ராமச்சந்திர, தாத்யா பாடீல்களின் மரணத்தைத் தவிர்த்தல்:-
இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் ராமச்சந்திர பாடீலுக்குத் தீவிரமான காய்ச்சல் கண்டது. அவர் பெரிதும் துன்பமடைந்தார். அவர் எல்லாவித சிகிச்சைகளையும் கையாண்டு, குணமேதும் காணாமல் தமது வாழ்வில் வெறுப்படைந்து கடைசி வினாடிக்காகக் காத்துக்கொண்டிருந்தார். பின்னர் ஒருநாள் நள்ளிரவு பாபா திடீரென்று அவரது தலையணைக்கருகில் நின்றார்.
பாடீல் பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, "வாழ்க்கையின் எல்லாவித நம்பிக்கைகளையும் நான் இழந்துவிட்டேன். நான் எப்போது சாவேன் என்று எனக்கு உறுதியாகக் கூறுங்கள்" என்றார். கருணையுள்ள பாபா, "கவலைப்படாதே, உனது ஹண்டி (மரண ஓலை) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நீ விரைவில் குணம் ஆவாய். ஆனால் தாத்யா பாடீலைக் குறித்து நான் கவலைப்படுகிறேன். அவன் சக வருடம் 1840ல் (1918) விஜயதசமியன்று மரணமடைவான். யாருக்கும் இதை வெளியிட்டுவிடாதே. அவனுக்கும் இதைச் சொல்லாதே. ஏனென்றால் அவன் பயங்கரமான அளவுக்குப் பீதியடைவான்" என்றார்.
ராமச்சந்திர தாதா சுகமடைந்தார். ஆனால் தாத்யாவின் வாழ்வைப்பற்றி அவர் நடுக்கமுற்றார். ஏனெனில் பாபாவின் மொழிகள் மாற்ற இயலாதவை என்பதாலும், இரண்டாண்டுகளில் தாத்யா மரணமடைவார் என்பதைக் குறித்துமே. பாலா ஷிம்பி (தையல்காரர்) என்பவரைத் தவிர வேறொருவரிடமும் இக்குறிப்பைக் கூறாமல் இரகசியமாக வைத்திருந்தார். ராமச்சந்திர தாதா, பாலா ஷிம்பி என்ற இவ்விரண்டுபேர் மட்டும் தாத்யாவின் உயிரைப்பற்றி, என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு இருந்தனர். ராமச்சந்திர தாதா படுக்கையைவிட்டு நீங்கி நடமாடத் தொடங்கினார். காலம் வேகமாகச் சென்றது. சக வருடம் 1840 (1918) புரட்டாதி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் வரத்தொடங்கியது.
பாபாவின் கூற்றுப்படியே தாத்யா காய்ச்சலினால் படுத்த படுக்கையானார். எனவே அவரால் பாபாவின் தரிசனத்துக்கு வரமுடியவில்லை. பாபாவுக்கும் காய்ச்சல் வந்தது. பாபாவிடம் தாத்யாவுக்கு முழுநம்பிக்கை இருந்தது. தாத்யாவின் காய்ச்சல் மோசமடைந்துகொண்டே வந்தது. அவரால் அசையமுடியவில்லை. எப்போதும் அவர் பாபாவை ஞாபகப்படுத்திக்கொண்டார். பாபாவின் கஷ்டமான நிலைமையும் அதே அளவு வளர்ந்தது. முன்னால் பாபாவால் உருவாக்கபட்ட விஜயதசமி நாளும் வந்துகொண்டிருந்தது.
ராமச்சந்திர தாதாவும், பாலா ஷிம்பியும் தாத்யாவைப் பற்றி பயங்கரமான அளவு பீதியடைந்தனர். பாபா முன்னுரைத்தபடி தாத்யாவின் முடிவு வந்துவிட்டது என்று அவர்கள் எண்ணி, அவர்கள் உடல் நடுங்கி வியர்த்தது. விஜயதசமியும் மலர்ந்தது. தாத்யாவின் நாடி மிகமெதுவாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது. விரைவில் அவர் மரணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. தாத்யா பிழைத்துக்கொண்டார். அவரது மரணம் தவிர்க்கப்பட்டது. அவருக்குப் பதிலாக பாபா உடலை உகுத்தார். ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டதாகத் தோன்றியது. பாபா தாத்யாவுக்காகத் தமது உயிரைக் கொடுத்தார் என்று மக்கள் கூறினர். அவர் அங்ஙனம் செய்தாரா? அவரது வழிகள் அளவுக்கு அப்பாற்பட்டவையாகையால் அவருக்கு மட்டுமே தெரியும், என்றாலும் இந்நிகழ்ச்சியில் பாபா தமது மரணத்தைப் பற்றி தமது பெயருக்குப் பதில் தாத்யாவின் பெயரைப்போட்டுக் குறிப்புப் தந்தார் என்றே தோன்றுகிறது.
அடுத்தநாள் காலை (அக்டோபர் 16) பண்டாரீபுரத்தில் தாஸ்கணுவின் கனவில் பாபா தோன்றி, "மசூதி இடிந்து விழுந்துவிட்டது. ஷீர்டியில் எல்லா எண்ணெய்க்காரர்களும், கடைக்காரர்களும் என்னைப் பெருமளவு துயரப்படுத்தினர். எனவே நான் அவ்விடத்தை விட்டு நீங்கிவிட்டேன். நான் இதை உனக்குத் தெரிவிக்கவே இங்கு வந்தேன். தயவுசெய்து அங்கு உடனே சென்று 'பக்கல்' (கதம்ப மலர்கள்) புஷ்பங்களால் என்னைப் போர்த்து" என்றார். தாஸ்கணு இவ்விஷயத்தை ஷீர்டியிலிருந்து வந்த கடிதங்கள் மூலமாக அறிந்தார். எனவே அவர் ஷீர்டிக்குத் தமது சீடர்களுடன் வந்து பஜனையும், கீர்த்தனைகளும் செய்யத் தொடங்கினார்.
இறைவன் நாமத்தை பாபாவின் சமாதி முன்னால் நாள் முழுவதும் பாடினார். ஹரி நாமத்துடன் தாமே ஒரு அழகிய பூமாலை தொடுத்து பாபாவின் சமாதி முன்னர் வைத்து பாபாவின் பெயரால் மக்களுக்கு அன்னதானமும் செய்துவைத்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment