எல்லா ஜந்துக்களிலும் பாபா விஜாபித்திருத்தல்:-
இந்த லக்ஷ்மிபாய் ஷிண்டே ஒரு நல்ல வசதியுள்ள பெண்மணி. இரவும் பகலும் அவள் மசூதியில் வேலை செய்தாள். பகத் மஹல்ஷாபதி, தாத்யா, லக்ஷ்மிபாய் இவர்களைத் தவிர வேறு எவரும் இரவில் மசூதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருநாள் மாலை பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது லஷ்மிபாய் வந்து வணங்கினாள். பாபா அவளிடம், "ஓ! லக்ஷ்மி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்" என்றார். அதற்கு அவள், "பாபா சிறிதுநேரம் பொறுங்கள். நான் ரொட்டியுடன் வருகிறேன்" என்று கூறிக்கொண்டு சென்றாள். பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள். அவற்றை பாபாவின்முன் வைத்தாள். அவர் அதை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.
அதற்கு லக்ஷ்மி, "பாபா! இது என்ன? உங்களுக்காக நான் அவசரமாக ஓடி எனது சொந்தக் கைகளால் ரொட்டி தயாரித்தேன். நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துகொள்ளாமல் நாயிடம் தூக்கி எறிகிறீர்களே! வீணாக எனக்குத் தொல்லை கொடுத்தீர்கள்?" என்றாள்.
அதற்கு பாபா, "ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய். நாயின் பசியைத் தணிப்பது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம். நாய்க்கும் ஒரு ஆத்மா இருக்கிறது. ஜந்துக்கள் வெவ்வேறாயிருப்பினும், சில பேசினும், சில ஊமையாயிருப்பினும் அவைகள் யாவற்றுமுடைய பசியும் ஒன்றேயாம். பசியாய் இருப்போர்க்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்துகொள்வாயாக. இதை ஒரு ஆதார நீதியாகக் கருது" என்று பதிலளித்தார். இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான். ஆனால், ஒரு மிகப்பெரும் ஆன்மிக உண்மையை பாபா அதன்மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார். தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருதலை, எவருடைய உணர்ச்சியும் துன்புறாதமுறையில் எடுத்துக்காட்டினார்.
இத்தருணத்திலிருந்து லக்ஷ்மிபாய் அவருக்குத் தினந்தோறும் பாலையும், ரொட்டியையும் அன்புடனும் பக்தியுடனும் அளித்து வந்தாள். பாபா அதை ஏற்றுக்கொண்டு பசி தணியும் வரை உண்டார். இதில் ஒரு பகுதியை அவர் ராதாகிருஷ்ணமாயிக்கு லக்ஷ்மிபாயிடமே கொடுத்தனுப்புவார். அவளும் பாபாவின் மீதியான பிரசாதத்தை உவப்புடனும், மகிழ்ச்சியுடனும் உண்டாள். இந்த ரொட்டிக்கதையை ஒரு சம்பந்தமில்லாத விஷயமாகக் கருதக்கூடாது. அது எங்ஙனம் சாயிபாபா எல்லா ஜீவராசிகளிடமும் வியாபித்து ஊடுருவி இருக்கிறார் என்றும், அவைகளைக் கடந்தும் இருக்கிறார் என்றும் காட்டுகிறது. அவர் சர்வவியாபி, பிறப்பற்றவர், இறப்பற்றவர், அழிவற்றவர்.
பாபா லக்ஷ்மிபாயின் சேவையை நினைவு கூர்ந்தார். அவளை எங்ஙனம் அவர் மறக்கமுடியும்? உடம்பைவிட்டு நீங்குவதற்குமுன் தமது கையைப் பைகளில் போட்டு ஒருமுறை ஐந்து ரூபாயும், மீண்டும் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்தார்.
ஒன்பது என்ற எண் 21ம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட நவவித பக்தியைப்பற்றிக் குறிப்பிடுகிறது. (இந்த நவவித பக்தியும் ஸ்ரீராமரால் சபரிக்கு உபதேசிக்கப்பட்டது.) அல்லது ஷிமொலங்கண் நேரத்தில் அளிக்கப்பட்ட்ட தஷிணையாக இருக்கலாம்.
லக்ஷ்மிபாயி ஒரு வசதியான பெண்மணி. எனவே பாபா அவளுக்குக் குறிப்பால் உணர்த்தி, நல்ல அடியார்களுக்கு வேண்டிய ஒன்பதுவித குணங்களைச் சொல்லியிருக்கலாம்.
பாகவதத்தில் 11வது காண்டத்தில், 10வது அத்தியாயத்தில் 6வது பாடலில் முதலாவது, இரண்டாவது செய்யுளில் முறையே முதல் ஐந்து குணங்களும், பின் நான்கு குணங்களும் கூறப்பட்டுள்ளன. பாபாவும் அத்தகைய ஒழுங்கைப் பின்பற்றி முதலில் ஐந்து ரூபாயும், பின்னர் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் அளித்தார். அப்போது மாத்திரமல்ல. பலமுறை லக்ஷ்மிபாயின் கைகளில் ஒன்பது ரூபாய் சென்றிருக்கிறது. ஆனால் பாபாவின் இந்த ஒன்பதை எப்போதும் அவள் நினைவில் கொண்டிருப்பாள். கவனமானவரும், எப்போதும் ஜாக்கிரதையானவருமான பாபா தமது கடைசித் தருணத்தில் மற்ற முன்னேற்பாடுகளையும் செய்தார். தமது அடியவர்களுடைய அன்பாலும், பாசத்தாலும் சிக்கிக்கொள்ளாதபடி அல்லது பிணிக்கப்படாதபடி அவர்கள் எல்லோரையும் நீங்கச் சொல்லி ஆணையிட்டார்.
காகா சாஹேப் தீஷித்தும், பாபு சாஹேப் பூட்டியும் பாபாவிடம் கவலையுடன் காத்திருந்தனர். ஆனால் பாபா, அவர்களை வாதாவுக்குப்போய் உணவுக்குப்பின் வரும்படி கூறினார். பாபாவின் சந்நிதாதனத்தைவிட்டு அவர்களால் நீங்க முடியவில்லை. எனினும் பாபாவுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்கமுடியவில்லை. எனவே அவர்கள் சுமை நிறைந்த மனத்துடன் வாதாவிற்குச் சென்றனர். பாபாவின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது என்பதை அவர்கள் அறிவார்களாதலால் அவரை அவர்களால் மறக்க முடியவில்லை. உணவுக்காக அமர்ந்தாலும் அவர்கள் மனம் எங்கேயோ இருந்தது. அது பாபாவுடன் இருந்தது. அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் முன்பாக பாபா பூதவுடலை நீத்துவிட்டார் என்ற செய்தி வந்தது. உடனே தங்கள் உணவை விட்டுவிட்டு மசூதிக்கு ஓடினார்கள். பயாஜி கோதேயின் மடியில் இறுதியாகப் படுத்திருந்ததைக் கண்டார்கள். அவர் தரையில் விழவில்லை. தமது படுக்கையிலும் அவர் படுத்திருக்கவில்லை. ஆனால் அமைதியாக தமது இருக்கையில் அமர்ந்துகொண்டே, தமது சொந்தக் கைகளால் தர்மம் செய்துகொண்டே தமது பூதவுடலை நீத்தார்.
ஞானிகள் ஒரு குறிப்பான காரணத்துடன் இந்த உலகிற்கு வருகை தருகிறார்கள். அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியாகவே அமைதியாகவும், எளிதாகவும் இயற்கை எய்துகிறார்கள்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment