Friday, 10 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 25 - பகுதி 1

No comments

முன்னுரை:-

கருணைக் கடலும், ஈசுவர அவதாரமும், பரப்பிரம்மமும், மாபெரும் யோகீஸ்வரனும் ஆகிய சாயிபாபாவுக்கு நமது அஷ்ட அங்கங்களாலும் நமஸ்கரித்துவிட்டு நாம் இந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறோம்.  ஞானிகளின் முடிமணியாகவும், எல்லாப் புனிதப் பொருட்களின் இருப்பிடமாகவும் நமது ஆத்மராமனேயனாகவும், பக்தர்களுக்கு ஒரு வல்லமை வாய்ந்த அடைக்கலப் பொருளாகவும் விளங்கும் சாயிபாவுக்கு ஜெயம் உண்டாகட்டும்.  வாழ்க்கையின் இலட்சியம், குறிக்கோள் இவற்றை எய்திய அவர்முன் வீழ்ந்து வணங்குவோம்.

சாயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார்.  அவர்பால் முழுமனதான பக்தியே நம்மைப் பொறுத்தவரை தேவைப்படுவதாகும்.  உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன.  சாயிபாபாவின் வாழ்க்கையையும், லீலைகளையும் எழுதவேண்டுமென்ற ஆர்வம் ஹேமத்பந்தின் உள்ளத்தில் எழுந்தபோது அதை உடனே அவரைக்கொண்டு எழுதிமுடிக்கச் செய்தார்.  குறிப்புகள், ஞாபகங்கள் இவைகளை வைத்துக்கொள்ள உத்தரவு கொடுக்கப்பட்டபோது, ஹேமத்பந்த் உணர்வூட்டப்பெற்றார்.  அவரது அறிவு, வேலையை மேற்கொண்டு முடிப்பதற்கு வேண்டிய உறுதியும், தைரியமும் பெற்றது. 

இப்பணியை மேற்கொள்ளத் தாம் தகுதியுடியவரல்ல என்றும், ஆனால் பாபாவின் அருள் நிறைந்த ஆசீர்வாதங்களே மேற்கொண்ட பணியை சம்பூர்ணம் செய்வதற்கு அவரை ஊக்குவித்தது என்றும் அவர் கூறினார்.  எனவே சத்சரிதம் என்ற இக்கிணற்றிலிருந்து அல்லது நீர்த்தேக்கத்தினின்று அல்லது சோமகாந்தக்கல்லிலிருந்து சாயி லீலைகள் என்ற ரூபத்தில் அமிர்தம் ஊறி வருகிறது.  படிப்போர் அதை மனதாறப் பருகுகிறார்கள்.

சாயிபாபாவின் மீது எந்த ஒரு பக்தனுக்கு முழுமனதான, பூரணமான பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்பட்டு அவனது நலம் பாபாவால் கவனிக்கப்படுகிறது.  அகமத்நகரிலிருந்த (பிற்பாடு புனே) தாமோதர் சாவ்லாராம் ராஸனே காஸார் என்ற தாமு அண்ணாவின் கதை மேற்கூறிய கருத்தின் விளக்கமாகக் கீழே தரப்படுகிறது.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                            (தொடரும்…)


No comments :

Post a Comment