Monday, 13 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 28 - பகுதி 2

No comments

(1)  லாலா லக்ஷ்மிசந்த்:-

பம்பாயில் ஸ்ரீ வெங்கடேஸ்வர் அச்சகத்தில் இம்மனிதர் பணியாற்றி வந்தார்.  பின்னர் ரயில்வே டிபார்ட்மெண்டிலும் அதன்பின் ராலி பிரதர்ஸ் & கம்பெனியிலும் இவர் குமாஸ்தாவாகப் பணியாற்றினார்.  1910ல் அவர் பாபாவின் தொடர்பு பெற்றார்.  கிறிஸ்துமஸுக்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாக, தாடியுடன் கூடிய கிழவனார் ஒருவர் தம் பக்தர்கள் புடைசூழ நின்று கொண்டிருப்பதைத் தான் சாந்தாக்ருஸில் இருக்கும்போது கனவில் கண்டார்.  சிலநாட்களுக்குப் பின் தாஸ்கணுவின் கீர்த்தனையைக் கேட்பதற்காகத் தமது நண்பரான தத்தாத்ரேயா மஞ்சுநாத் பிஜூர் என்பவரின் வீட்டுக்குச் சென்றார்.  கீர்த்தனை செய்யும்போது மக்கள்முன் பாபாவின் படத்தை வைப்பது தாஸ்கணுவின் வழக்கமாகும்.  தான் கனவில் கண்ட கிழவனாரின் உருவ அமைப்புக்கள் எல்லாம் இப்படத்துடன் அப்படியே அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு லக்ஷ்மிசந்த் அதிசயப்பட்டார்.  தான் கனவில் கண்ட கிழவனார் சாயிபாபாவே என்ற முடிவிற்கு வந்தார்.

இச்சித்திரத்தின் தரிசனம், தாஸ்கணுவின் பாடல், அவர் உரை நிகழ்த்திய துகாராமின் வாழ்க்கை இவை அனைத்தும் அவர் மனதில் ஓர் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது.  அவர் ஷீர்டி போகத் தீர்மானித்தார்.  சத்குரு தேடும் படலத்திலும், ஆன்மிக முயற்சியிலும் கடவுள் எப்போதும் உதவி செய்கிறார் என்பது பக்தர்களின் அனுபவமாகும்.  அதனால் இரவு 8 மணியளவில் சங்கர் ராவ் என்ற அவரது நண்பர், வீட்டுக் கதவைத் தட்டி, ஷீர்டிக்குத் தன்னுடன் அவர் வருவாரா என்று கேட்டார்.  அவரது மகிழ்ச்சி கரை காணவில்லை.  உடனே அவர் ஷீர்டி செல்லத் தீர்மானித்தார்.  தனது மாமாவிடமிருந்து ரூ.15ஐ கடன் வாங்கிக்கொண்டு உரிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தான பிறகு அவர் ஷீர்டிக்குப் புறப்பட்டார்.  ரயிலில் அவரும் அவரது நண்பரும் சில பஜனைப் பாடல்களைப் பாடினர்.  ஷீர்டிக்கு அருகில் உள்ள தங்கள் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த, உடன் வந்த நான்கு முஹமதியப் பிரயாணிகளிடம் அவர்கள் இருவரும் சாயிபாபாவைக் குறித்து விசாரித்தனர்.

பல ஆண்டுகளாக ஷீர்டியில் வசித்துவரும் சாயிபாபா ஒரு பெரும் ஞானி என்று அவர்கள் எல்லோரும் கூறினர்.  அவர்கள் கோபர்காவனை அடைந்தபோது, பாபாவுக்குச் சமர்ப்பிப்பதற்காக சில பழங்களை லக்ஷ்மிசந்த் வாங்க விரும்பியிருந்தார்.  ஆனால் அங்குள்ள இயற்கைக் காட்சிகள், வேடிக்கை வினோதங்கள் இவற்றில் அவ்வளவு தூரம் கவரப்பட்டவராய் அதிலேயே ஆழ்ந்து மூழ்கி மேற்படிப் பழங்களை வாங்குவதை மறந்தே போய்விட்டார்.  ஷீர்டியை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் பழங்களைப் பற்றி அவருக்கு நினைவு வந்தது.  அதே சமயத்தில் தலையில் பழக்கூடையுடன் இருந்த கிழவி ஒருத்தி வண்டியைத் தொடர்ந்து ஓடி வந்துகொண்டிருப்பதைக் கண்டார்.  வண்டி நிறுத்தப்பட்டது.  மகிழ்வுடன் சில பழங்களைப் பொறுக்கி அவர் வாங்கினார்.  அப்போது, "மீதமுள்ளவற்றையும் எடுத்துக்கொண்டு போய் என் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பியுங்கள்" என்றாள் அக்கிழவி.  பழங்களை அவர் வாங்க எண்ணியிருந்தது, அவர் அதை மறந்துபோனது, அக்கிழவியின் குறுக்கீடு, பாபாவின்பால் அவளது பக்தி, ஆகிய இந்த உண்மைகள் அனைத்தும் அந்த இரு நண்பர்களுக்கும் வியப்பையூட்டியது.

இந்தக் கிழவி, தான் கனவில் கண்ட கிழவனாருக்கு ஏதேனும் உறவுபோலும் என்று லக்ஷ்மிசந்த் நினைத்தார்.  பின்னர் மீண்டும் அவர்கள் சவாரி செய்து ஷீர்டிக்கருகில் வந்தனர்.  மசூதியில் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்டு அதற்கு அவர்கள் வணக்கம் செலுத்தினர்.  கையில் பூஜை சாமான்களுடன் மசூதிக்குச் சென்று உரியமுறையில் பாபாவை வழிபட்டனர்.  லக்ஷ்மிசந்த் பாபாவைக் கண்டதும் மிகவும் உருகி, அதிக மகிழ்ச்சியடைந்தார்.  நறுமணம் கமழும் தாமரை மலரால் தேனீ ஒன்று கவரப்படுவதுபோல் பாபாவின் திருவடிகளில் அவர் கவரப்படார்.

பின்னர் பாபா கூறினார்:  "வஞ்சகமான ஆசாமி!  வழியில் பஜனை செய்கிறான்.  மற்றவர்களை விசாரிக்கிறான்.  ஏன் மற்றவர்களைக் கேட்கவேண்டும்?  நமது கண்களாலேயே எலாவற்றையும் நாம் காணவேண்டும்.  மற்றவர்களைக் கேட்கவேண்டிய அவசியம் என்ன?  உனது கனவு மெய்யா, பொய்யா என்று நீயே எண்ணிப்பார்.  மார்வாடியிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்துக்காக வரவேண்டிய தேவையென்ன?  உள்ளத்தின் ஆசை இப்போது நிறைவடைந்ததா?"

இம்மொழிகளைக் கேட்டு பாபாவின் சர்வ வியாபித்துவத்தைக் கண்டு லக்ஷ்மிசந்த் அதிர்ச்சியடைந்தார்.  தனது வீட்டிலிருந்து தான் ஷீர்டிக்கு வரும் வழியில் நிகழ்ந்தது எல்லாவற்றையும் பாபா அறிந்தது எங்ஙனம் என்று திகைத்து நின்றார். 

தமது தரிசனத்தைப் பெறுவதற்காகவோ, எந்த ஒரு விழா நாட்களைக் கொண்டாடுவதற்காகவோ, தீர்த்த யாத்திரை செய்வதன் பொருட்டோ மக்கள் கடனாளியாவது பாபாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பதே இவ்விடத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment