Tuesday, 7 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 19 - பகுதி 3

No comments

நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல்:

நல்ல எண்ணங்களை சாயிபாபா எங்ஙனம் ஊக்குவித்தார் என்பதை அறிவது சுவாரசியமானது.  அன்புடனும், பக்தியுடனும் முழுமையாக உங்களை நீங்கள் அவரிடம் சரணாகதியாக்கிக்கொள்ள வேண்டும்.  பின்னர் எவ்வளவோ விஷயங்களில் அடிக்கடி அவர் உங்களுக்கு உதவி செய்வதைக் காண்பீர்கள்.  தூக்கத்திலிருந்து எழுந்த உடனே உங்களுக்கு ஏதாகிலும் ஒரு நல்ல எண்ணம் உதிக்கின்ற போது அதையே பின்னர் பகற்பொழுதில் அனுசரித்தால் உங்களது புத்தியின் திறம் மலர்ந்து வெளிப்பட்டு மனது சாந்தியடையும் என்று ஒரு முனிவர் கூறியிருந்தார்.

ஹேமத்பந்த் இதை முயற்சிக்க விரும்பினார்.  ஒரு புதன்கிழமை இரவு படுக்கும்முன் அவர் சிந்தித்தார்.  "நாளை வியாழக்கிழமை ஒரு புனிதமான நாள், ஷீர்டியும் மிகவும் புனிதமான இடம்.  எனவே நான் நாளை முழுவதும் ராமநாமத்தை நினைவூட்டிக் கொள்வதிலும், போற்றுவதிலும் கழிப்பேன்" என்றவாறு அவர் உறங்கினார்.  அடுத்தநாள் காலை அவர் துயில் நீங்கி எழுந்தபோது, எவ்வித முயற்சியும் இன்றி ராமநாமத்தை நினைவு கூர்ந்தார்.  தமது காலைக் கடமைகளை முடித்துக்கொண்டபின், மலர்களுடன் பாபாவைக் காணச் சென்றார்.  தீஷித் வாதாவிலிருந்து புறப்பட்டு, பூட்டி வாதாவை (தற்போதைய சமாதி மந்திர்) கடந்து கொண்டிருக்கும் அதே தருணத்தில் பாபாவுக்கு முன்னால், மசூதியில் ஔரந்காபாத்கர் என்னும் இனிமையாகப் பாடப்படுகின்ற ஓர் அழகிய பாடலைக் கேட்டார்.  

அது ஏக்நாத்தின் 'குரு கிருபாஞ்ஜன் பாயோ மேரே பாயி.. !'  என்ற பாடல், அப்பாடலில் குருவின் கடாஷம் என்னும் ரூபத்தில் அஞ்சனம் அவருக்குக் கிடைத்தது என்றும், அது அவரின் பார்வையைத் திறந்துவிட்டு அவருக்கு ராமரை அகத்தும், புறத்தும், உறக்கத்திலும், கனவிலும், விழிப்பு நிலையிலும், எவ்விடத்தும் காணும்படி செய்தது என்றும் கூறினார்.  எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன.  பின்னர் ஏன் இக்குறிப்பிட்ட பாட்டு, பாபாவின் பக்தரான ஔரந்காபாத்கரினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  பகற்பொழுதில் ராமநாமத்தை இடைவிடாமல் பாடவேண்டும் என்ற ஹேமத்பந்த்தின் தீமானத்திற்கு ஊட்டமளிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டதல்லவா தனித்திறம் வாய்ந்த இந்நிகழ்வுப் பொருத்தம்!

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment