Sunday, 12 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 27 - பகுதி 6

No comments
கபர்டே குடும்பம்:-

கபர்டேயைப் பற்றிய விளக்கங்களுடன் இவ்வத்தியாயத்தை நாம் முடிப்போம்.  ஒருமுறை தாதா சாஹேப் கபர்டே தன் குடும்பத்துடன் ஷீர்டிக்கு வந்து சில மாதங்கள் தங்கியிருந்தார்.  (அவர் தங்கியிருந்ததன் நாட்குறிப்பு சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7) ஆங்கிலத்தில் பதிக்கப்பட்டு, தற்போது தமிழில் "கபர்டே டைரி"யாக மொழிபெயர்க்கப்பட்டு சமஸ்தானத்தால் வெளியிடப்பட்டுள்ளது.)

தாதா சாஹேப் சாதாரண மனிதரல்ல.  அவர் அமராவதியின் மிகப்பெரிய பணக்காரர், மிகவும் புகழ்பெற்ற அட்வகேட்டும், டெல்லி கவுன்சிலின் அங்கத்தினர்களுள் ஒருவரும் ஆவார்.  மிகுந்த புத்திசாதுர்யமுடையவரும், மிகச்சிறப்பான பேச்சாளருமாவார்.  ஆயினும் பாபாவின் முன் வாய்திறக்க அவருக்குத் தைரியமில்லை.  பெரும்பாலான பக்தர்கள் பாபாவுடன் அடிக்கடி பேசி விவாதித்தனர்.  ஆனால் கபர்டே, நூல்கர், பூட்டி ஆகிய மூவர் மட்டும் எப்போதும் மெளனமாக இருந்தனர்.  அவர்கள் சாந்தம், எளிமை, பொறுமை, நற்பண்பு வாய்க்கப்பெற்றவர்கள்.  தாதா சாஹேப் மற்றவர்களுக்கு பஞ்சதசியை (புகழ்பெற்ற வித்யாரண்யாரால் இயற்றப்பெற்ற அத்வைத தத்துவத்தைப் பற்றிய பிரசித்தமான சம்ஸ்கிருத நூல்) படித்து விளக்கம் செய்யும் வல்லமை உடையவர்.  அவர் மசூதிக்கு பாபாவின்முன் வந்தபிறகு ஒருவார்த்தைகூடப் பேசமாட்டார். 

வேதங்களில் கூட ஒருவன் எவ்வளவுதான் கற்றுத் தேறியிருப்பினும் பிரம்மத்தை அறிந்தவன்முன் உண்மையிலேயே மங்கிவிடுகிறான்.  ஆன்ம அறிவின்முன் கல்வி பிரகாசிக்க முடியாது.  தாதா சாஹேப் நான்கு மாதங்கள் தங்கியிருந்தார்.  ஆனால் அவர் மனைவியோ ஏழு மாதங்கள் தங்கியிருந்தாள்.  இருவரும் தங்களின் ஷீர்டி வாசத்தைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.  திருமதி கபர்டே பாபாவின்பால் விசுவாசம், பக்தி, ஆழ்ந்த அன்பு இவைகளைக் கொண்டிருந்தாள்.  ஒவ்வொரு மதியமும் மசூதிக்கு அவளே பாபாவுக்கு நைவேத்தியத்தை எடுத்து வருவாள்.  அது பாபாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்புதான் அவள் உண்ணச் செல்வாள்.  அவளது நிதானமான, உறுதியான பக்தியை பாபா மற்றவர்களுக்குக் காட்ட விரும்பினார்.  ஒருநாள் அவள் சன்ஸா (கோதுமை பலகாரம்), பூரி, சாதம், சூப், சர்க்கரைப் பொங்கல், வற்றல் இவைகளுடன் மசூதிக்கு வந்தாள்.  வழக்கமாக மணிக்கணக்கில் காக்கும் பாபா உடனே எழுந்திருந்து தனது சாப்பாட்டு இடத்துக்குச் சென்று, பாத்திரத்தின் மூடியை எடுத்துவிட்டு ஊக்கத்துடன் அவைகளை உண்ணத் தொடங்கினார். 

ஷாமா:  ஏன் இந்தப் பாரபட்சம்?  மற்றவர்களின் உணவை வீசியெறிந்துவிட்டு, அவைகளைக் கண்ணெடுத்துப் பார்ப்பதற்கும் கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள்.  ஆனால் இதையோ தாங்களே ஊக்கத்துடன் வாங்குகிறீர்கள்.  அதற்கு நியாயம் செய்யுங்கள்.  இப்பெண்மணியின் பலகாரங்கள் மட்டும் ஏன் அவ்வளவு இனிமையாக இருக்கின்றன?  இது எங்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

பாபா:  உண்மையிலேயே இவ்வுணவு அசாதாரனமானதுதான்.  முந்தைய பிறவியில் இவள், ஒரு வியாபாரியின் கொளுத்த பசுவாக அதிக பால் கொடுத்து வந்தாள்.  பின்னர் அவள் மறைந்து ஒரு தோட்டக்காரன் குடும்பத்திலும், பின்னர் ஒரு ஷத்திரியக் குடும்பம் ஒன்றிலும் பிறந்து, ஒரு வணிகனைத் திருமணம் செய்துகொண்டாள்.  பின்னர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தாள்.  மிக நீண்ட காலத்துக்குப் பின் நான் அவளைக் காண்கிறேன்.  அவளது பாத்திரத்திலிருந்து சில அன்புக் கவளங்களை நான் உண்பேன்.  இவ்வாறு கூறிக்கொண்டே அவளது பலகாரத்துக்குரிய முழுத் தீர்ப்பையும் வழங்கி, தமது வாய், கை முதலியவற்றைக் கழுவிக்கொண்டு மனநிறைவின் அறிகுறியாக ஏப்பம் விட்டுத் தமது இருக்கையில் அமர்ந்தார். 

பின்னர் அவள் வணங்கி அவர் கால்களைப் பிடித்துவிடத் தொடங்கினாள்.  பாபா ஆவலுடன் பேசத்தொடங்கி தம் கைகளைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்த கையை ஆதரவாகப் பிடித்துவிடத் தொடங்கினார்.  இந்தப் பரஸ்பர சேவையைக் கண்டுவிட்டு ஷாமா வேடிக்கை செய்ய ஆரம்பித்தார்.  "இது நன்றாக இருக்கிறது.  கடவுளும் - பக்தையும் ஒருவருக்கொருவர் சேவை செய்து கொள்வதைக் காண்பது அற்புதக் காட்சியாகும்" என்றார்.  அவளது விசுவாசமான சேவையைக்கண்டு பாபா அவளை, மெதுவான, மிருதுவான அற்புதமான குரலில் 'ராஜாராமா…! ராஜாராமா…!" என்று அப்போதிலிருந்து எப்போதும் ஸ்மரிக்கும்படியாகக் கூறி "இதை நீ செய்துவந்தால், உனது வாழ்க்கையின் நோக்கத்தை எய்துவாய்.  உனது மனம் சாந்தி பெற்று பெருமளவு நீ பயனடைவாய்" என்றார்.  ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பழக்கமில்லாதவர்களுக்கு இது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றும்.  உண்மையில் அது அவ்வாறில்லை.  'சக்தி-பாத்' என்றழைக்கப்படும் குருவின் சக்தியை சீடனுக்கு மாற்றிவிடுவதாகும்.  பாபாவின் மொழிகள் எவ்வளவு வல்லமை வாய்ந்தவைகளாகவும், பலனுள்ளவையாகவும் இருக்கின்றன.  ஒரே வினாடியில் அவைகள் அவளது உள்ளத்தைத் துளைத்து அங்கே இடம் பிடித்துக்கொண்டன.

குருவுக்கும், சீடனுக்கும் இருக்கவேண்டிய உறவுத் தன்மையைப் பற்றி இந்நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது.  இருவரும் ஒருவருக்கொருவர் அன்புகூர்ந்து சேவை செய்யவேண்டும்.  அவர்களிடையே எவ்விதப் பாகுபாடும், வித்தியாசமும் இல்லை.  இருவரும் ஒருவரே.  ஒருவரில்லாமல் மற்றவர் வாழ முடியாது.  சீடன் குருவின் பாதங்களில் தனது தலையை வைப்பது புறத்தோற்றமே.  உண்மையில் அந்தரங்கமாக அவர்கள் ஒன்றேயாம்.  அவர்களிடையே எவ்விதப் பாகுபாட்டையும் காண்பவன் இன்னும் பக்குவமடையாதவன், ஒழுங்கற்றவன்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)



No comments :

Post a Comment