தட்ஷிணை - மீமாம்ஸம் (தட்ஷிணை பற்றிய தத்துவம்):
தட்ஷிணையைப் பற்றிய சில குறிப்புக்களுடன் இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம். பாபாவைப் பார்க்கச் சென்றவர்களிடத்து அவர் தட்ஷிணை கேட்டார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. சிலர் பாபா ஒரு பக்கிரியாகவும் அறவே பற்றன்றியும் இருந்தால், அவர் ஏன் தட்ஷிணை கேட்கவேண்டும்? ஏன் பணத்தைப்பற்றி இலட்சியம் செய்யவேண்டும்? என்று வினவலாம். இவைகளை இப்போது விளக்கமாகக் கவனிப்போம்.
ஆரம்பத்தில் நெடுநாட்களுக்கு பாபா எதையுமே கேட்கவில்லை. அவர் எரிக்கப்பட்ட தீக்குச்சிகளைச் சேமித்து தம் பைகளில் வைத்துக்கொண்டார். எவரிடமிருந்தும், அவர் அடியவராக இருப்பினும் பாபா எதையும் ஒருபோதும் கேட்கவில்லை. யாராவது ஒரு பைசாவோ, இரண்டு பைசாவோ அவர் முன்னால் வைத்தால், அவர் எண்ணெயோ அல்லது புகையிலையோ வாங்கினார். அவர் புகையிலையின் மீது விருப்பமுடையவராக இருந்தார். ஏனெனில் அவர் எப்போதும் பீடி அல்லது சில்லிம் (புகைபிடிக்கும் ஒரு மண்குழாய்) குடித்தார்.
பின்னர் சில ஞானிகள் வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என நினைத்தனர். எனவே அவர்கள் பாபாவின் முன்னால் சில செப்புக் காசுகளை வைத்தனர். ஒரு பைசா கொடுக்கப்பட்டால் அதை அவர் பைக்குள் போட்டுக்கொள்வார். இரண்டு பைசா நாணயமாக இருப்பின் அது உடனே திருப்பிக் கொடுக்கப்படும். பாபாவின் புகழ் திக்கெங்கும் பரவிய பின்னர், மக்கள் அவரிடம் பெருந்திரளாக மண்டத் தொடங்கினர். அவர்களிடம் பாபா தட்ஷிணை கேட்கத் தொடங்கினார். ஒரு தங்கக் காசு வைக்கப்படாலன்றி கடவுளர்களின் பூஜை பூர்த்தியாவதில்லை என்று ஸ்ருதி (வேதங்கள்) பகர்கின்றது. கடவுள்களின் பூஜைக்குக் காசு தேவைப்பட்டிருந்தால், ஞானிகளின் பூஜைக்குக் கூட ஏன் அது அங்ஙனம் இருக்கக்கூடாது? முடிந்த சார்பாக ஒருவன் கடவுள், அரசன், ஞானி, குரு இவர்களைப் பார்க்கும்போது வெறும் கையுடன் போகலாகாது என்று விதிக்கப்பட்டது. அவன் காசோ, பணமோ எதையாவது அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக உபநிஷதங்கள் சிபாரிசு செய்த கருத்தை நாம் கவனிக்கலாம். பிருதாரண்ய உபநிஷதம் பிரஜாபதிக் கடவுள்கள், தேவர்கள், மனிதர்கள், பிசாசுகள் இவைகளை 'த' என்ற ஒரே எழுத்தால் விளித்ததாகப் பகர்கின்றது. இச்சொல்லால்,
1.தேவர்கள் தாங்கள் தமா (தன்னடக்கம்) பழகவேண்டுமென்று புரிந்துகொண்டனர்.
2.மனிதர்கள் தானம் அல்லது தர்மம் செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டனர்.
3.பேய்கள் தயை அல்லது பரிவு செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டன.
எனவே மனிதர்கள் தர்மம் அல்லது ஈகை செய்யவேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகின்றது. தைத்ரீய உபநிஷத்தின் குரு தனது மாணவர்களை தர்மத்தையும், மற்ற நல்ல பண்புகளையும் பயிலும்படி ஊக்குவித்து உபதேசிக்கிறார். தர்மத்தைப்பற்றி அவர், நம்பிக்கையுடன் கொடுங்கள், அது இல்லாமலும் கொடுங்கள், பெருந்தன்மையுடன் கொடுங்கள், அதாவது தாராளமாகக் கொண்டுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
தான தர்மத்தை அடியவர்களுக்குப் போதிப்பதற்கும், பணத்தில் அவர்களுக்கு உள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும், பாபா அவர்களிடமிருந்து தட்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார். ஆனால் அதில் இவ்விசித்திரம் இருந்தது. "அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தாக வேண்டும்". இவ்வாறாகப் பல இடங்களில் நிகழ்ந்தது. உதாரணத்துக்கு ஒன்று சொன்னால், பிரசித்திபெற்ற நடிகரான கணபதிராவ் போடஸ் தனது மாராத்திய சுயசரிதையில், பாபா தம்மைத் திரும்ப திரும்ப தட்ஷிணை கேட்டதாகவும், தனது பணப்பையையே அவர் முன்னர் காலியாக்கியதாகவும், இதன் விளைவாகப் பிற்கால வாழ்வில் தமக்கு ஏராளமாகப் பணம் வந்ததால் பணத் தேவையே இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.
பல சந்தர்ப்பங்களில் தட்ஷிணைக்கு பாபா பணவகை சார்ந்தவற்றையே விரும்பிக் கேட்காத மறைபொருளும் உண்டு. இரண்டு நிகழ்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
பேராசிரியர் G.G.நார்கேயிடமிருந்து பாபா தட்ஷிணையாக ரூ. 15 கேட்டார். நார்கே தன்னிடம் பைசாகூட இல்லையென்று பதிலளித்தார். அதற்குப் பாபா கூறியதாவது, "உன்னிடம் பணம் இல்லையென்பதை நான் அறிவேன். யோக வசிஷ்டத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அதிலிருந்து எனக்கு தட்ஷிணை கொடுங்கள்". தட்ஷிணை அழிப்பது என்பதற்கு இந்த சந்தர்ப்பத்தின் பொருளாவது, நூலிலிருந்து நீதிகளை உய்த்துணர்ந்து அவைகளை பாபா வாசம் செய்கிற ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருத்திக்கொள்ளுதலேயாம்.
இரண்டாவது சந்தர்ப்பத்தின்போது, திருமதி தர்கட் என்ற அம்மையாரிடம் ரூ.6 தட்ஷிணையாகக் கொடுக்கும்படி பாபா கேட்டார். ஏதும் அவள் கொடுக்க இயலவில்லை என்று மன வருத்தம் அடைந்தாள். பின்னர் அவளது கணவர், பாபா ஆறு உட்பகைவர்களையே (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம்) தம்மிடத்துச் சமர்ப்பிக்கும்படி கேட்டார் என்று அம்மையாருக்கு விளக்கினார். பாபா இவ்விளக்கத்துக்கு உடன்பாடு தெரிவித்தார்.
தட்ஷிணையின் மூலம் பாபா ஏராளமாகப் பணம் சேகரித்தார் என்பதும், அவ்வளவு பணத்தையும் அதே நாளில் பகிர்ந்தளித்து விடுவார் என்பதும், அடுத்த நாள் காலை வழக்கம்போல் அவர் ஒரு ஏழைப் பக்கிரியாகிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏறக்குறையப் பத்து வருடங்களாக ஆயிரம் ஆயிரம் ரூபாய்களைத் தட்ஷிணையாகப் பெற்றுவந்த பாபா, பின்னர் மஹாசமாதி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன.
சுருக்கமாகத் துறவையும், தூய்மையையும் போதிப்பதே அவர்களிடமிருந்து தட்ஷிணை பெற்றதன் முக்கிய காரணமாகும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment