Monday, 13 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 28 - பகுதி 5

No comments

புர்ஹாண்பூர் அம்மையார்:-

இப்போது மற்றுமொரு குருவியிடம் திரும்புவோம். (பக்தனுக்கு பாபா அழைக்கும் பெயர்) புர்ஹாண்பூரில் உள்ள ஒரு மாது, சாயிபாபா தன் வீட்டுக்கு வந்து அவர்தம் உணவுக்காக கிச்சடி (உப்பு, பருப்பு கலந்த சாதம்) கேட்டுக்கொண்டிருப்பதாகக் கனவு கண்டாள்.  விழித்துப் பார்க்கையில் வாசற்படியில் யாரையும் காணோம் என்றபோதும் அக்காட்சியால் அவள் மனம் மிக நெகிழ்ந்து தனது கணவன் உள்ளிட்ட அனைவருக்கும் கூறினாள்.  தபால் இலாகாவில் அவர் பணியாற்றி வந்தார்.  அவர் அகோலாவுக்கு மாற்றப்பட்டபோது பக்தர்களான கணவனும், மனைவியும் ஷீர்டிக்குப் போவதெனத் தீர்மானித்தனர்.  ஒரு பொருத்தமான நாளில் இருவரும் புறப்பட்டு வழியில் கோமதி தீர்த்துக்குச் சென்றுவிட்டு ஷீர்டியை அடைந்து அங்கு இரண்டு மாதங்கள் தங்கினர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் மசூதியை அடைந்து பாபாவை வழிபட்டு, காலத்தைச் சந்தோஷமாகக் கழித்தனர்.  அவ்விருவரும் கிச்சடியை நைவேத்யமாக சமர்ப்பிக்க ஷீரடிக்கு வந்தனர்.  ஆனால் முதல் பதினான்கு தினங்களுக்கு என்ன காரணத்தினாலோ அதை சமர்ப்பிக்க அவர்களுக்கு இயலவில்லை.  அப்பெண்மணிக்கு இந்தக் காலதாமதம் பிடிக்கவில்லை.  பின் பதினைந்தாவது நாள் அவள் தனது கிச்சடியுடன் மசூதிக்கு வந்தாள்.  பாபாவும் மற்றவர்களும் ஏற்கனவே சாப்பாட்டுக்காக அமர்ந்துகொண்டிருப்பதையும் திரை தொங்கவிடப்பட்டதையும் கண்டாள்.  ஆனால் அவளால் பொறுக்க இயலவில்லை.  திரையைக் கையால் விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள்.  அப்பலகாரத்துடன் அவள் வந்ததும் பாபா மிகவும் மகிழ்ந்து கரண்டி - கரண்டியாகப் பச்சடியை உண்டார்.  இவ்விஷயத்தில் பாபாவின் ஊக்கத்தைக் கண்டு எல்லோரும் அதிசயமடைந்தனர்.  இந்தக் கிச்சடிக் கதையைக் கேட்பவர்களுக்கெல்லாம் பக்தர்கள்பால் பாபா கொண்டிருந்த அசாதாரண அன்பு உறுதியாயிற்று.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment