Friday, 10 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 25 - பகுதி 2

No comments

தாமு அண்ணா:-

அத்தியாயம் 6ல் ஷீர்டியில் ராமநவமித் திருவிழா சம்பந்தமாக இவரைப்பற்றி முன்னமே கூறப்பட்டிருப்பதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள்.  ஏறக்குறைய 1895ல் ராமநவமி உற்சவக் கொண்டாட்டம் துவக்கப்பட்டபோது அவர் ஷீர்டிக்குச் சென்றார்.  அதிலிருந்து ஒவ்வொரு வருட விழாவின்போதும் அவர் அலங்காரக் கொடியையோ அல்லது பொம்மையுள்ள குச்சியையோ ஏற்பாடு செய்துவந்தார்.  அவ்விழாவுக்கு வரும் ஏழைகளுக்கும், பக்கிரிகளுக்கும் அன்னதானம் செய்தார். 

அவரது வியாபார ஊக பேரங்கள்:

(1)  பஞ்சு

தாமு அண்ணாவும், பம்பாய் நண்பரொருவரும் கூட்டாகப் பஞ்சு பேர வியாபாரம் செய்யவேண்டுமென்றும் அது பல இலட்சங்களை இலாபமாகக் கொணரும் என்றும் எழுதியிருந்தார்.  (ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியிடம் 1936ல் தாமு அண்ணா கொடுத்த வாக்குமூலத்தின்படி, பம்பாய் விவகாரம் கூட்டாளி இல்லாமல் தரகர் ஒருவரிடமிருந்து பெற்றதென்பதும், தாமு அண்ணா மட்டும் இலாபம் பெறுவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.   ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் (1874-1956) சென்னை, திருமலை சாயிபாபா கோவிலையும், அகில இந்திய சாயி சமாஜத்தையும் நிறுவியவர்)      

வியாபாரம் நன்றாயிருக்கிறது என்றும், எவ்வித அபாயமுமில்லை என்றும் வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என்றும் தரகர் எழுதி இருந்தார்.  தாமு அண்ணா மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் உடனே முடிவெடுக்க அவரால் முடியவில்லை.  இதைப்பற்றி அவர் சிந்தித்தார்.  அவர் பாபாவின் பக்தர்.  எல்லாத் தகவல்களையும் கொடுத்து அவர் ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.  இதுகுறித்து பாபாவைக் கேட்டு அவரது ஆலோசனையை எழுதும்படியும் வேண்டிக்கொண்டிருந்தார்.  அடுத்தநாள் கடிதம் ஷாமாவுக்குக் கிடைத்தது.  மத்தியானம் மசூதிக்கு வந்து, அதை பாபாவின் முன் வைத்தார்.  ஷாமாவை விஷயம் என்னவென்று கேட்டு, கடிதம் எதைப்பற்றியது என்று வினவினார்.

ஷாமா:  சில விஷயங்கள் பற்றி அகமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா தங்களைக் கேட்க விரும்புகிறார். 

பாபா:  அவன் என்ன எழுதுகிறான்.  என்ன திட்டம் போடுகிறான்?  கடவுள் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல் ஆகாயத்தைப் பிடிக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது.  கடிதத்தைப் படி.

ஷாமா:  தாங்கள் இப்போது கூறியதைத் தான் இக்கடிதம் கூறுகிறது.  ஓ! தேவா, நீங்கள் இங்கே அமைதியாகவும், அடக்கமாகவும் அமர்ந்துகொண்டு பக்தர்களைக் குழம்பச்செய்து அவர்கள் அமைதியற்றுத் தவிக்கும்போது சிலரைக் கடிதம் மூலமாகவும், சிலரை நேரடியாகவும் இங்கு இழுக்கிறீர்கள்.  கடிதத்தில் அடங்கியுள்ள விஷயம் தங்களுக்கு தெரியுமென்றால் பின் என்னை ஏன் படிக்கும்படி சொல்லி வற்புறுத்துகிறீர்கள்?

பாபா: ஓ! ஷாமா, தயவுசெய்து அதைப்படி, சந்தர்ப்பவசமாக நான் ஏதாவது பேசுவேன்.  அதை யார் நம்புவார்கள்?

பின் ஷாமா அக்கடிதத்தை வாசித்தார்.  பாபா அதைக் கவனத்துடன் கேட்டு உணர்ச்சியுடன் கூறினார், "சேட்டுக்கு (தாமு அண்ணாவுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது.  அவனது வீட்டில் எதுவும் தேவையிருக்கவில்லை.  இப்போது அவனுக்கு இருப்பதைக்கொண்டு திருப்தியடைந்து இலட்சங்களைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்படி பதில் எழுது."

தாமு அண்ணா ஆவலுடன் காத்திருந்த பதிலை ஷாமா அனுப்பினார்.

அதைப்படித்துவிட்டு இலட்சரூபாய்களை இலாபமாகப் பெறவிருந்த அவரின் ஆர்வமும், நம்பிக்கையும் தரைமட்டமாக்கப்பட்டத்தை அறிந்தார்.  பாபாவைக் கலந்தாலோசித்ததில் தாம் தவறு செய்துவிட்டதாகக் கருதினார்.  ஆனால் பதிலில் ஷாமா, பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகவும், அவரே ஷீர்டிக்கு நேரடியாக வரவேண்டுமெனவும், பாபாவைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததால் தாமே ஷீர்டிக்குச் சென்று பாபாவை நேரடியாக இவ்விஷயத்தைப் பற்றிக் கேட்பதே சரியானது என்று நினைத்தார்.  எனவே அவர் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் கண்டு, வீழ்ந்துபணிந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.  விவகாரத்தைப் பற்றி வெளிப்படையாகக் கேட்க அவருக்குத் தைரியமில்லை.  பாபாவுக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தால் நலமாயிருக்கும் என அவர் எண்ணினார்.

பாபா இந்த வியாபாரத்தில் தமக்கு உதவி செய்தால் அவருக்குக் கொஞ்சம் பங்கையோ, இலாபத்தையோ அளிக்கலாம் என மனதில் நினைத்தார்.  தாமு அண்ணா தன மனதில் இரகசியமாகச் சிந்திதுக்கொண்டிருந்தார்.  ஆனால் பாபாவுக்கு எதுவுமே திரையிடப்பட்டிருக்கவில்லை.  நடந்தது, நடப்பது, நடக்கப்போவது யாவும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக இருந்தது.  குழந்தை இனிப்பை விரும்புகிறது.  ஆனால் தாய் அதற்குக் கசப்பான மாத்திரைகளைப் புகட்டுகிறாள்.  முன்னது அதன் தேக நிலைக்குக் கேடு செய்கிறது.  பின்னது நலப்படுத்துகிறது.  சிசுவின் நலன்கருதியே தாய் கசப்பான மாத்திரையை அதற்குச் சமாதானம் செய்து புகட்டுகிறாள்.

அன்பான தாயான பாபாவும், பக்தர்களின் நிகழ்கால, எதிர்கால நன்மைகளை அறிந்தவராதனால் தாமு அண்ணாவின் மனதில் இருப்பதை அறிந்து, "பாபு, அம்மாதிரியான உலக விவகாரத்திலெல்லாம் (இலாபப் பங்கு) நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை" என்றார்.  பாபாவின் சம்மதமின்மையை அறிந்த தாமு அண்ணா அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

2 .  தானிய வியாபாரம்

பின் அவர் தானியம், அரிசி, கோதுமை, பலசரக்குச் சாமான்கள் இவைகளில் வியாபாரம் செய்யலாம் என நினைத்தார்.  பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்து "ரூபாய்க்கு 5 சேர் என வாங்கி 7 சேர் என விற்பாய்" எனக் கூறினார்.  எனவே இந்த வியாபாரமும் கைவிடப்பட்டது.  தானிய விலையேற்றம் சிலநாள்வரை இருந்தது.  பாபாவின் தீர்க்க தரிசனம் பொய்யாகிவிடும்போல் தோன்றியது.  ஆனால் ஓரிரண்டு மாதங்களில் எங்கும் மழை பெய்து, விலைகளெல்லாம் திடீரென இறங்கிப் போய்விட்டன.

எனவே தானியத்தைச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தனர்.  இவ்விதியிலிருந்து தாமு அண்ணா காப்பாற்றப்பட்டார்.  மற்றொரு வியாபாரியுடன் தரகர் நடத்திய பஞ்சு வியாபாரமும் பயங்கரமான நஷ்டம் அடைந்ததெனக் கூறத்தேவையில்லை.  பஞ்சு, தானியம் என்ற இரண்டு வியாபாரங்களிலும் உள்ள பலத்த நஷ்டத்தில் இருந்து தன்னைக் காப்பற்றியதைக் கண்ட தாமு அண்ணாவின் நம்பிக்கை பலமடைந்து பாபாவின் உண்மை பக்தராக இன்றுவரை கூட இருந்து வருகிறார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)


No comments :

Post a Comment