ஒருமுறை ஷீர்டியைச் சேர்ந்த ரகு பாடீல் என்பவர் நெவாசைச் சேர்ந்த பாலாஜி பாடீல் என்பாரிடம் சென்றார். அன்று மாலை மாட்டுத் தொழுவத்தில் ஒரு பாம்பு சீறிக்கொண்டு உள் நுழைவதைக் கண்டார். எல்லா மாடுகளும் பீதியடைந்து நகரத் தொடங்கின. வீட்டினரும் திகிலடைந்தனர். ஆனால் பாலாஜி தனது வீட்டில் சாயியே பாம்பாகத் தோன்றியிருக்கிறார் என எண்ணினார். துளிகூட பயப்படாமல் ஒரு கிண்ணத்தில் பாலை கொண்டுவந்து பாம்பின் முன்வைத்து, "பாபா! ஏன் சீறி சப்தப்படுத்துகிறீர்கள்? ஏன் எங்களைப் பயமுறுத்த விரும்புகிறீர்கள்? இந்தக் கிண்ணத்திலுள்ள பாலை அமைதியான மனதுடன் அருந்துங்கள்" என்று கூறிக்கொண்டே அதனருகில் குழப்பமுறாமல் அமர்ந்தார். மற்றவர்கள் பீதியடைந்தனர். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் பாம்பு தானாகவே மறைந்து போய்விட்டது. யாருக்கும் அது எங்கு சென்றதெனத் தெரியாது. மாட்டுத் தொழுவத்தில் தேடியும் அது காணப்படவில்லை.**
பாலாஜிக்கு இரண்டு மனைவிகளும், சில குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் சில சமயம் நெவாஸில் இருந்து பாபாவின் தரிசனத்துக்காக ஷீர்டிக்கு வருவர். அப்போது பாபா சேலையும் மற்ற உடைகளும் வாங்கி அவைகளைத் தமது ஆசியுடன் அவர்களுக்கு அளிப்பார்.
(** கோயம்புத்தூரில் இதே மாதிரியாக 1943 தை 7ஆம் தேதி வியாழன் மாலை 3:30 மணிக்கு பாபா பாம்பாகத் தோன்றிய விவரம் சாயிசுதா சஞ்சிகையில் (தொகுப்பு 3 , எண் 7&8 , ஜனவரி 1943 , பக்கம் 26) பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கு அப்பாம்பு பஜனையைக் கேட்டது. மலரையும், பாலையும் ஏற்றுக்கொண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தன்னைக் காணவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தது. போட்டோ எடுப்பதற்காக பாபாவின் படம் அதன் அருகில் வைக்கப்பட்டது. படமும், பாம்பும் போட்டோவில் மிகச்சிறப்பாக பதிந்திருக்கிறது. விவரங்களுக்கும், போட்டோவுக்கும் வாசகர்கள் மேற்குறித்த சாயிசுதாவை காண்க.)

No comments :
Post a Comment