Thursday, 2 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 15 - பகுதி 2

No comments

சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர்:

புனே, அஹமத்நகர் ஜில்லாக்களில் பாபா அறிந்துகொள்ளப்பட்டார்.  ஆனால் நானா சாஹேப் சாந்தோர்கர் தனது சொந்த தனிப்பட்டமுறையிலான உரையாடல்களாலும், தாஸ்கணு தனது மிக உயர்வான கீர்த்தனைகளாலும் கொங்கணத்தில் (பம்பாய் ராஜதானி) பாபாவின் புகழைப் பரப்பினார்கள்.  உண்மையில் தாஸ்கணுதாம் - அவரைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக, தமது அழகிய ஒப்புவமையற்ற கீர்த்தனைகளால் அங்கேயிருந்த ஏராளமான மக்களை பாபாவினால் பயனுறும்படி செய்தார்.

கீர்த்தனைகளைக் கேட்கவந்த மக்கள் வெவ்வேறு சுவையுள்ளவர்களாய் இருப்பர்.  சிலர் ஹரிதாசின் அறிவாழத்தை அல்லது புலமையை விரும்புபவர்.  சிலர் அவரது அபிநயங்களையும், சிலர் அவரது பாடலையும், சிலர் அவரது விகட நகைச்சுவைகளையும், சிலர் அவரது துவக்க வேதாந்த வியாக்கியானங்களையும், மற்றும் சிலர் அவரது முக்கிய கதைகளையுமாக பலர் பலவிதமாக ஆர்வம் கொண்டிருப்பர்.  அவர்களுக்குள் மிகச்சிலரே கீர்த்தனைகளைக் கேட்பதன் வாயிலாக ஞானிகளிடத்தோ, கடவுளிடத்தோ, நம்பிக்கையும், பக்தியும் பெறுகிறார்கள்.  ஆயினும் தாஸ்கணுவின் கீத்தனைகளைக் கேட்கும் அவையோர்களது மனங்களின் விளைவு மின்சாரமாகும்.  அது அங்ஙனமே இருந்தது.  கீழ்கண்ட ஒரு நிகழ்ச்சியை இங்கு தருகிறோம்.  

தாஸ்கணு ஒருமுறை தாணேவில் கௌபினேஷ்வர் கோவிலில் சாயிபாபாவின் புகழைப்பாடி கீர்த்தனை செய்துவந்தார்.  அவையோர்களுள் சோல்கர் என்பவர் சிவில் கோட்டில் ஒரு தற்காலிக ஊழியராக வேலைபார்த்துவந்த ஒரு ஏழை ஆவார்.  மிகவும் கவனத்துடன் தாஸ்கணுவின் கீர்த்தனையை அவர் கேட்டுப் பெரிதும் உருகிப்போனார்.  அவர் அங்கேயே, அப்போதே மனத்தினால் பாபாவுக்கு வணக்கம் செலுத்தி விரதம் எடுத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார்.

"பாபா, நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற இயலாத ஓர் ஏழை.  தங்களுடைய அருளினால் நான் இலாகாவிற்குரிய தேர்வில் வெற்றிபெற்று, நிரந்தர உத்தியோகம் பெற்றால் ஷீர்டிக்குச் சென்று, தங்கள் பாதங்களில் வீழ்ந்து, தங்கள் நாமத்தினால் கற்கண்டை வினியோகிப்பேன்."  இது நிறைவேறுவதற்குரிய நல்ல அதிஷ்டம் இருந்ததால், சோல்கர் பரீட்ஷையில் தேர்வு பெறவே செய்தார்.  எவ்வளவு விரைவோ, அவ்வளவு நலம் என்பதாக, தனது விரதத்தை நிறைவேற்றுவது ஒன்றே அவருக்கு எஞ்சியிருந்தது.  பெருங்குடும்பத்தைத் தாங்கவேண்டிய ஏழை மனிதர் சோல்கர், அவரால் ஷீர்டி பயணத்திற்கு நேரும் செலவைத் தாங்குதல் இயலாது.  தாணே ஜில்லாவில் உள்ள நாணே காட்டையா அல்லது சஹ்யாத்ரி மலைத்தொடரையோகூட ஒருவன் எளிதில் கடந்துவிடலாம்.  உம்பரேகாட்டை, அதாவது வீட்டின் தலைவாயிலை, ஓர் ஏழை மனிதன் கடப்பது என்பது மிகமிகக் கடினமானது.

எவ்வளவு விரைவில் தனது விரதத்தைப் பூர்த்திசெய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் பூர்த்திசெய்ய ஆவலும், கவலையுமுற்ற சோல்கர் தனது செலவைக் குறைத்துச் சிக்கனப்படுத்தி பணத்தைச் சேகரிக்கத் தீர்மானித்தார்.  தனது உணவிலும், தேநீரிலும் சர்க்கரை உபயோகிப்பதில்லை என முடிவுசெய்து, தேநீரைச் சர்க்கரை இன்றியே அருந்தத் தொடங்கினார்.  இவ்வாறாக அவர் சிறிது பணம் சேகரிக்க இயன்றதும், ஷீர்டியை வந்தடைந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.  அவர் பாதங்களில் வீழ்தார்.  இரு தேங்காயை அர்ப்பணித்தார்.  தனது விரதப்படி அந்தக்கரண சுத்தியுடன் கற்கண்டை விநியோகித்தார்.

பாபாவிடம், அவரது தரிசனத்தால் தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும், அன்றைய தினத்தில் அவரது ஆசைகள் பூர்த்தியாயின என்றும் கூறினார்.  தன்னுடைய உபசரிப்பளராகிய பாபு சாஹேப் ஜோகுடன், சோல்கர் மசூதியில் இருந்தார்.  விருந்து உபசரிப்பாளரும், விருந்தினருமாகிய இருவரும் எழுந்து மசூதியை விட்டுப் புறப்படப் போனபோது, பாபா, ஜோகிடம் பின்வருமாறு கூறினார்.  "அவருக்கு (விருந்தினருக்கு) சர்க்கரை நிறை முழுமையாய் கரைக்கப்பட்ட தேநீரைக் கொடுப்பீர்".  இத்தகைய உட்கருத்து வளஞ்செறி சொற்களைக் கேட்டு சோல்கர் மிகவும் மனதுருகிப் போனார்.  வியப்பால் செயலிழந்தார்.  அவரின் கண்கள் கண்ணீரால் பனித்தன.  மீண்டும் பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்.  தனது விருந்தினருக்கு அழிக்கபடவேண்டிய தேநீரைப்பற்றிய வழிநெறியைக் கேட்டு ஜோகும் ஆச்சரியமடைந்தார்.

தமது சொற்களின் மூலம் சோல்கரின் மனத்தில் நம்பிக்கையையும், பக்தியையும் தோற்றுவிக்க பாபா விரும்பினார்.  அவருடைய விரதப்படி தாம் கற்கண்டைப் பெற்றுக்கொண்டதையும், உணவில் சர்க்கரை பயன்படுத்தக் கூடாது என்ற அவரது இரகசியத் திட்டத்தையும் தாம் முழுமையாக அறிந்திருப்பதாக, அங்ஙனம் இருந்தபடியே, பாபா குறிப்பிட்டார்.  பாபா கூறியதன் பொருளாவது, "என் முன்னர் பக்தியுடன் உங்களது கரங்களை நீட்டுவீர்களேயானால், உடனேயே இரவும், பகலும் உங்களுடன் கூடவே நான் இருக்கிறேன்.  இவ்வுடம்பால் நான் இங்கேயே இருப்பினும், ஏழ்கடலுக்கப்பால், நீங்கள் செய்வதையும் நான் அறிவேன்.  இந்த பரந்த உலகின்கண் நீங்கள் விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.  நான் உங்களுடனேயே இருக்கிறேன்.  உங்களது இதயமே எனது இருப்பிடம்.  நான் உங்களுக்குள்ளேயே இருக்கிறேன்.  உங்களது இதயத்துள்ளும், அதைப் போன்ற சகல ஜீவராசிகளின் இதயங்களினுள்ளும் இருக்கும் என்னையே எப்போதும் வணங்குவீர்களாக!  என்னை இங்ஙனமாக அறிபவர் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவரும், அதிஷ்டசாலியும் ஆவர்".

இவ்வாறாக, எவ்வித அழகிய முக்கியமான நீதி பாபாவினால் சோல்கருக்கு உபதேசிக்கபட்டது!

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)


No comments :

Post a Comment