு அழைக்கப்பட்டதைப் போல் ஐந்து மடங்குபேர் வந்துவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. பாபாவின் அருளால் அனைவரும் வியக்கும் வண்ணம் எவ்வித உணவுக்குறைவும் உணரப்படவில்லை.

No comments :
Post a Comment