Friday, 10 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 24 - பகுதி 2

No comments

சணா லீலை:-

ஷீர்டியில் ஞாயிறுதோறும் சந்தை நடைபெறும்.  அண்டையிலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் அங்குவந்து தெருவில் பந்தல் கடைகளைப் போட்டு தங்களது பொருட்களையெல்லாம்  விற்பனை செய்வர்.  ஒவ்வொரு மாலையும் மசூதியில் ஏறக்குறைய கும்பல் வந்துவிடும்.  ஆனால் ஞாயிறு மாலையோ மூச்சுத் திணறும் அளவுக்குக் கூட்டம் கூடிவிடும்.  அத்தகைய ஒரு ஞாயிற்றுக் கிழமையின்போது ஹேமத்பந்த் பாபாவின் முன்னால் அமர்ந்து பாபாவின் கால்களை நீவிப் பிடித்துக்கொண்டும், கடவுள் பெயரை முணுமுணுத்துக்கொண்டும் இருந்தார்.

ஷாமா பாபாவின் இடப்பக்கத்திலும் வாமன்ராவ் வலப்பக்கத்திலும் இருந்தனர்.  அப்போது பாபா சிரித்துக்கொண்டே அண்ணா சாஹேபிடம், "பாரும் உமது கோட்டின் கை மடிப்பில் தானியங்கள் இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே அவர் கோட்டு மடிப்பைத் தொட்டு அங்கு தானியங்கள் இருப்பதைக் கண்டார்.  ஹேமத்பந்த் விஷயம் என்னவென்று அறிவதற்காகத் தனது இடது முழங்கையை நீட்டினார்.  அப்போது அனைவரின் ஆச்சரியத்திற்கேற்ப சில பருப்பு மணிகள் கீழே உருண்டோடி சுற்றி உட்கார்ந்திருந்தவர்களால் பொறுக்கியெடுக்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியே தமாஷிற்கான விஷயமாக ஆனது.  அங்கிருந்த அனைவரும் எங்ஙனம் தானியம் கோட்டு மடிப்புக்குள் சென்று அவ்வளவு நேரமும் அங்கேயே இருந்தன என்று யூகிக்க இயலவில்லை.  ஒருவரும் இவ்விஷயத்தில் திருப்தியான பதிலை அளிக்க இயலாத இவ்வினோதத்தைப் பற்றி அதிசயித்துக் கொண்டிருக்கையில் பாபா கூறினார்.

"இந்த ஆளுக்கு (அண்ணா சாஹேப்) தனியாகத் தின்னும் பழக்கம் இருக்கிறது.  இன்றைக்குச் சந்தை நாளாகையால் பருப்பு மணிகளை அசைபோட்டுக்கொண்டே வந்தார்.  அவர் பழக்கம் எனக்குத் தெரியும்.  அதற்கு இதுவே சாட்சி, இவ்விஷயத்தில் வேறென்ன ஆச்சரியமிருக்கிறது?"

ஹேமத்பந்த்: பாபா பொருட்களைத் தனியாகத் தின்று நானறியேன்.  பின்னர் என்மீது இந்தக் கெட்ட வழக்கத்தை ஏன் சுமத்துகிறீர்கள்?  ஷீர்டி சந்தையையே நான் இன்னும் பார்த்தது இல்லை.  இன்றைக்கு, சந்தைக்கு நான் போகவே இல்லை.  பின்னர் எங்ஙனம் நான் பருப்பு மணிகள் வாங்கியிருக்க முடியும்?  அவைகளை வாங்காதபோது எப்படி நான் உண்ணமுடியும்?  எனதருகில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் நான் ஒருபோதும் எதையும் சாப்பிடுவதில்லையே!

பாபா:  அருகிலிருப்பவர்களுக்கு நீர் கொடுப்பது உண்மைதான்.  ஆனால் ஒருவரும் அருகில் இல்லையென்றால் நீரோ, நானோ என்னசெய்யமுடியும்?  ஆனால் நீர் உண்ணும்முன் என்னை நினவு கொள்கிறீரா?  எப்போதும் நான் உம்முடன் இருக்கவில்லையா?  பின்பு நீர் உண்ணும் முன்பாக எதையேனும் எனக்கு அளிக்கிறீரா?

நீதி:-
இந்நிங்கழ்சியின் வாயிலாக பாபா நமக்கு என்ன போதிக்கிறார் என்பதைக் கவனத்துடன் நினைவில் வைப்போமாக!  புலன்கள் தரும் தேவைகளை அடையும் முன்னதாகவே மனமும், அறிவும் அவைகளின் பலன்களை அனுபவித்துவிடுகின்றன என பாபா அறிவுறுத்தியுள்ளார்.  முதலில் பாபாவை நினை.  அதுவே உன் மனதில் நிலைகொண்டுள்ள அவருக்கு நிவேதனம் செய்யும் முறையாகிறது.  புலன்கள் முதலியன தங்கள் தேவைகளை அடையாமல் இருக்க இயலாது.  ஆனால் அவைகள் முதலில் குருவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டால் அவைகளின் மீதுள்ள பற்று இயற்கையாகவே மறைந்துவிடுகிறது.  இவ்விதமாக ஆசை, கோபம், வெறுப்பு முதலியவை பற்றிய நமது எல்லா எண்ணங்களும் முதலில் குருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவரை நோக்கிச் செலுத்தும் பயிற்சியானது அளிக்கப்பட்டால் எல்லாவித எண்ணங்களையும் களைவதற்குக்
கடவுள் உதவிசெய்வார்.

பொருட்களை அனுபவிக்கும்முன் பாபா அருகிலோ, அல்லது அங்கிருப்பதாகவோ, நினைத்துக்கொண்டால் அப்பொருள் அவர் அனுபவிக்கத்தக்கதா அல்லவா என்ற கேள்வி உடனே எழும்.   பின் அனுபவிக்கத்தகாதவை எல்லாம் நம்மால் ஒதுக்கப்பட்டு, நமது தீய பண்புகள் அல்லது செயல்கள் நம்மைவிட்டு மறைகின்றன.  நமது பண்பும் வளர்கிறது.  பின்னர் குருவிடம் உள்ள அன்பு வளர்ந்து தூய ஞானம் துளிர்க்கிறது. 

இந்த ஞானம் வளரும்போது, 'நான்', 'எனது' என்ற எண்ணம் அழிந்து நமது அறிவு ஆன்ம உணர்வுடன் கலக்கிறது.  பின்னர் நாம் பேரின்பத்தையும், திருப்தியையும் பெறுகிறோம்.  குருவுக்கும், கடவுளுக்கும் பேதமில்லை.  அவர்களுள் பேதம் காண்பவன் கடவுளை எவ்விடத்தும் காண்பதில்லை.  எனவே பேத மனப்பான்மையை ஒழித்துக் குருவையும், கடவுளையும் ஒன்றாகக் கருதவேண்டும்.  எனவே எண்ண மாறுபாடுகளை நீக்கி குருவைக் கடவுளாக வழிபடவேண்டும்.  இவ்வாறு நமது குருவுக்குப் பணிவிடை செய்தோமானால் கடவுள் நிச்சயம் மகிழ்வடைந்து நமது மனத்தைத் தூய்மைப்படுத்தி நம்மை நாமே அறியும் உணர்வையளிக்கிறார்.  இரத்தினச் சுருக்கமாக, முதலில் குருவை நினைக்காமல் நாம் எப்பொருட்களையும் புலன்கள் வழி அனுபவிக்கக்கூடாது.

இவ்விதமாகப் பயிற்சியளிக்கப்பட்டால், நம் மனம் பாபாவால் நிறைந்து, பாபாவின் தியானம் விரைவில் வளரும்.  பாபாவின் சகுணரூபம் எப்போதும் நம் கண்முன் இருக்கும்.  பிறகு பக்தி, பற்றின்மை, முக்தி யாவும் நம்முடையதேயாம்.  இங்ஙனமாக நமது மனக்கண்ணில் பாபாவின் ரூபம் நிலைப்படுத்தப்பட்டால் நாம் பசி - தாகத்தையும், இச்சம்சார வாழ்க்கையையும் மறைந்துவிடுகிறோம்.  உலக போகங்களில் நமக்கிருக்கும் ஞாபகம் மறைந்துவிடும்.  நமது மனம் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடையும்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment