Tuesday, 7 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 19 - பகுதி 2

No comments

நமது குணத்தைப்பற்றி பாபாவின் அறிவுரை:

பின்வரும் பாபாவின் மொழிகள் பொதுவானவை.  விலைமதிக்க முடியாதவை.  அவைகள் மனதில் இருத்தப்பட்டு அதற்கேற்பச் செயல்படுத்தப்பட்டால் எப்போதும் உங்களுக்கு நன்மை அளிக்கும்.  "ஏதேனும் உறவோ, தொடர்போ இல்லாவிடில் இருவரும் எங்கும் செல்வதில்லை, ஏதேனும் ஜீவராசிகளோ, மனிதர்களோ உங்களிடம் வரநேர்ந்தால், அவர்களைப் பண்பின்றி விரட்டிவிட வேண்டாம்.  அவர்களை நன்றாக வரவேற்று உரியமரியாதையுடன் நடத்துங்கள்.  தாகமாய் இருப்போர்க்குத் தண்ணீர் கொடுத்தபோதும், பசியாய் இருப்போர்க்கு உணவு அளித்தபோதும், ஆடையற்றவர்களுக்கு ஆடையளித்தபோதும், உட்காருவதற்கும், இளைப்பாறுவதற்கும் உங்களது திண்ணையை மற்றொருவர் அளித்தபோதும் ஸ்ரீஹரி நிச்சயம் மகிழ்வெய்துகிறார்.  

யாராவது உங்களிடம் பணம் கேட்டு உங்களுக்கு கொடுக்க மனதில்லாமல் இருந்தால், கொடுக்காதீர்கள்.  ஆனால் அவரைப் பார்த்து நாய் போன்று குறைக்க வேண்டாம்.  யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராகக் கூறட்டும்,  ஆனால் கசப்பாக எவ்விதத்திலும் அவர்களுக்குப் பதிலளிக்கும்படியாக சீற்றங்கொள்ளாதீர்கள்.

இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக் கொண்டிருப்பீர்களேயானால், நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.  உலகம் தலைகீழாக மாறட்டும்.  நீங்கள் இருந்த இடத்திலே இருங்கள்.  உங்கள் இருப்பிடத்தில் நின்றுகொண்டோ, வசித்துக்கொண்டோ அனைத்து விஷயங்களையும் உங்கள் முன்னர் கடந்து செல்லும் காட்சியாக அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பீர்களாக!  உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள்.  பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும், திறந்தும் இருக்கும்.  'நான்', 'நீ' என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையரணாகும்.  அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது ஐக்கியமாதல் இயலாது.  

கடவுளே சகலத்திற்கும் ஒரே உரிமையாளர்.  'அல்லா மாலிக்' வேறோருவரும் நமது பாதுகாவலரல்ல.  அவர் வேலைசெய்யும் முறைமை அசாதாரணமானது, விலை மதிக்கமுடியாதது.  அறிவாலறிய முடியாதது.  அவரது சங்கல்பமே ஈடேறும்.  அவர் நமக்கு வழிகாட்டுவார்.  நமது உள்ளத்தின் ஆசைகளைப் பூர்த்தி செய்வார்.  ருணானுபந்தத்தின் (முன்ஜென்மத்தின் உறவு) மூலமாகவே நாம் இணைந்துள்ளோம்.  ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தும், செவைசெய்தும் நாம் மகிழ்ச்சியுடனிருப்போம்.  எவன் வாழ்க்கையில் மிகமிக உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவன் இறவாப் புகழுடையவன், மகிழ்ச்சியுடையவன்.  மற்றவர் எல்லாம் வெறுமனே உளதாயிருக்கிறார்கள் அல்லது மூச்சு விடும்வரை வாழ்ந்திருக்கிறார்கள்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment