நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி:
இப்போது இவ்வத்தியாயத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமான கதைக்கு வருவோம். நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேடில், ஒரு பார்சி மில் காண்ட்ராக்டரும், வியாபாரியுமான ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் வசித்து வந்தார். அவர் பெருமளவு செல்வம் சேகரித்து வயல்களையும், நிலங்களையும் பெற்றிருந்தார். ஆடு, மாடு, குதிரை, போக்குவரத்து வசதிகள் இவ்வளவையும் பெற்று மிகவும் சுபிட்சத்துடன் இருந்தார். புறத்தோற்றங்கள் அனைத்திற்கும் மிகவும் திருப்தி வாய்ந்தவராகவும், சந்தோஷமுடையவராகவும் காணப்பட்டார். ஆனால் அந்தரங்கமாகவும், உண்மையாகவும் அவர் அங்ஙனம் இருக்கவில்லை. எவரும் முழுமையும் செல்வந்தராகவும், மகிழ்ச்சியுற்றவராகவும் இருக்கக்கூடாதென்பது பரலோகத் தீர்ப்பாய் இருக்கிறது. ரத்தன்ஜியும் இதற்கு விதிவிலக்கல்ல.
அவர் தாரளமானவராயும், தான தர்மசீலராயும், ஏழைகட்கு உணவு, உடையளித்தும் அனைவருக்கும் பல்லாற்றானும் உதவிபுரிந்தார். மக்கள் அவரை நல்லவர், மகிழ்ச்சி நிரம்பியவர் என்று கருதினர். ஆனால் நெடுநாளாகத் தனக்கு ஆணோ, பெண்ணோ எக்குழந்தையுமே இல்லாததனால் தமக்குள்ளேயே அவர் மிக்க துயர் கொண்டவரானார். அன்பும் பக்தியுமின்றிப் பாடப்பெறும் இறைவன் புகழ் குறித்த கீர்த்தனை போன்றும், பக்க வாத்தியங்களற்ற இசையைப் போன்றும், பூணூல் அற்ற பிராமணனைப் போன்றும், பொது அறிவின்றிக் கலைகளில் பெற்ற சிறப்பறிவைப் போன்றும், பாவத்திற்காகக் கழிவிரக்கமின்றிச் செய்யும் தீர்த்த யாத்திரையைப் போன்றும், அட்டிகை அற்ற ஆபரண அணிமணிகள் போன்று அழகற்றதாகவும், பயனற்றதாகவும் இருப்பதைப் போன்றே ஆண் குழந்தையற்ற இல்லறத்தானுடைய நிலையுமாம்.
இவ்விஷயத்தைப் பற்றியே ரத்தன்ஜி சதா சிந்தித்து, எனக்கொரு புத்திரனைக் கடவுள் எப்போதாவது மகிழ்ந்தருளுவாரா? என்று ஏங்கினார். இவ்வாறாக அவர் கலகலப்பின்றியும், முகவாட்டத்துடனும் காணப்பட்டார். உணவில் அவருக்குச் சுவை ஈடுபாடு இல்லை. தான் ஒரு புதல்வனுக்காக ஆசீர்வதிக்கப்படுவோமோ என்று அவர் அல்லும் பகலும் இதே கவலையால் பீடிக்கப்பட்டார். தாஸ்கணு மகராஜிடம் அவருக்கு மரியாதை அதிகம். அவரைக் கண்டு தன் உள்ளத்தை வெளியிட்டார். தாஸ்கணுவும் அவரை ஷீர்டிக்குப் போகும்படியும், பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர்தம் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதத்தைப் பெற்று குழந்தை வேண்டுமென வேண்டிக்கொள்ளவும் அவருக்கு அறிவுறுத்தினார். ரத்தன்ஜிக்கு இக்கருத்துப் பிடித்தது. ஷீர்டிக்குப் போகவும் தீர்மானித்தார்.
சில நாட்களுக்குப் பின்னர் அவர் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர் பாதங்களில் வீழ்ந்தார். பிறகு தம் கூடையைத் திறந்து ஒரு அழகிய பூமாலையை எடுத்து, அதை பாபாவின் கழுத்திலிட்டுக் கூடைநிறையப் பழங்களையும் சமர்ப்பித்தார். பாபாவுக்கு அருகில் மிக்க மரியாதையுடன் அவர் அமர்ந்து பின்வருமாறு வேண்டத்தொடங்கினார். "இக்கட்டான நாட்களில் இருக்கும்போதே அநேகர் தங்களிடம் வருகிறார்கள். தாங்கள் அவர்களின் துன்பங்களை உடனே துடைக்கிறீர்கள். இதைக்கேட்டு நான் தங்களது பாதகமலத்தை அடைக்கலம் புகுந்தேன். ஆகவே தயவுசெய்து என்னை ஏமாற்றாதீர்கள்".
பாபா ரத்தன்ஜி கொடுக்க இருந்த ரூ.5 ஐக் கேட்டார். ஆனால் ரூ. 3.14 ஐத் தாம் முன்னரே வாங்கிக்கொண்டதாகவும், மீதத்தையே கொடுக்கவேண்டும் என்றார். ரத்தன்ஜி பெரிதளவில் குழப்பமடைந்தார். பாபா என்ன கூறினார் என்று அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை. அவர் ஷீர்டிக்குச் செல்வது இதுவே முதல்முறை. முன்னமே ரூ. 3.14 ஐ தாம் வாங்கிக்கொண்டதாக பாபா கூறியது எங்ஙனம் என்று அவர் நினைத்தார். அவரால் புதிரை விடுவிக்க இயலவில்லை. ஆனால் அவர் பாபாவின் பாதத்தடியில் அமர்ந்து, கேட்கப்பட்ட மீதமுள்ள தட்ஷிணையை அளித்தார்.
பாபாவிடம் தாம் வந்த காரணத்தை முழுமையும் விளக்கிக்கூறி, அவருடைய உதவியைக் கோரினார். தமக்கு ஒரு புத்திரனை பாபா ஆசீர்வதித்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
பாபாவும் மனதுருகி, அவரைக் கவலைப்படாமல் இருக்கும்படியும், அதிலிருந்து அவரின் கஷ்டமான நாட்கள் முடிந்துவிட்டன என்றும் கூறினார். பினார் அவருக்கு உதியை அளித்து, அவரது தலையில் கையை வைத்து, அல்லா அவரது உள்ளத்தின் ஆசையைப் பூர்த்திசெய்வார் என்றும் கூறினார்.
பின்னர் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு நாந்தேடுக்குத் திரும்பி, ஷீர்டியில் நடந்த எல்லாவற்றையும் தாஸ்கணுவுக்குக் கூறினார். அங்கு எல்லாம் நன்றாகவே நிறைவேறியதாகவும், தாம் பாபாவின் தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும், பிரசாதத்துடன் பெற்றதாகவும், ஆனால் அவரால் ஒன்றை மட்டுமே புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். பாபா அவரிடம் தாம் ஏற்கனவே ரூ 3.14 ஐ வாங்கிக்கொண்டதாகக் கூறினார். இக்குறிப்பினால் பாபா என்ன கூறுகிறார் என்பதைத் தயவுசெய்து விவரியுங்கள். நான் ஷீர்டிக்குப் போனதேயில்லை. பிறகு பாபாவிடம் அத்தொகையை நான் எவ்விதம் கொடுத்திருக்க முடியும் என்று தாஸ்கணுவிடம் கூறினார். தாஸ்கணுவுக்கும் அது ஒரு புதிராகத்தான் இருந்தது. அதைப்பற்றிப் பெரிதும் அவர் நீண்ட நேரம் சிந்தித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு பின்வரும் நிகழ்ச்சி அவர் கவனத்திற்கு வந்துற்றது. சில நாட்களுக்கு முன் ரத்தன்ஜி, மௌலா சாஹேப் என்ற ஒரு முஹமதிய முனிவரை வரவேற்று, அவரின் வரவேற்பு உபசாரணைக்காக கொஞ்சம் பணம் செலவழித்தார்.
மௌலா சாஹேப், நாந்தேட் மக்கள் நன்றாக அறிந்த ஒரு முனிவர். (சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தவர்) ரத்தன்ஜி ஷீர்டிக்குப் போகத் தீர்மானித்தபோது, இந்த மௌலா சாஹேப் தற்செயலாய் ரத்தன்ஜியின் வீட்டிற்கு வந்தார். ரத்தன்ஜி அவரை அறிந்திருந்தார். அவரிடம் அன்பு செலுத்தினார். எனவே அவரைக் கௌரவிக்குமுகமாக ஒரு விருந்து கொடுத்தார். தாஸ்கணு, ரத்தன்ஜியிடமிருந்து விருந்து உபசாரத்துக்கான செலவுக் குறிப்புக்களை வாங்கிப் பார்த்தார். எல்லாம் சரி நுட்பமாக ரூ 3.14 ஆகியிருந்தது. அதற்குக் கூடவோ, குறையவோ இல்லாதது கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் செயலிழந்தனர். அவர்கள் பாபா எங்கும் நிறை பேரறிவுடையார் என்பதை அறியத் தலைப்பட்டார்கள். ஷீர்டியில் வாழ்ந்தாலும், ஷீர்டியிலிருந்து நெடுந்தூரம் உள்ள வெளியிடங்களில் நடப்பதையும் அவர் அறிந்திருந்தார்.
உண்மையில் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் அறிந்திருந்தார். எவருடைய நெஞ்சத்தினுள்ளும், ஆவியினுள்ளும் தம்மை அவர் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மௌலா சாஹேபிடம் தம்மைக் காணாமலும், அவருடன் தாம் ஒன்றாகவும் இல்லாதிருப்பின் ரத்தன்ஜி மௌலா சாஹேபுக்குக் கொடுத்த வரவேற்பு பற்றியும், அதற்கு அவர் செலவழித்த தகையைப் பற்றியும் பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?
ரத்தன்ஜி தாஸ்கணுவின் விளக்கத்தால் திருப்தியுற்றார். பாபாவிடம் அவருக்குள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுப் பல்கிப் பெருகியது. பின்னர் உரிய காலத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை ஆசீர்வதிக்கப்பட்டது. அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் மொத்தத்தில் பிறந்தன என்றும் அதில் நான்கே உயிர் பிழைத்தன என்றும் கூறப்படுகிறது.
இவ்வத்தியாயத்தின் அடிக்குறிப்பில் பாபா, ராவ்பகதூர் ஹரி விநாயக் சாதே என்பவரை, அவர் முதல் மனைவி இறந்த பின்னர் மீண்டும் மணம் செய்துகொள்ளும் படியும், அவருக்கு மகன் பிறப்பான் என்றும் கூறினார். சாதே இரண்டாவது மணம் புரிந்துகொண்டார். இம்மனைவி மூலம் அவருக்குப் பெண் குழந்தைகளே பிறந்தன. எனவே அவர் மிகவும் மனத்தளர்வடைந்தார். ஆனால் மூன்றாவது ஆண் குழந்தையாகப் பிறந்தது. பாபாவின் சொற்கள் உண்மையாயின. அவரும் திருப்தியுற்றார்.

No comments :
Post a Comment