ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்:
ஹர்தாவிலிருந்து வந்த தத்தோபந்த் என்னும் பெருந்தகை பதினான்கு ஆண்டுகளாக வயிற்றுவலியால் அல்லலுற்றார். எவ்விதச் சிகிச்சையும் அவருக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. பின்னர், பாபா பார்வையாலேயே வியாதியைக் குணப்படுத்துகிறார் என்ற அவரின் புகழைக் கேள்விப்பட்டு ஷீர்டிக்கு ஓடிவந்து பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார். பாபா அவரை அன்புடன் நோக்கி ஆசீர்வாதங்கள் அளித்தார். பாபா தமது கரத்தை அவரது தலையின்மீது வைத்து ஆசீர்வாதத்தையும், உதியையும் அளித்தபின் அவர் குணமடைந்தார். அதற்கப்பால் இவ்வியாதியைப் பற்றி எவ்விதத் தொந்தரவும் இல்லை. இந்த அத்தியாயத்தின் முடிவில் மூன்று நிகழ்ச்சிகள் அடிக்குறிப்பில் காணப்படுகின்றன.
(1) மாதவ்ராவ் தேஷ்பாண்டே மூல வியாதியால் அல்லலுற்றார். பாபா அவருக்கு சோனமுகியின் (சூரத்தாவாரை - மிதமான பேதி மருந்து) கஷாயத்தைத் தேர்ந்து கொடுத்தார். இது அவரைக் குணமாக்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இத்தொந்தரவு மீண்டும் தலையெடுத்தது. மாதவ்ராவ் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் அதே மருந்தை உட்கொண்டார். பெருமளவிற்கு இது வியாதியை அதிகப்படுத்தியது. ஆனால் பின்னர் அது பாபாவின் அருளால் குணமாக்கப்பட்டது.
(2) கங்காதர் பந்த் என்ற காகா மகாஜனியின் அண்ணன் பல ஆண்டுகளாக வயிற்றுவலியால் அவதியுற்றுக்கொண்டிருந்தார். பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு ஷீர்டிக்கு வந்து தன்னைக் குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார். பாபா அவரின் வயிற்றைத் தொட்டு "கடவுள் குணமாக்குவார்" என்று கூறினார். அது முதற்கொண்டு அவருக்கு வயிற்றுவலி ஏதுமில்லை. அவர் முழுவதுமாகக் குணமாக்கப்பட்டார்.
(3) ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கரும் கடுமையான வயிற்றுவலியால் அல்லலுற்றார். இரவு, பகல் முழுவதும் அவரால் இருப்புக்கொள்ள முடியவில்லை. டாக்டர்கள் ஊசி போட்டும் பலனளிக்கவில்லை. பின்னர் அவர் பாபாவை அணுகினார். பின்னர் அவரை பர்ஃபி என்ற இனிப்புப் பண்டத்தை நெய்யுடன் உண்ணச் சொன்னார். இச்செயல்முறையைப் பின்பற்றியதும் அவர் முழுக்கக் குணமடைந்தார்.
பாபாவின் சொற்களும் கருணையுமே பல்வேறு வியாதிகளை நிரந்தரமாகக் குணப்படுத்திய உண்மையான மருந்தாகும் என்று இக்கதைகள் நமக்குக் காட்டுகின்றன. மருந்துகளோ மாத்திரைகளோ அல்ல.

No comments :
Post a Comment