Tuesday, 7 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 19 - பகுதி 1

No comments

திருமதி ராதாபாய் தேஷ்முக்:

ராதாபாய் என்ற பெயருடைய கிழவி ஒருத்தி இருந்தாள்.  அவள் காஷாபா தேஷ்முக் என்பாரின் தாயாராவாள்.  பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு சங்கம்னேர் நகர மக்களுடன் அவள் ஷீர்டிக்கு வந்தாள்.  

பாபாவின் தரிசனத்தைப் பெற்று மிகவும் திருப்தியடைந்தாள்.  பாபாவை மிகவும் உள்ளார்ந்த அன்புடன் அவள் நேசித்தாள்.  தான் பாபாவைக் குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து ஏதேனும் உபதேசம் பெறவேண்டும் என்று தீர்மானித்தாள்.  அதைத்தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியாது.  பாபா அவளை ஏற்றுக்கொண்டு மந்திரமோ, உபதேசமோ அளிக்காத வரையில் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உறுதிபூண்டாள்.  தனது இருப்பிடத்தில் தங்கி, மூன்று நாட்களாக உணவையும், நீரையும் விட்டொழித்தாள்.  

கிழவியின் இந்த மிகக் கடுமையான பரீட்சையைக் கண்டு நான் திகிலடைந்தேன்.  அவரல் சார்பில் பாபாவிடம் இடையிட்டுப் பரிந்து பேசினேன்.  நான் கூறினேன், "தேவா, தாங்கள் இவ்வாறாகத் தொடங்கியிருப்பது என்ன?  தாங்கள் ஏராளமானவர்களை இவ்விடம் ஈர்த்து இழுக்கிறீர்கள்.  தங்களுக்கு அக்கிழவியைத் தெரியும்.  அவள் மிகவும் பிடிவாதமுடையவளாகவும், தங்களையே முழுவதுமாகச் சாய்ந்தும் இருக்கிறாள்.  தாங்கள் அவளை ஏற்றுக்கொள்ளும்படி உபதேசம் தந்தாலொழிய சாகும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகத் தீமானித்து இருக்கிறாள்.  ஏதாவது மோசமாக நிகழ்ந்துவிட்டால் மக்கள் தங்கள்மீது பழி சுமத்துவார்கள்.  பாபா அவளுக்கு உபதேசிக்கவில்லை.  அதன் விளைவாக அவள் மரணமடைந்தாள் என்று கூறுவார்கள்.  எனவே அவள்மீது கருணைகூர்ந்து அவளை ஆசீர்வதியுங்கள், அவளுக்கு அறிவுறுத்துங்கள்".  அவளது தீர்மான உறுதியைக் கண்டு பாபா அவளைக் கூப்பிட்டு அனுப்பினார்.  பின்வருமாறு அவளிடம் உரையாற்றி அவளது மனப்போக்கை மாற்றினார்.  

"ஓ! அம்மா, (பாபா எப்போதும் பெண்களை அம்மா என்றும், ஆண்களை காகா, பாபா, பாவ் என்றும் அன்புடன் அழைப்பார்)  ஏன் தேவையற்ற சித்திரவதைக்குத் தங்களைத் தாங்களே உட்படுத்திக்கொண்டு சாவை எதிர்நோக்குகிறீர்கள்?  தாங்கள் உண்மையிலேயே எனது தாய்.  நான் தங்களது குழந்தை.  என்மேல் இரக்கம்கொண்டு நான் சொல்வதை முழுவதும் கேட்பீர்களாக.  எனது சொந்தக் கதையிலேயே சொல்கிறேன்.  அதைக் கவனமாகக் கேட்பீர்களானால், தங்களுக்கு அதனால் நன்மை விளையும்.  எனக்கு ஒரு குரு இருந்தார்.  அவர் ஒரு மாபெரும் முனிவர்.  மிக்க கருணையுள்ளவர்.  

நான் அவருக்கு நெடுங்காலம் சேவை செய்தேன்.  பன்னெடுங்காலம்.  எனினும், அவர் ஏன் காதுகளில் எவ்வித மந்திரத்தையும் ஓதவில்லை.  அவரை ஒருபோதும் விட்டுப் பிரியாமல் இருக்கவும், அவருடனேயே தங்கியிருந்து அவருக்குச் சேவை செய்யவும், எப்பாடுபட்டாவது அவரிடமிருந்து சிறிது உபதேசம் பெறவும் எனக்குக் கூரிய ஆர்வம் இருந்தது.  ஆனால் அவருக்குத் தமக்கே உரிய வழிமுறை இருந்தது.  அவர் ஏன் தலையை மொட்டை அடிக்கச்செய்து, இரண்டு பைசாக்களைத் தட்ஷிணையாகக் கேட்டார்.  நான் அவைகளை உடனே அளித்தேன்.  எனது குரு முழு நிறைவானவராய் இருப்பதால் அவர் ஏன் பணத்தைக் கேட்கவேண்டும்?  அப்படியாயின் அவரை எங்ஙனம் பற்றற்றவர் என்று கூற இயலும்?  என்று தாங்கள் கேட்பீர்கள் என்றால், காசுகளை அவர் இலட்சியம் செய்யவில்லை என்று நான் ஒளிவு மறைவின்றி பதில் கூறுவேன்.  அவைகளைக்கொண்டு அவருக்கு ஆகவேண்டியது என்ன?

அவர்தம் இரண்டு பைசாக்களாவன:

(1)  உறுதியான நம்பிக்கை (நிஷ்டா)

(2)  பொறுமை அல்லது விடாமுயற்சி (சபூரி)    

இந்த இரண்டு பைசாக்களை நான் அவருக்கு அளித்தேன்.  அவர் பெரிதும் மனம் மகிழ்ந்தார்.  எனது குருவிடம் தஞ்சமாக நான் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தேன்.  அவர் என்னை வளர்த்தார்.  உணவுக்கும், உடைக்கும் பஞ்சமில்லை.  அவர் முழுமையும் அன்புடையவராக இருந்தார்.  ஆம், அவர் அன்பின் அவதாரமே ஆவார்.  எங்ஙனம் நான் அதை விவரிக்க இயலும்?  அவர் என்னை மிகமிக அதிகமாக விரும்பினார்.  அவரைப்போன்ற குரு அபூர்வம்.  நான், அவரை நோக்கும்போது ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகக் காணப்பட்டார்.  பின்னர் நாங்கள் இருவரும் பேரின்பத்தில் நிரம்பிவிடுவோம்.  இரவும், பகலும் நான் பசி தாகத்தை மரத்து, அவரையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டு இருப்பேன்.  அவரின்றி நான் இருப்புக்கொள்ளாதவன் ஆனேன்.  எனக்கு, எனது தியானதிற்கு அவரைத்தவிர வேறெவ்விதப் பொருளும் இல்லை.  அன்றி அவருக்குப் பணிவிடை செய்வதைத் தவிர எனக்கு வேறெவ்வித வேலையும் இல்லை.  அவரே எனது ஒரே அடைக்கலம்.  எனது மனம் எப்போதும் அவர்மீதே உறுதிப்பட்டுக்கொண்டிருந்தது.

இந்த நிஷ்டா (உறுதியான நம்பிக்கை) ஒரு பைசா தட்ஷிணையாகும்.  சபூரி (பொறுமை அல்லது விடாமுயற்சி) என்பது மற்றொரு பைசாவாகும்.  குருவிடம் நான் பொறுமையுடன் மிக நீண்டகாலம்வரை சேவை செய்தேன்.  இந்த சபூரியானது உங்களை இவ்வுலக வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்குரிய தோணியிலேற்றி அக்கரை சேர்ப்பிக்கும்.  மனிதனிடத்தில் உள்ள ஆண்மையே சபூரி.  அது பாவங்களையும், வேதனைகளையும் நீக்குகிறது.  பல்வேறு வகைகளில் பேராபத்துக்களை விலக்குகிறது.  எல்லா அச்சம்களையும் அப்பால் அகற்றுகிறது.  கடைமுடிவாக உங்களுக்கு வெற்றியளிக்கிறது.  சபூரி நற்பண்புகளின் சுரங்கம்.  நல்லெண்ணங்களின் கூட்டாளி.  நிஷ்டாவும் (நம்பிக்கை), சபூரியும் (பொறுமை) ஒருவரையொருவர் மிக நெருக்கமாக நேசிக்கும் இரட்டைச் சகோதரிகளை நிகர்த்தவை.

என்னுடைய குரு ஒருபோதும் வேறெதையும் என்னிடமிருந்து எதிர்பார்த்ததில்லை.  அவர் என்னை ஒருபோதும் புறக்கணித்ததும் இல்லை.  எப்போதும் என்னைப் பாதுகாத்தார்.  நான் அவருடன் தங்கி வாழ்ந்தேன்.  சிலசமயம் அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தேன்.  எனினும் நான் ஒருபோதும் அவர்தம் அன்புடைமைக்குத் தேவையையோ, அன்பின்மையையோ கண்டதில்லை.  தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன்னருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் தனது அன்புப் பார்வையால் பேணிவளர்க்கும்.  அதேவிதமாக, அவர்தம்முடைய கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் என்னைப் பாதுகாத்தார்.  ஓ! அன்னையே, எனது குரு எனக்கு எவ்வித மந்திரத்தையும் போதிக்கவில்லை.  பின்னர் நான் எங்ஙனம் தங்கள் காதுகளில் மந்திரத்தை ஓதமுடியும்?  குருவின், ஆமையினத்தை நிகர்த்த அன்புக் கண்ணோட்டம் ஒன்றே நமக்கு மகிழ்ச்சியை நல்குகிறது.  எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலாதீர்கள்.  என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.  சந்தேகம் ஏதுமின்றி நீங்கள் நிச்சயம் பரமார்த்திகத்தை (வாழ்வின் ஆன்மீகக் குறிக்கோளை) எய்துவீர்கள்.  என்னை உங்களது முழுமனத்தோடு நோக்குங்கள்.  பதிலாக நானும் அங்ஙனமே தங்களை நோக்குவேன்.

இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையே பேசுகிறேன்.  உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை.  சாதனைகள் ஏதும், ஆறு சாஸ்திரங்களில் கைதேர்ந்த அறிவு ஏதும் தேவை இல்லை.  உங்களது குருவினிடத்தில் நம்பிக்கையும், பற்றுறுதியும் கொள்ளுங்கள்.  குருவே தனி ஒருவராக நடத்துனர், இயக்குனர் என நம்புங்கள்.  தனது குருவின் பெருமையை அறிபவன், அவரையே ஹரிஹர பிரம்மமென்ற திருமூர்த்தி அவதாரமென்று கருதுபவன், ஆசீர்வதிக்கப்பட்டவன்."  இவ்வாறாக அறிவுறுத்தப்பட்டு, கிழவி உடன்பட்டாள்.  அவள் பாபாவை வணங்கி உண்ணாவிரதத்தைக் கைவிட்டாள்.

இக்கதையைக் கவனத்துடனும், கருத்துடனும் கேட்டுக்கொண்டிருந்த ஹேமத்பந்த் அதன் குறிப்பு நுட்பத்தையும், பொருத்தத்தையும் குறித்துப் பெருமளவு ஆச்சரியத்தில் மூழ்கினார்.  பாபாவின் இவ்வதிசய லீலையைக் கண்டுகொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர் உருகினார்.  மகிழ்ச்சிப் பெருக்கால் பொங்கி வழியலானார்.  அவர்தம் தொண்டை அடைத்தது.  ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை.  ஷாமா இந்நிலையில் அவரைநோக்கி, "தங்களுக்கு என்ன நேர்ந்தது?  ஏன் மௌனமாகி விட்டீர்கள்? பாபாவின் கணக்கற்ற லீலைகள் இன்னும் எவ்வளவை நான் விவரிக்க வேண்டும்?" என்று கேட்டார்.

இத்தருணம் மத்தியான வழிபாடும், ஆரத்தி சடங்கும், மசூதியில் ஆரம்பமாகிவிட்டன என்பதை அறிவிக்கும் வகையில் மசூதியில் இருக்கும் மணி அடிக்கத் தொடங்கியது.  எனவே ஷாமாவும், ஹேமத்பந்த்தும் மசூதியை நோக்கி விரைந்தனர்.  பாபு சாஹேப் ஜோக் அப்போதுதான் வழிபாட்டைத் துவக்கி இருந்தார்.  பெண்கள் மசூதியினுள்ளே மேல்தளத்திலும், ஆண்கள் கீழே உள்ள திறந்த வெளித் தாழ்வாரத்திலும் ஆராத்தியைக் கோஷத்துடன் பலமாக மேளங்கள் முழங்கப் பாடிக்கொண்டிருந்தனர்.  ஷாமா தன் கூடவே ஹேமத்பந்த்தையும் இழுத்துக்கொண்டு மேலே சென்றார்.  பாபாவுக்கு வலதுபுறம் அவரும், ஹேமத்பந்த் முன்னாலும் அமர்ந்தனர்.  அவர்களைக் கண்டு ஷாமாவிடமிருந்து கொண்டுவந்த தட்ஷிணையைக் கொடுக்கும்படி ஹேமத்பந்த்திடம் பாபா கேட்டார்.  

ஹேமத்பந்த் அவ்விடம் நேரே சென்றிருந்ததாகவும் ஷாமா ரூபாய்க்குப் பதிலாக நமஸ்காரங்களை அளித்ததாகவும் அவர் அங்கேயே நேரில் இருப்பதாகவும் கூறினார்.  பாபா அதற்கு, "நன்று, தாங்கள் இருவரும் சம்பாஷித்தீர்களா?  அப்படி என்றால் நீங்கள் பேசியவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்லுங்கள்" என்றார்.  மணியோசை, மேளம், கோஷ்டிகானம் இவற்றைப் பொருட்படுத்தாது ஹேமத்பந்த் அவர்கள் பேசியதைக் கூற ஆவலாய் இருந்தார்.  அதை எடுத்துரைக்கவும் ஆரம்பித்தார்.  பாபாவும் அதைக் கேட்பதற்கு ஆவலாய் இருந்தார்.  எனவே அவர் தமது திண்டைவிட்டு நீங்கி முன்னால் சாய்ந்து கொண்டார்.  தாம் உரையாடியவை எல்லாம் மிகவும் மகிழ்வழிக்கின்றவை.  குறிப்பாக கிழவியின் கதை மிகமிக அற்புதமானது என்றும், அதைச் செவிமடுத்ததன் பொருட்டு அவர் பாபாவின் லீலை விவரிக்க இயலாதது என்றும், கதை என்ற புறத்தோற்றத்தில் பாபா தம்மையே உண்மையில் ஆசீவதித்திருப்பதாகத் தாம் நினைப்பதாகக் கூறினார்.  பின்னர் பாபா "கதை அற்புதமானது, எங்ஙனம் நீங்கள் ஆசீவதிக்கப்பட்டீர்கள்? நான் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.  எனவே அவை அனைத்தையும் குறித்து இப்போது சொல்லுங்கள்" என்றார்.  ஹேமத்பந்த் தாம் சற்றுமுன்னர் கேட்ட தனது உள்ளத்தில் நிலையான முத்திரையை ஏற்படுத்திய கதையை முழுக்க விவரித்தார்.  இதைக் கேட்டு பாபா மிகவும் மகிழ்ச்சியுற்றார்.  மேலும் அவரை நோக்கி, "இக்கதை உமதுள்ளத்தில் பதிவுற்றதா?  அதன் குறிப்பு நுட்பத்தைப் பிடித்துக் கொண்டீரா?!" என்றார்.  அவர் "ஆம் பாபா! எனது மனத்தின் பதைபதைப்பு மறைந்தொழிந்தது.  எனக்கு உண்மையான சாந்தியும், அமைதியும் கிடைத்தன.  நான் உண்மையான வழியை அறியப்பெற்றேன்" என்றார்.

பாபா பின்வருமாறு உரைத்தார்.  "எனது நிகழ்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.  இக்கதையை நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  ஆத்மாவின் ஞானத்தை (அனுபூதி) அடைவதற்குத் தியானம் இன்றியமையாதது.  அதை இடையறாது பயிற்சித்தீர்களானால் விருத்திகள் (எண்ணங்கள்) அமைதிப்படுத்தப்படும்.  ஆசைகள் அற்ற நிலையில் இருந்துகொண்டு, நீங்கள் அனைத்துயிர்களிலும் இருக்கின்ற ஆண்டவரைத் தியானியுங்கள்.  மனது ஒருமுகப்படுத்தப்பட்ட பின்பு நமது குறிக்கோள் எய்தப்பட்டுவிடும்.  ஞானமெனும் (சத்து) பண்பே திருவுருக்கொண்டது எனவும், உணர்வுத் திரளும் பேரானந்தமுமாகிய எனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள்.  இதைச் செய்ய தங்களால் இயலாவிடின் இங்கே இரவும், பகலும் காண்பதைப் போன்று, உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தைத் தியானம் செய்யுங்கள்.  இதைத் தாங்கள் செய்துகொண்டே போகும்போது, தங்களின் விருத்திகள் (எண்ணங்கள்) ஒரே இல்லக்கில் குவிக்கப்படும்.  தியானம் செய்பவர், தியானம், தியானிக்கப்படும் பொருள் இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும்.  தியானம் புரிபவர் உச்ச உணர்ச்சித்திரளுடன் ஒன்றி, பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமாய் விடுவார்.

தாய் ஆமை, நதியின் ஒரு கரையிலும் அதன் குட்டிகள் மறுகரையிலும் இருக்கின்றன.  அவைகளுக்கு அது பாலோ, உஷ்ணமோ அளிப்பதில்லை.  அதனுடைய கண்ணோட்டம் ஒன்றே அவைகளைப் போஷிக்கிறது.  குட்டிகள் தமது தாயாரை ஞாபகத்தில் கொள்ளுதலைத் (தியானிப்பதை) தவிர வேறொன்றும் செய்வதில்லை.  தாய் ஆமைகளின் கண்ணோட்டம் குட்டிகளுக்கு, காலூன்றிப் பெய்யும் அமுதமழையாகவும், ஊட்டப்பண்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள ஒரே தோற்றுவாயாகவும் இருக்கிறது.  குருவுக்கும், சீடர்களுக்கும் இடையிலுள்ள  உறவும் அத்தகையதேயாகும்".

பாபா இம்மொழிகளை உதிர்த்து முடித்தபின்பு ஆரத்தி கோஷ்டிகானம் முடிவுற்றது.  அனைவரும் உரக்க ஒரே குரலில் "சச்சிதானந்த சொரூபியாய் இருக்கிற சத்குரு சாயிநாத் மஹராஜுக்கு ஜெய்" என்று கூவினார்கள்.

அன்பானத வாசகர்களே! நாமும் இந்த நேரம் மசூதியில் கூட்டத்துடன் நின்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வோம்.  ஜய ஜய கோஷத்தில் நாமும் அவர்களுடன் பங்கு கொள்வோம்.

ஆரத்திச் சடங்கு முடிவடைந்த பின்னர் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.  வழக்கம்போல் பாபா சாஹேப் ஜோக் முன்னே வந்து பாபாவை வணங்கியபின் அவரின் உள்ளங்கை நிறையக் கற்கண்டை அளித்தார்.  பாபா இவை முழுவதையும் ஹேமத்பந்த்தின் கைகளில் திணித்து அவரிடம், "இக்கதையை உள்ளத்தில் இருத்தி நன்றாக நினைவில் வைத்துக் கொள்வீர்களேயானால், தங்களது நிலையும் கற்கண்டைப் போலவே சுவையுள்ளதாகும்.  உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும்.  நீங்களும் சந்தோஷமாய் இருப்பீர்கள்" என்று கூறினார்.  ஹேமத்பந்த் பாபாவின் முன்னால் பணிந்து வணங்கி "இவ்வாறே எனக்கு அனுகூலம் செய்யுங்கள்.  என்னை எப்போதும் ஆசீர்வதித்துக் காப்பாற்றுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டுகொண்டார்.  பாபா அதற்கு "இக்கதையைக் கேட்டு, அதனைக் குறித்துத் தியானித்து, அதன் மெய்க்கருத்தை ஜீரணித்துக் கொள்ளுங்கள்.  அப்போது உங்களிடமிருந்து தாமே உருவெளிப்படுத்திக் காட்டுகின்ற ஆண்டவரை எப்போதும் ஞாபகமூட்டித் தியானித்துக் கொண்டிருப்பீர்கள்" என்று பதிலளித்தார்.  

அன்பான பக்தர்களே! அப்போது ஹேமத்பந்த் கற்கண்டுப் பிரசாதத்தைப் பெற்றார்.  நாமும் இப்போது கற்கண்டுப் பிரசாதம் அல்லது இக்கதையின் அமிர்தத்தைப் பெறுவோம்.  அதை நாம் உளநிறைவடையும்வரை பருகுவோம்.  அதைத் தியானிப்போம்.  அதை ஜீரணித்துக்கொள்வோம்.  பாபாவின் அருளினால் வலிமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்போம்.  ஆமென்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)


No comments :

Post a Comment