Thursday, 2 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 15 - பகுதி 1

No comments

ஷீர்டியில் ராமநவமித் திருவிழாவைப் பற்றி ஆறாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டதை நூலைக் கற்போர் நினைவு கூர்ந்தறியலாம்.  எவ்விதம் அத்திருவிழா முதன்முதலாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது, எவ்வாறு ஆரம்ப வருடங்களில் அவ்விழாவின்போது கீர்த்தனைகள் பாடுவதற்கான ஒரு ஹரிதாசைப்(பாடகர்) பெறுவது மிகக்கடினமாய் இருந்தது, எவ்வாறு தாஸ்கணுவிற்கே இவ்விழாவினுடைய கீர்த்தனைப் பொறுப்பை நிரந்தரமாக பாபா ஒப்படைத்தது, அதிலிருந்து தாஸ்கணு அதனை எவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறார் ஆகியவைகளை நினைவு கூர்ந்தறியலாம்.

நாரத இசை - பத்ததி:

பொதுவாக நமது ஹரிதாசர்கள் கீர்த்தனைகள் செய்யும்போது, மகிழ்வுநாள் உடைகளையும், முழு உடைகளையும் அணிகிறார்கள்.  ஃபேடாவோ, டர்பனோ ஏதோ ஒரு தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள்.  நீளமான அலைமோதும் கோட், உள்ளே ஒரு சட்டை, தோள்களில் அங்கவஸ்திரம், இடுப்புக்குக் கீழே வழக்கமான நீள வேட்டி ஆகியவற்றை அணிகிறார்கள்.  ஷீர்டி கிராமத்தில் ஒரு கீர்த்தனைக்காக தாஸ்கணு ஒருமுறை இவ்வாறாக உடையணிந்து, பாபாவிடம் வணங்குவதற்காகச் சென்றார்.  பாபா "நல்லாயிருக்கு மாப்பிளே!  இவ்வளவு அழகாக உடையணிந்து நீ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்.  "கீர்த்தனை செய்வதற்கு" என்று பதில் வந்தது.  

அப்போது பாபா, "இச்சிறு அலங்காரப் பொருட்கள் எல்லாம் எதற்கு? கோட்டு, அங்கவஸ்திரம், குல்லாய் முதலிய எல்லாவற்றையும் எனக்கு முன்னால் கழற்றிவிடு" என்று கூறினார்.  தாஸ்கணு உடனே அவற்றை எடுத்து பாபாவின் பாதத்தடியில் வைத்தார்.  அதிலிருந்து கீர்த்தனை செய்யும்போது தாஸ்கணு இடுப்புக்குமேல் ஒன்றும் அணிவதில்லை.  கைகளில் ஒரு ஜதை சப்ளாக் கட்டை, கழுத்தில் மாலை இவற்றுடனேயே எப்போதும் இருந்தார்.  எல்லாப் பாடகர்களும் கைக்கொள்ளும் முறையுடன் இது ஒத்ததாய் இல்லை.  ஆனால் இதுவே மிகச்சிறந்த, மிகத்தூய வழியாகும்.  கீர்த்தனை பத்ததிகளை படைத்துருவாக்கிய நாரத ரிஷியே மேல் உடம்பிலும், தலையிலும் ஏதும் அணியவில்லை.  தம் கையில் வீணையேந்தி இடந்தோறும் அலைந்து திரிந்து கடவுளின் புகழைப் பாடினார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)





No comments :

Post a Comment