Friday, 10 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 24 - பகுதி 4

No comments

அண்ணா சிஞ்சணீ கரும் மௌஷிபாயியும்:-

ஹேமத்பந்த் இப்போது சமாதானம் நிலைநாட்டுவோரின் பாகத்தை பாபா ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார்.  தாமோதர் கனஷ்யாம் பாபரே என அழைக்கப்பட்ட அண்ணா சிஞ்சணீ கர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார்.  அவர் எளிமையானவர், முரடர், நேர்மையானவர்.  அவர் எவரையும் இலட்சியம் செய்யமாட்டார்.  எப்போதும் கரவின்றிப் பேசி எல்லாவற்றையும் கைமேல் காசிலேயே நடத்தினார்.  வெளிப்படையாகக் கடுமையாகவும், வசப்படாதவராயும் இருந்தபோதும் அவர் நட்பண்புடையவராயும், கள்ளமின்றியுமிருந்தார்.  எனவே சாயிபாபா அவரை நேசித்தார்*.  (* இவர் பின்னர் தனது சொத்துக்கள் யாவற்றையும் ஷீர்டி சாயிபாபா சமஸ்தானத்துக்கு எழுதி வைத்தார்.)

ஒருநாள், ஒவ்வொருவரும் ஒரு வழியில் சேவை செய்வதைப்போன்று, அண்ணாவும் தலைகுனிந்து நின்றுகொண்டு கைப்பிடியில் இருந்து இடது கைக்கு நீவிக்கொண்டிருந்தார்.  அம்மா என்று பாபாவாலும் மௌஷிபாயி என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழ விதவையான வேணுபாஜி கௌஜல்கி வலது புறத்தில் அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள்.  மௌஷிபாயி தூய உள்ளத்துடன் கூடிய முதியவள்.  அவள் தன் இரு கைவிரல்களையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாக பதித்துப் பிசைந்தாள். 

அடிவயிறே தட்டையாகி விடும்படியான வேகத்துடன் சேவை செய்துகொண்டிருந்தாள்.  பாபா இப்படியும் அப்படியும் புரண்டுகொண்டிருந்தார்.  மற்றொருபுறமிருந்த அண்ணா நிதானத்துடன் இருந்தார்.  ஆனால் மௌஷிபாயின் அசைவுகளுடன் அவளது முகமும் அசைந்தது.  ஒருதரம் அவளது முகம் அண்ணாவின் முகத்திற்கு மிக அருகில் வந்துவிட்டது.  வேடிக்கையான பண்புடைய அவள், "ஓ! இந்த அண்ணா ஒரு கெட்டவன்.  அவன் என்னை முத்தமிட விரும்புகிறான்.  தலை நரைக்கும் வயதாகியும் முத்தமிடுவதற்கு அவன் வெட்கப்படவில்லை" என்றாள்.  இச்சொற்கள் அண்ணாவைக் கொபாவேசமடையச் செய்தன.  முஷ்டியை மடக்கிவிட்டுக்கொண்டு அவர் "நான் ஒரு கெட்ட கிழவன் என்றா கூறுகிறாய்?  நான் அவ்வளவு முட்டாளா?  நீயே சண்டையை ஆரம்பித்தாய், என்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர்களுக்கிடையே நடைபெறும் விஷயங்களை ரசித்துக்கொண்டிருந்தனர்.  அவர்கள் இருவரையுமே பாபா சமமாக நேசித்தார்.  சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார்.  அன்புடன் அவர் கூறினார்.  "அண்ணா, ஏன் அனாவசியமாக இக்கூச்சலையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்?  தாய் முத்தமிடும்போது உள்ள நெறியின்மை அல்லது தீங்குதான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை?" என்றார்.  பாபாவின் இம்மொழிகளைக் கெட்ட இருவரும் திருப்தியடைந்தனர்.  எல்லோரும் மன மகிழ்வுடன் தங்கள் உளம் நிறைவடையும்வரை சிரித்தனர்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)



No comments :

Post a Comment