மேகா:-
இப்போது நாம் மூன்றாவதும், பெரியதுமான சிட்டுக்குருவியிடம் போவோம். ராவ்பஹதூர் ஹரிவிநாயக் சாதேவின் பிராமணச் சமையல்காரனான வீரம்காவனைச் சேர்ந்த மேகா என்பவன் எளிமை மிகுந்தவன், படிக்காதவன். அவன் ஒரு சிவபக்தன். 'நமசிவாய:' என்ற பஞ்சாஷரத்தை அவன் சதாகாலமும் ஸ்மரித்து வந்தான். சந்தியாவைப் பற்றியோ அதன் முக்கிய மந்திரமான காயத்ரியைப் பற்றியோ அவனுக்கு எதுவும் தெரியாது. சாதே அவனிடம் ஆர்வம் பூண்டு அவனுக்கு சந்தியாவையும், காயத்ரியையும் கற்பித்தார். ஷீர்டி சாயிபாபா சிவனின் அவதாரம் என்று அவனுக்குக் கூறி ஷீரடிக்கு அவனைப் புறப்படச் செய்தார். ப்ரோச் ரயில் நிலையத்தில் சாயிபாபா ஒரு முஹமதியர் என்று கேள்விப்பட்டான். அவனது வைதீகமான எளிய மனம் ஒரு முஹமதியர் முன் வணங்குவதைக் குறித்து மிகவும் குழப்பமடைந்ததால் தன்னை அங்கு அனுப்ப வேண்டாமென தனது எஜமானரை வேண்டிக்கொண்டான். ஆனால் அவரோ போகவேண்டியத்தை வற்புறுத்தி அவ்விடமிருந்த தனது மாமனாரான கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கருக்கு ஒரு கடிதம் கொடுத்து அவனை சாயிபாபாவுக்கு அறிமுகப்படுத்துமாறு அனுப்பினார்.
அவன் ஷீர்டிக்குச் சென்று மசூதியை அடைந்தபோது பாபா மிகவும் கோபமாய் இருந்தார். அவனை மசூதிக்குள் நுழைய விடவில்லை. "அந்த ராஸ்கலை வெளியே தள்ளு" என்று கர்ஜித்தார். "நீ உயர்ந்த ஜாதி பிராமணன், நான் கீழான முஹமதியன். இங்கு வருவதால் நீ உனது ஜாதியை இழந்துவிடுவாய். எனவே நீ போய்விடு" என்று அவனை நோக்கி உரைத்தார். இவ்வுரைகளைக் கேட்டதும் மேகா நடுங்கத் தொடங்கினான். தன் மனதில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பாபா எங்ஙனம் அறியலானார் என்பது குறித்து அவன் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தான்.
அவன் அங்கு சில நாட்கள் தங்கி பாபாவுக்குத் தனக்கே உரியமுறையில் சேவை செய்துகொண்டிருந்தான். ஆனால் இன்னும் பக்குவமடையவில்லை. பின்னர் வீட்டிற்குச் சென்றுவிட்டு த்ரயம்கேஸ்வரத்தில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் ஷீர்டிக்கு வந்தான். இம்முறை தாதா கேல்கரின் குறுக்கீட்டால் மசூதிக்குள் நுழையவும், ஷீர்டியில் தங்கவும் அனுமதிக்கப்பட்டான். மேகாவுக்கு பாபா உதவியது வாய்மொழிக் குறிப்புக்கள் எதனாலும் அல்ல. மேகாவின்மேல் அவர் மானசீகமான அருள் செய்தார். இதனால் மேகா பெருமளவு மாறுதலுற்று நன்மை அடைந்தான். பின்னர் சாயிபாபாவை சிவனின் அவதாரமாகவே அவன் கருதலானான். சிவனை வழிபடுவதற்கு வில்வ இலைகள் தேவையாய் இருந்ததால் மேகா ஒவ்வொருநாளும் அவைகளைக் கொணர்வதற்காக மைல் கணக்கில் நடந்துசென்று தனது சிவனை (பாபாவை) வழிபடுவான்.
கிராமத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வணங்கிய பின்னர் மசூதிக்கு வந்து பாபாவின் ஆசனத்திற்கு வணக்கம் செலுத்திய பின்னர் அவன் பாபாவை வழிபட்டு, சில சேவைகளைச் (பாபாவின் பாதங்களைப் பிடித்துவிடுவது) செய்து பின்பு பாபாவின் பாதங்களைக் கழுவிய தீர்த்ததைப் பருகுவது ஆகியவை அவனது வழக்கம். ஒருமுறை கண்டோபா கோவிலின் கதவு சாத்தியிருந்ததால் அவன் அந்தக் கடவுளை வழிபடாமலே மசூதிக்கு வந்தான். பாபா அவனது வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கதவு திறந்திருக்கிறது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். மேகா அங்கு சென்று கதவு திறந்தது கண்டு கண்டோபாவை வணங்கிய பின் வழக்கம்போல் பாபாவிடம் திரும்பி வந்தான்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment