Thursday, 30 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 51 - பகுதி 1

No comments
ஸ்ரீ தேம்பே ஸ்வாமி:-

ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் எங்ஙனம் நேசித்துக்கொள்கிறார்கள் என்பதை விளக்கும் அடுத்த கதைக்கு வருவோம்.  ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே ஸ்வாமி என்பார் ஒருமுறை ஆந்திராவில் கோதாவரிக் கரையிலுள்ள ராஜமஹேந்திரியில் வந்து தங்கியிருந்தார்.  அவர் பக்தியும் வைதீகமும் உடைய ஞானியாகவும், யோகியாகவும் இறைவனாகிய தத்தாத்ரேயரின் பக்தருமாக விளங்கிவந்தார்.  நிஜாம் ராஜ்யத்தைச் சேர்ந்த நாந்தேட் நகரின் வக்கீலான ஸ்ரீ புண்டலிக்ராவ் என்பவர் சில நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றிருந்தார்.  அவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஷீர்டி, சாயிபாபா முதலிய பெயர்கள் தற்செயலாக அப்பேச்சின்போது கூறப்பட்டன.

பாபாவின் பெயரைக் கேட்டதும், ஸ்வாமி கைகளால் வணங்கி ஒரு தேங்காயை எடுத்து அதை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "என் வணக்கங்களுடன் சகோதரர் சாயியிடம் இதைச் சமர்ப்பித்து விடுங்கள்.  என்னை மறந்துவிடாமல் என்மேல் அன்புடனிருக்கச் சொல்லுங்கள்" என்றார்.  மேலும் "ஸ்வாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் இந்த விதி விலக்குச் செய்யப்படவேண்டும்" என்றும் கூறினார்.  புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச்செல்லச் சம்மதித்தார்.  பாபாவைச் சகோதரன் என்று இந்த ஸ்வாமி அழைப்பது சரியே.  ஏனெனில் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும், பகலும் அவர் காத்துவந்ததைப் போலவே பாபாவும் அக்னிஹோத்ரத்தை அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்தார்.  ஒரு மாதத்திற்குப் பின்னர் புண்டலிக்ராவும் மற்றவர்களும் தேங்காயுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டு மன்மாடை வந்தடைந்தனர்.  தாகமாக இருந்ததால் ஓர் ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர்.  வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாதாகையால் கொஞ்சம் சிவடா என்ற காரம் கலந்த அவலை சிற்றுண்டியாக உட்கொண்டனர்.  அது அதிகக் காரமாக இருந்ததால் யாரோ ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப்பூவை அதனுடன் கலந்துவிடலாம் என்று கூறி அதேபோல் செய்தும் விட்டார்.  சிவடாவை அதிகச் சுவையுள்ளதாகவும், நாவுக்கு ருசியுள்ளதாகவும் செய்துகொண்டனர்.  துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேங்காய் புண்டலிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட தேங்காயாக இருந்தது.

அவர்கள் ஷீர்டியை நெருங்கியதும் புண்டலிக்ராவ், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகிய தேங்காய் உடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை வெகுவருத்ததுடன் அறிந்தார்.  பயந்து நடுங்கிக்கொண்டு ஷீர்டிக்கு வந்து சாயிபாபாவைப் பார்த்தார்.  பாபா முன்னமேயே தேம்பே ஸ்வாமி தேங்காய் அனுப்பியுள்ள கம்பியில்லாத் தந்தியின் செய்தியைப் பெற்றுவிட்டார்.

பாபா தாமாகவே தமது சகோதரன் கொடுத்தனுப்பியுள்ள பொருளை முதலில் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார்.  அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தமது குற்றத்தையும் கவனமின்மையையும் கூறி, மனம் வருந்தி பாபாவின் மன்னிப்பை வேண்டினார்.  மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாகக் கொடுத்துவிடுவதாகக் கூறினார்.  ஆனால் அத்தேங்காய்க்கு இணையாக வேறொன்றை ஈடுசெய்ய முடியாதென்றும், சாதாரணக் காயைக் காட்டிலும் பல மடங்கு அது உயர்ந்ததென்றும் கூறி பாபா அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார்.  மேலும் பாபா கூறினார், "இனிமேல் இவ்விஷயத்தைப்பற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை.  எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டும் விட்டது.  செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக்கொள்கிறாய்?

நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக்கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே.  எல்லாவற்றிலும் முழுமையாக அஹங்காரமற்று இரு.  அதனால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார்.  எத்தகைய அழகிய ஆன்மிக போதனையை இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா உணர்த்தியிருக்கிறார்!  

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

 




No comments :

Post a Comment