Tuesday, 7 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 18 - பகுதி 2

No comments

திருவாளர் சாதே:

பல ஆண்டுகளுக்கு முன் பம்பாயின் கவர்னர் ரே பிரபுவால் அடக்கப்பட்ட க்ராஃபோர்ட் நடப்பாட்சியின்போது, சிறிதளவு பிரசித்தி பெற்றிருந்த சாதே என்னும் பெருந்தகை ஒருவர் இருந்தார்.  அவர் வணிகத்தில் கடுமையான நஷ்டமடைந்தார்.  மற்றுமுள்ள பிரதிகூலமான சூழ்நிலைகளும் அவருக்குப் பெருமளவு தொல்லையளித்து கவலையடையவும், உள்ளம் சோர்வுறவும் செய்தது.  இருப்புக்கொள்ளாமல் இருந்துகொண்டிருந்த அவர் வீட்டை விடுத்துத் தொலை தூரத்திற்கு வெளியேறிப் போய்விட எண்ணினார்.  

பொதுவாக மனிதன் கடவுளை நினைப்பதில்லை.  ஆனால் இடர்பாடுகளும், பேராபத்துக்களும் அவனைச் சூழும்போது அவன் ஆண்டவரை நோக்கித் திரும்பி நிவாரணத்திற்காக வேண்டுகிறான்.  அவனுடைய தீய கர்மங்கள் யாவும் முடிவுற்றதென்றால், முனிவர் ஒருவரை அவன் சந்திக்கும் வாய்ப்பினைக் கடவுள் ஏற்பாடு செய்கிறார்.  அம்முனிவரும் அவனுக்கு நலமளிக்கக்கூடிய வழிமுறைகளை உபதேசிக்கிறார்.  சாதேவுக்கும் அத்தகைய அனுபவமே ஏற்பட்டது.  தத்தம் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும், மனச்சாந்தியை அடைவதற்கும் ஏதுவாக சாயிபாபா தரிசனத்தைப் பெற ஏராளமான மக்கள் திரளாகச் சென்றுகொண்டிருக்கும் ஷீர்டிக்குப் போகும்படி அவருக்கு அவரது நண்பர்கள் அறிவுரை கூறினார்கள்.  அவருக்கு இக்கருத்து பிடித்திருந்தது.  உடனே ஷீர்டிக்கு 1917ல் வந்தார்.

பரப்பிரம்மமாகவும், சுஜஞ்ஜோதியாகவும், களங்கமற்றதாயும், தூயதாகவுமுள்ள சாயிபாபாவின் ரூபத்தைக் கண்ணுற்று அவரது மனம் பதைபதைப்பை விடுத்துச் சாந்தமுற்றது.  தமது முற்பிறவிகளில் ஏற்பட்ட நல்வினைகளின் குவியலே தம்மை பாபாவின் புனிதத் திருவடிகளுக்குக் கொணர்ந்தது என அவர் நினைத்தார்.  அவர் உறுதியான மனதிட்டம் வாய்க்கப்பெற்ற மனிதர்.  உடனேயே அவர் குருசரித்திரம் (ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் அவரது மறுஅவதாரங்களான ஸ்ரீபாத, ஸ்ரீவல்லபர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஆகியோரின் புனித சரித்திரம்) செய்யத் தொடங்கினார்.  ஸப்தாகத்தில் (ஏழு நாட்களில்) பாராயணம் பூர்த்தியானதும் அன்று இரவு பாபா அவருக்கு ஒரு காட்சி அளித்தார். அது இவ்வாறானது:

பாபா குருசரித்திரத்தை தமது கரங்களில் வைத்துக்கொண்டு அதன் உட்பொருளை, முன்னால் அமர்ந்து கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சாதேவிற்கு விவரித்துக்கொண்டிருந்தார்.  அவர் விழித்தெழுந்து பின்னர் தமது கனவினை நினைவுகூர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.  அறியாமையில் குறட்டைவிடும் தம்மைப் போன்ற ஆத்மாக்களை பாபாவின் எல்லையற்ற கருணையே எழுப்பிவிட்டு குருசரித்திர அமுதத்தினைச் சுவைக்கும்படி செய்கிறது என்று அவர் நினைத்தார்.  

மறுநாள் காகா சாஹேப் தீஷித்திடம் இக்காட்சியைப்பற்றி அவர் தெரிவித்து சாயிபாவிடம் அதன் பொருளைப்பற்றிய நுட்பக்குறிப்பினைக் குறித்துக் கேட்கும்படி வேண்டிக்கொண்டார்.  அதாவது ஒருவாரம் பராயணம் செய்தது போதுமா?  அல்லது மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமா என்பதாக.  காகா சாஹேப் தீஷித்தும் தமக்குக் கிடைத்த ஓர் உரிய சந்தர்ப்பத்தில் பாபாவை நோக்கி, "தேவா (ஓ! தெய்வமே) இந்தக் காட்சியால் சாதேவுக்கு எதனைக் குறிப்பிடுகிறீர்கள்?  அவர் சப்தாஹத்தை நிறுத்திவிடலாமா?  தொடர வேண்டுமா?  அவர் ஓர் எளிய அடியவர்.  அவரது அவா நிறைவேற்றப்படுதல் வேண்டும்.  அவருக்கு காட்சியின் பொருள் விளக்கப்பட்டு, அவர் ஆசீவதிக்கப்படவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.  பாபாவும் "அவர் மற்றுமொரு சகாப்தம் பாராயணம் செய்யவேண்டும்.  அதை அவர் கவனமாகக் கற்பாராயின் அவர் தூயவராகி நன்மை பெறுவார்.  பரமாத்மாவும் மகிழ்வடைந்து, இச்சம்சார வாழ்க்கையின் பந்தங்களினின்று அவரை விடுவிப்பார்" எனப் பதிலளித்தார்.  

இச்சமயத்தில் ஹேமத்பந்த் அங்கே இருந்தார்.  அவர் பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.  பாபாவின் சொற்களைக் கேட்டதும், அவர் தன் மனதில் பின்வருமாறு சிந்திக்கலானார்.  "என்ன! சாதே ஒரு வாரமே படித்துப் பரிசைப் பெற்றுக்கொண்டார்.  நாற்பது ஆண்டுகளாக ஒரு பயனுமின்றி நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இந்த இடத்தில் அவரது எழுநாள் வாசம் பலனளிக்க நேரிட்டு எனது ஏழுவருட வாசம் (1910-1917) பலனேதுமின்றிப் போகின்றது?!  தம் அறிவுரையால் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் எனவும், தமது அமுதத்தை என்மீது பொழியவேண்டும் எனவும் கருணை மேகத்திற்காக (பாபாவிற்காக) காத்துக் கொண்டிருக்கும் சாதகப் பறவையைப் போல எப்போதும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்".  இந்த எண்ணம் அவர் மனதில் குறுக்கிட்ட அத்தருணமே, பாபா அதனை அறிந்துகொண்டார்.

பாபா பக்தர்களின் எண்ணங்களையும் படித்துப் புரிந்துகொண்டு தீய எண்ணங்களைக் கீழடக்கி, நல்ல எண்ணங்களை ஊக்குவித்தார் என்பது அடியவர்களின் அனுபவமாகும்.  ஹேமத்தின் உள்ளத்தைப் படித்தறிந்துகொண்ட பாபா, உடனே அவரை எழுந்து ஷாமாவிடம் (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) சென்று ரூ. 15ஐ தட்ஷணையாகப் பெற்றுக்கொண்டு, அங்கு சிறிது நேரம் அவருடன் உரையாடியபின்னர் திரும்பிவரும்படி கேட்டார்.  பாபாவின் மனத்தில் கருணை உதயமாகியது.  எனவேதான் அவர் இக்கட்டளையை இட்டார்.  யார்தான் பாபாவின் ஆணையை மீற முடியும்?

ஹேமத்பந்த் உடனே மசூதியைவிட்டு, ஷாமாவின் வீட்டிற்கு வந்தார்.  அவர் அப்போதுதான் குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக் கொண்டிருந்தார்.  அவர் வெளியே வந்து ஹேமத்பந்த்ஐ நோக்கி, "தங்கள் இப்போது இங்கே இருப்பது எங்கனம்?  மசூதியிலிருந்து தாங்கள் வந்துள்ளதாகத் தோன்றுகிறதே?  இருப்புக் கொள்ளாதவரைப் போன்றும், உளச்சோர்வுடையவராகவும் ஏன் காணப்படுகிறீர்கள்? ஏன் தாங்கள் தனித்து இருக்கிறீர்கள்?  தயவுசெய்து அமர்ந்து சிறிதுநேரம் இளைப்பாறுங்கள்.  நான் எனது வழிபாட்டை உடனே முடித்துவிட்டுத் திரும்புகிறேன்.  அதுவரை வெற்றிலை - பாக்கு போட்டுக் கொள்ளுங்கள்.  பின்னர் மகிழ்ச்சியுடன் உரையாடலாம்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

ஹேமத்பந்த் முன் திண்ணையில் அமர்ந்திருந்தார்.  ஜன்னலில் 'நாதபாகவதம்' என்ற பிரசித்திபெற்ற மராத்தி நூலை அவர் கண்டார்.  பெரிய சமஸ்கிருத நூலான பாகவதத்தின் பதினோராவது ஸ்கந்தத்தைப் (அத்தியாயம்) பற்றிய ஏக்நாத் முனிவரின் விளக்கவுரையாகும்.  சாயிபாபாவின் யோசனையின் பேரில் அல்லது சிபாரிசின் பேரில் திருவாளர்கள் பாபு சாஹேப் ஜோகும், காகா சாஹேப் தீஷித்தும் ஷீர்டியில் தினந்தோறும் பகவத்கீதையையும் (கிருஷ்ணருக்கும் அவரது தோழரும் பக்தருமான அர்ஜுனனுக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை அதன் மராத்திய விளக்க உரையான பாவார்த்த தீபிகா அல்லது ஞானேஷ்வரியுடன்), நாதபாவதத்தையும் (கிருஷ்ணருக்கும் அவரது சேவகரும் பக்தருமான உத்வருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்) மற்றும் மற்றைய பெரிய நூலான ஏக்நாத்தின் பாவார்த்த ராமாயணத்தையும் படித்தார்கள்.

பாபாவிடம் அடியவர்கள் வந்து சில குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டபோது சிலசமயங்களில் அதில் ஒரு பகுதிக்கு விடையளித்துவிட்டு பாகவத தர்மத்தின் முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளான மேட்குறிப்பிட்ட நூல்களைப் பராயணம் செய்வதைச் சென்று கேட்கும்படி கூறுவார்.  அடியவர்கள் சென்று அவற்றைக் கேட்கும்போது தங்கள் வினாக்களுக்குப் பூரண திருப்தியான பதில்களைப் பெறுவார்கள்.  நாதபாகவதம் என்ற நூலின் சில பகுதிகளை ஹேமத்பந்தும் படிப்பது வழக்கம்.  அன்று மசூதிக்குச் சென்றுகொண்டிருந்த சில அடியவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக தினந்தோறும் தாம் படிக்கும் பகுதியை அவர் பூர்த்தி செய்யவில்லை.  

ஷாமாவின் ஜன்னலிலிருந்து அந்த புத்தகத்தினை எடுத்து, தற்செயலாக அதைப் புரட்டியபோது, அவரது ஆச்சரியத்திற்கேட்ப முடிக்கப்படாத பகுதி வந்தது.  தமது நித்ய பாராயணத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக பாபா தன்னை வெகு அன்புடன் ஷாமாவின் வீட்டிற்கு அனுப்பி இருப்பதாக அவர் எண்ணினார்.  எனவே முடிக்கப்படாத பகுதியைப் படித்து பூர்த்தி செய்தார்.  இது முடிவடைந்த உடனேயே ஷாமா வழிபாட்டை முடித்துவிட்டு வந்தார்.  அவர்களிடையே பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது.  

ஹேமத்பந்த்: பாபாவிடமிருந்து ஒரு தூதுக் குறிப்புடன் நான் வந்துள்ளேன்.  தங்களிடமிருந்து தட்ஷிணையாக ரூ.15 பெற்றுக்கொண்டு, சிறிது நேரம் தங்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடிவிட்டு, பின்னர் தங்களுடன் மசூதிக்குத் திரும்பும்படி என்னை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  

ஷாமா: (ஆச்சரியத்துடன்) என்னிடம் கொடுக்கப் பணம் ஏதுமில்லை.  ரூபாய்களுக்குப் பதிலாக என்னுடைய பதினைந்து நமஸ்காரங்களை பாபாவிடம் எடுத்துச் செல்லுங்கள்.  

ஹேமத்பந்த்:  மிக நல்லது.  தங்களுடைய வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  இப்போது நாம் சிறிது உரையாடுவோம்.  நமது பாவங்களை அழிக்கும் பாபாவின் கதைகளையும், லீலைகளையும் கூறுங்கள்.  

ஷாமா:  அப்படியென்றால் சற்றே இங்கே அமருங்கள்.  இக்கடவுளின் (பாபா) விளையாட்டு (லீலை) வியக்கத்தக்கது.  அது தங்களுக்கு முன்னமே தெரியும்.  நான் ஒரு கிராமத்துக் குடியானவன்.  ஆனால் தாங்களோ அறிவுடைய குடிமகன்.  தாங்களே இங்கு வந்துற்றது முதலாகச் சிறிது அதிகமாகவே லீலைகளைக் கண்டுகொண்டிருக்கிறீர்கள்.  அவற்றை எங்ஙனம் நான் தங்கள் முன் விவரிப்பேன்?!  நன்று இந்தாருங்கள் வெற்றிலை-பாக்கு சேர்த்து தாம்பூலம் போட்டுக்கொள்ளுங்கள்.  நான் உள்ளே சென்று உடுத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்.  

சில நிமிடங்களில் ஷாமா வெளியே வந்து ஹேமத்பந்த்துடன் பேசத்தொடங்கினார்.  அவர் சொன்னார்.  "இந்த ஆண்டவனின் (பாபா) லீலைகள் அறிந்த்கொள்ள இயலாதவை.  அவர் தம் லீலைகட்கு முடிவில்லை.  யாரே அவற்றைக் கண்டுகொள்ள இயலும்?  தமது லீலைகளினால் அவர் விளையாடுகிறார் என்றாலும், அவைகளுக்குப் புறம்பாகவே (அதனால் பாதிக்கபடாதவராகவே) இருக்கிறார்.  நாகரீகமற்றவர்களாகிய நமக்கு என்னதான் தெரியும்?  பாபா தாமே ஏன் கதைகள் சொல்லவில்லை.  தங்களைப் போன்ற கற்றறிந்தோரை என்போன்ற அறிவிலிகளிடம் அவர் ஏன் அனுப்புகிறார்?  அவர்தம் வழிகள் கருதுதற்கு இயலாதவை.  அவைகள் மனிதத் தன்மை வாய்ந்தவையல்ல என்று மட்டுமே என்னால் கூறு இயலும்."

இந்த முன்னுரையுடன் ஷாமா தொடர்ந்தார்.  "இப்போது என் நினைவில் இருக்கும் ஒரு கதையை நான் தங்களுக்கு விவரிக்கிறேன்.  அதை நானே நேரிடையாக அறிவேன்.  ஓர் பக்தன் எவ்வளவுதூரம் நெஞ்சுரங்கொண்டவனாகவும், தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச்செயலும் இருக்கிறது.  சில சமயம் பாபா தனது பக்தர்களைத் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்திப் பின்னர் அவர்களுக்கு உபதேசம் (செயல்துறைக் கட்டளைகள்) அளிக்கிறார்.  உபதேசம் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே, ஹேமத்பந்த்திற்கு தனது மனதில் ஏதோ ஒரு மின்னலைப் போன்ற ஒளி பாய்ந்தது போன்றிருந்தது.  

அவர் உடனே சாதேவின் குருசரித்திரப் பாராயணக் கதையை நினைவுகூர்ந்து தமது பதைபதைப்பான மனதிற்கு அமைதியளிக்கவே நிச்சயமாக பாபா தம்மை ஷாமாவிடம் அனுப்பியிருக்கவேண்டும் என்று எண்ணினார், என்றாலும் இந்த உணர்வை அடக்கிக் கட்டுப்படுத்திக்கொண்டு ஷாமாவின் கதைகளைக் கேட்கத் தொடங்கினார்.  அவை அனைத்தும் பாபா தமது பக்தர்களிடம் எவ்வளவு அன்புடனும், பாசமுடனும் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கின்றன.  இவைகளை எல்லாம் கேட்ட ஹேமத்பந்த் ஒருவித மகிழ்ச்சியை எய்தலானார்.  பிறகு பின்வரும் கதையை ஷாமா கூறத் தொடங்கினார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment