Tuesday, 7 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 19 - பகுதி 4

No comments

உபதேஷங்களின் விதங்கள் - அவதூறு பேசுவோர் (புறங்கூறுவோர்) கண்டிக்கபடுதல்:

அறிவுரை வழங்குவதற்கு, சாயிபாபாவிற்கு எத்தகைய சிறப்பான இடமோ, குறிப்பிட்ட நேரமோ தேவை இருக்கவில்லை.  சந்தர்ப்பம் நேரிட்ட போதெல்லாம் தாராளமாக அவற்றை அவர் வழங்கினார்.  ஒருமுறை பாபாவின் பக்தனொருவன் வேறொருவரை அவர் அறியாதபடி மற்ற ஜனங்களின் முன்னிலையில் திட்டினான்.  தனது சகோதரரின் நன்மைகளையெல்லாம் புறத்தொதுக்கி, அவரின் குறைபாடுகள் குறித்து கேட்போர்கள் அருவருப்படையும்படியாக பழித்துப் பேசினான்.  

அவசியமின்றி மற்றவர்களைப் புறங்கூறுவது மக்களுக்குரிய ஒரு மனப்பாங்காக இருப்பதைப் பொதுவாக நாம் காண்கிறோம்.  முனிவர்கள் இந்தப் புறங்கூறுதலை வேறொரு கோணத்தில் இருந்து நோக்குகிறார்கள்.  அழுக்கை நீக்குவதற்குப் பல வழிகள் இருக்கின்றன.  மண், நீர், சோப்பு முதலானவை.  ஆனால் புறங்கூறுபவனுக்கோ அவனுக்கே உரித்தான வழி இருக்கிறது.  அவன் மற்றவர்களது அழுக்கை (குறைபாடுகளை) தனது நாவினால் அகற்றி நீக்குகிறான்.  ஒருவகையில் அவன் தன்னால் திட்டப்படுபவனுக்கே உதவுகிறான்.  இதற்காக அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.  புறங்கூறுபவனைத் திருத்துவதற்கு சாயிபாபாவுக்கு அவருக்கே உரியதான வழி இருக்கிறது.  

அவர் தமது நிறைபேரறிவினால் அந்த புறம் கூறுவான் செயலை அறிந்திருந்தார்.  மதியம் அவர் அவனை லெண்டித் தோட்டத்துக்கருகில் பார்த்தபோது, வேலிக்கருகில் இருந்த மலத்தை உண்ணும் பன்றியை அவனுக்குச் சுட்டிக்காண்பித்து, "பார், அது எத்தகைய சுவைமணச் சிறப்புடன் மலத்தைப் பேராவலுடன் விழுங்குகின்றது, உனது நடத்தையும் அத்தகையதே.  உனது தோழர்களை நீ மனதாரத் திட்டித்தீர்த்துகொண்டே இருக்கிறாய்.  பல்வேறு நல்வினைகளைச் செய்ததன் பலனாக நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்.  இவ்வாறு நீ நடந்துகொண்டால், ஷீர்டி உனக்கு எவ்விதத்திலாவது உதவி செய்யுமா?" என்று கேட்டு அவனுக்கு அறிவுரை வழங்கினார்.  அப்பக்தன் இப்பாடத்தை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு சென்றான் என்று சொல்லத் தேவையில்லை.

இவ்விதமாக பாபா அவசியம் நேரிட்டபோதெல்லாம் அறிவுரைகளை வழங்கிக்கொண்டே இருந்தார்.  இவைகள் நமது மனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்படி செயலாற்றப்பட்டால், ஆன்மீக இலட்சியம் (அனுபூதி) வெகுதொலைவில் இல்லை.  ஏன் ஹரி (கடவுள்) இருந்தால் அவர் எனது கட்டிலிலேயே உணவளிப்பார் என்னும் ஒரு பழமொழி இருக்கிறது.  உணவு, உடை விஷயத்தில் மட்டுமே இப்பழமொழி உண்மை.  ஆனால் இதை நம்பி எவனாகிலும் அமைதியாக அமர்ந்துகொண்டு, ஆன்மீக விஷயங்களில் ஒன்றும் செய்யாமல் இருந்தால் அவன் படு வீழ்ச்சி எய்துவான்.  ஆன்ம உணர்வடைய தன்னைத்தானே தனக்கு இயலும், உச்ச அளவு செயலில் முனைவித்துக் கொள்ளவேண்டும்.  எவ்வளவு அதிகம் அவன் பெருமுயற்சி கொள்கிறானோ, அவ்வளவு அதிகம் அவனுக்கு நல்லது.  

பாபா தாம் நிலம், காற்று, நாடு, உலகம், ஒளி, மோஷம் ஆகியவை எங்கணும் நிறைந்திருக்கும் சர்வவியாபி என்றும் தாம் ஒரு வரையறை உடையவரல்ல என்றும் கூறினார்.  பாபா மூன்றரை முழ உயரமுள்ள அவரின் உடம்பே என்று எண்ணுபவர்களின் தவறான கருத்தை நீக்குதற்பொருட்டாக அவர் இந்த ரூபத்தில் தாமே அவதரித்துக் கொண்டார்.  இரவும் பகலும் எந்த பக்தனாவது பூர்ண ஆத்மசரணாகதியுடன் அவர்மீதே தியானம் புரிவானாயின், அவன் அவருடன் இரண்டற இனிப்பும் - சர்க்கரையும் போன்றும், அலையும் - கடலும் போன்றும், கண்ணும் - ஒளியும் போன்றும் முழுமையான ஐக்கியத்தைத் துய்த்துணர்வான்.  பிறப்பு - இறப்பு என்னும் சுழலை ஒழித்து அமைதியுற வேண்டியவன், நேர்மையான வாழ்க்கை நடத்த வேண்டும்.  அமைதியாகவும், கட்டுப்பட்ட மனத்துடனும் இருக்க வேண்டும்.  யாரையும் புண்படுத்தும் படியாக வெடுக்கென்று பேசக்கூடாது.  எப்போதும் நல்வினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.  தனது கடமைகளைச் செய்யவேண்டும்.  தானே உள்ளத்தாலும், உயிராலும் அவரிடம் சரணாகதி அடையவேண்டும்.  அதன் பின்னர் அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.  அவரையே முழுமையாக நம்புபவனும், அவரது லீலைகளைக் கேட்டு அதையே விவரமாக எடுத்துக் கூறுபவனும், வேறெதைப் பற்றியும் சிந்திக்காதவனும் ஆத்மானுபூதியை அடைவது உறுதி. 

பாபா தமது பெயரையே நினைவில் வைக்கும்படியும் தம்மிடமே சரணாகதி அடையும்படியும் பலரைக் கேட்டுக்கொண்டார்.  ஆனால் தாங்கள் யார்? என்று (நான் யார் விசாரணை) அறிய விரும்பியவர்களுக்கு ஸ்வரணத்தையும்(கற்றல்), மனனத்தையும்(தியானம்) அறிவுறுத்தினார்.  சிலரைக் கடவுள் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும், சிலரை அவரது லீலைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியும், சிலரைத் தமது பாதபூஜை செய்யும்படியும், சிலரை அத்மாத்ய ராமாயணம், ஞானேஸ்வரி, மற்றும் பிற திருமுறை நூல்களைப் படிக்கும்படியும் அறிவுறுத்தினார்.  சிலரைத் தமது பாதத்தடியில் அமரும்படி இருத்தி வைத்தார்.  சிலரைக் கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார்.  சிலரை விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை ஜெபம் செய்யும்படியும், மற்றும் சிலரை சாந்தோக்ய உபநிஷதம், கீதையைக் கற்கும்படியாகவும் கூறினார்.  அவர்தம் உபதேஷங்களுக்கு எவ்வித வரையறையோ, கட்டுப்பாடோ கிடையாது.  சிலருக்கு அதை நேரிடையாகவே கொடுத்தார்.  மற்றும் சிலருக்கு கனவில் காட்சிகள் மூலம் அளித்தார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாய் இருந்த ஒருவரின் கனவில் தோன்றி அவரது மார்பில் உட்கார்ந்து அழுத்தி, மதுவைத் தொடுவதில்லை என்று அவர் சத்தியம் செய்துகொடுத்தபின்பு அவரை விட்டகன்றார்.  சிலருக்கு கனவில் 'குரு பிரம்மா... குரு விஷ்ணு....' போன்ற மந்திரங்களை விளக்கினார்.  ஹடயோகம் பழகிக்கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு ஹடயோகப் பயிற்ச்சியை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும், அமைதியுடன் அமர்ந்து பொறுமையாய் (சபூரி) இருக்கவேண்டும் என்றும் சொல்லியனுப்பினார்.  அவரது எல்லா வழிகளையும், செயல் முறைகளையும் விவரிக்க இயலாது.  சாதாரண உலக விவகாரங்களில் தமது செயல்களால் முன் உதாரணகள் அமைத்தார்.  அவைகளில் ஒன்று கீழே தரப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)


No comments :

Post a Comment