மசூதிப்படிகளில் அவர்கள் காலடி எடுத்து வைத்தவுடனேயே பாபா அந்த நண்பரைத் தூரத்திலேயே பார்த்துக் கீழ்கண்ட இனிமையான சொற்களால் அழைத்தார்: "காம் யாவேன் ஜி" (ஏன் வந்தீர் ஐயா!) இச்சொற்களை அவர் உதிர்த்த குரல் வெகுபுதிய விதமாக இருந்தது. அந்நண்பனின் தகப்பனார் குரல் போலவே அச்சாக இருந்தது. அது மறைந்த தனது தந்தையைப்பற்றி அவருக்கு நினைவூட்டி சந்தோஷத்தால் புல்லரிப்பை ஏற்படுத்தியது. அவரது குரலுக்குத்தான் எத்தகைய வியத்தகு சக்தி. ஆச்சரியப்பட்டு "இது எனது தந்தையின் குரல்தான் என்பதில் ஐயமில்லை" என்று கூறிவிட்டு உடனே மேலே சென்று பாபாவின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்கினார்.
பின்னர் பாபா இரண்டுமுறை தஷிணை கேட்டார். காலை ஒருமுறையும், அவர்கள் விடைபெறும்போது மாலை ஒருமுறையும். ஆனால் அதை காகாவிடமிருந்து மட்டுமே கேட்டார். அவரது நண்பரைக் கேட்கவில்லை. நண்பர் காகாவிடம் கிசுகிசுத்தார். "இருமுறை பாபா உம்மிடமிருந்து தஷிணை கேட்டார். நான் உம்முடனே இருந்தும் அவர் ஏன் என்னைப் புறக்கணிக்க வேண்டும்?" என்றார். அதற்கு காகா "பாபாவையே கேளும்" என்றார். பாபா, காகாவிடம் அவர் நண்பர் என்ன முணுமுணுக்கிறார் என்று கேட்டார். அப்போது அந்த நண்பரே தாம் ஏதும் தஷிணை கொடுக்கலாமா என்று கேட்டார். பாபாவும் "உமக்குக் கொடுக்கப் பிரியமில்லை எனவே உம்மைக் கேட்கவில்லை, கொடுக்க இப்போது பிரியப்பட்டால் கொடுக்கலாம்" என்று பதிலளித்தார்.
அவர் காகா அளித்த அதே தொகையான பதினேழு ரூபாயை தஷிணையாக அளித்தார். பின்னர் அவரிடம் பாபா பின்வரும் மொழிகளை உரைத்தார். "தேலியின் (கோட்டையின் சுவர் - வேற்றுமை உணர்வு) சுவற்றை இடித்தால் தான் நாம் ஒருவரை ஒருவர் முகத்திற்கு முகம் பார்க்கலாம், சந்திக்கலாம்". பின்னர் பாபா, அவர்கள் புறப்படுவதற்கு அனுமதியளித்தார். வானிலை மப்பாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தபோதும், பாபா அவர்களுக்கு பத்திரமான பிரயாணத்திற்கு உறுதி அளித்தார். இருவரும் சௌக்கியமாக பம்பாய் வந்தடைந்தனர்.
அவர்கள் வீட்டுக்குச்சென்று வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறந்தபோது இரண்டு பக்ஷிகள் தரையில் விழுந்து இறந்து கிடப்பதையும், ஒன்று அப்போதுதான் ஜன்னல் வழியே பறந்து சென்றதையும் கண்டனர். ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுப் போயிருந்தால் இரண்டு பக்ஷிகளும் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவைகள் தங்களது விதியை எய்தின என்றும், மூன்றாவது பக்ஷியைக் காக்கவே பாபா தம்மை அனுப்பியிருப்பதாகவும் அவர் நினைத்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment