ஈசா உபநிஷதம்:-
தாஸ்கணு ஒருமுறை ஈசா உபநிஷதத்துக்கு மராத்திய விளக்க உரை எழுத ஆரம்பித்தார். முதலில் இவ்வுபநிஷதத்தைப் பற்றிய சுருக்கமான கருத்து ஒன்றை மேற்கொண்டு தொடரும்முன் கூறுவோம். வேதசம்ஹிதையின் மந்திரங்களில் அது உள்ளடக்கப்பட்டிருப்பதால் அது மந்திரோபனிஷத் என்று அழைக்கப்படுகிறது. வாஜஸனேய சம்ஹிதையின் (யஜூர் வேதம்) இறுதியான அல்லது நாற்பதாவது அத்தியாயத்தை இணைத்து உருவாக்குவதால் வாஜஸனேய சம்ஹிதோபனிஷத் என்று அழைக்கப்படுகிறது. பிராம்மணங்களிலும், ஆரண்யங்களிலும் (மந்திரங்கள், வைதீகச் சடங்குகள் பற்றி விளக்கும் விக்கியானங்கள்) காணப்படும் வேதசம்ஹிதைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பதால், இதுவே மற்ற எல்லா உபநிஷதங்களையும் விடச் சிறப்பானது என்று கருதப்படுகிறது. இது மட்டுமன்று, மற்ற உபநிஷதங்கள் எல்லாம் ஈசா உபநிஷத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைப் பற்றிய வியாக்கியானங்களேயாகும் என்று எண்ணப்படுகிறது. உதாரணமாக உபநிஷதங்களிலேயே பெரிதான பிருஹதாரண்யக உபநிஷதமாவது ஈசா உபநிஷத மூலத்தோடு இணைந்த விளக்கவுரை என்று பண்டிட் சத்வலேகர் கருதுகிறார்.
பேராசிரியர் R.D.ரானடே கூறுகிறார், "ஈசா உபநிஷதம் ஒரு சிறிய உபநிஷதமேயாகும். இருப்பினும் அசாதாரணமாகத் துளைத்து உட்செல்லும் ஆழ்ந்த நுண்ணறிவுத் திறத்தைக் காட்டுகின்ற பல குறிப்புக்களையும் அது பெற்றிருக்கின்றது. பதினெட்டே செய்யுட்களுள்ள குறுகிய வட்டப்பரப்பில், ஆத்மாவைக் குறித்து மதிப்பு மிகப்பெற்ற அகநிலை உணர்வு சார்ந்த வர்ணனையை, தீயன செய்யத்தூண்டும் மயக்கங்களுக்கும், கவலைகளுக்கும் இடையில் கலக்கமுறாத முழுநலம் வாய்க்கப்பட்ட கர்மயோகம் என்னும் போதனைத் தொகுப்பிற்கு முன்னோடியான அறிவிப்பையும், இறுதியாக ஞானம் - கர்மம் இவைகளின் தகுதிகளைப் பற்றிய கருத்து முரண்பாடு நீக்கத்திற்குரிய ஒரு விளக்கத்தையும் அளிக்கிறது. ஞானம் - கர்மம் என்ற எதிரிடைகளின் வாதப் பொருத்தமுடைய கூட்டிணைப்பே உபநிஷத்தின் ஆணிவேரில் உறைந்திருக்கும் மிகமிக மதிப்புள்ள கருத்தாகும். உயர்நிலை இணைப்பாக்கத்தின்போது பேதம் துடைதழிக்கப்படுகிறது. (Book: Constructive Survey of the Upanishadic Philosophy, Page: 24) அவர் மற்றுமோர் இடத்தில் நீதி, மறை மெய்மை, நுண்பொருள் கோட்பாட்டியல் இவைகளின் ஒருமித்த கலவையே ஈசா உபநிஷதத்தின் பாடல்கள் என்றும் கூறுகிறார்.
மேலே தரப்பட்ட இவ்வுபநிஷதத்தைப் பற்றிய சுருக்கமான விளக்கங்களால், வட்டாரப் பேச்சு மொழியில் இதனை மொழி பெயர்ப்பது என்பதும் சரிநுட்பமான அதே அர்த்தத்தைக் கொணர முற்படுவதும் எவ்வளவு கடினமானது என்று எவரொருவரும் அறிய இயலும். தாஸ்கணு இதைச் செய்யுள் - செய்யுளாக மராத்திய 'ஒவி' யாப்பு வகையில் மொழிபெயர்த்தார். ஆயினும் உபநிஷதத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொள்ளாததால் தமது செயல்நிறைவு பற்றி அவர் திருப்தி கொள்ளவில்லை. மன நிறைவடையாதவராய் சில அறிஞர்களைத் தமது சந்தேகங்கள் பற்றியும், கஷ்டங்களைப் பற்றியும் கலந்து ஆலோசித்து அவர்களுடன் அதைப்பற்றி மிகவும் விரிவாக விவாதித்தார். அவர்கள் அவைகளுக்கு விடைகாணவும் இல்லை, அறிவாராய்ச்சி முறை சார்ந்தோ, திருப்தியுடையதோவாகிய விளக்கமும் அளிக்கவில்லை. எனவே தாஸ்கணு இதனைப் பற்றிச் சிறிது மன உளைச்சலுடன் இருந்தார்.
சத்குரு ஒருவரே விளக்கமளிக்க உரிமையும் தகுதியும் உடையவர்
நாம் பார்த்தவிதமாக இவ்வுபநிஷதம் வேதங்களின் சாராம்சமாகும். அது ஆத்மானுபூதியின் விஞ்ஞானமுமாகும். அது பிறப்பு, இறப்பு என்னும் கட்டுக்களை அறுத்தெறியக்கூடிய, நம்மை விடுவிக்கின்ற அரிவாள் அல்லது ஆயுதமாகும். எனவே, தாமே ஆத்மானுபூதி அடையப்பெற்ற ஒருவரே உபநிஷதத்திற்கு உண்மையான, சரியான விளக்கம் அளிக்கமுடியும் என்று அவர் நினைத்தார். தாஸ்கணுவை ஒருவரும் திருப்திப்படுத்த இயலாதபோது, சாயிபாபாவை இது விஷயமாக அவர் கலந்து ஆலோசிக்க முடிவுசெய்தார். ஷீர்டிக்குப் போக அவருக்கு ஒரு சந்தர்ப்பம் நேரிட்டபோது சாயிபாபாவை அவர் கண்டார். அவர்முன் வீழ்ந்து பணிந்தார். ஈசா உபநிஷத்தைப் பற்றிய தனது கஷ்டங்களைத் தெரிவித்து, அதைப் பற்றிய சரியான தீர்வு தரும்படி அவரை வேண்டிக்கொண்டார். சாயிபாபா அவரை ஆசீர்வதித்துக் கூறியதாவது, "நீ கவலைப்பட வேண்டியதில்லை. இவ்விஷயத்தைப் பற்றி எவ்விதக் கஷ்டமும் இல்லை. நீ வீட்டிற்குத் திரும்பிப் போகும்வழியில், விலேபார்லேயில் காகாவின் (காகா சாஹேப் தீஷித்தின்) வேலைக்காரி உனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்".
பாபா இதைச் சொல்லும்போது அங்கிருந்து இதனைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் பாபா வேடிக்கை செய்கிறார் என்றும், "கல்வி அறிவற்ற வேலைக்காரி ஒருத்தி இவ்வாறான சிக்கல்களை எங்ஙனம் தீர்த்துவைக்க முடியும்?" என்றும் சொல்லிக்கொண்டனர். ஆனால் தாஸ்கணுவோ வேறுவிதமாக எண்ணினார். பாபா எதைப் பேசியபோதும் அவை உண்மையில் நிறைவேறியே தீரும். பாபாவின் சொல்லே பிரம்மத்தின் (ஆண்டவரின்) ஆணைப்பத்திரமாகும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
காகாவின் வேலைக்காரி
பாபாவின் மொழிகளில் முழுமையான நம்பிக்கைகொண்டு ஷீர்டியை விட்டு அவர் விலேபார்லேவிற்கு (பம்பாயின் புறநகர்ப்பகுதி) வந்து காகா சாஹேப் தீஷித்துடன் தங்கினார். அடுத்தநாள் காலை தாஸ்கணு மகிழ்வாக ஒரு சிறுதுயில் கொண்டிருக்கும்போது (சிலர் அவர் வழிபாடு செய்துகொண்டிருக்கும்போது என்று கூறுகின்றனர்) ஒரு ஏழைப் பெண் அழகான பாடல் ஒன்றை இனிமையான குரலில் பாடிக்கொண்டிருந்தாள். பாடலின் உட்பொருளாவது:
"கருஞ்சிவப்புக் கலர் உடை, அது எவ்வளவு நன்றாய் இருக்கிறது. அதன் எம்ராய்டரி வேலை எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது. அதன் முந்தாணையும், பார்டரும் எவ்வளவு அழகாய் இருக்கிறது" என்பதாக..!
அவரை வெளியே ஈர்க்கும் அந்த அளவிற்கு அப்பாடலை அவர் விரும்பினார். வெளியே வந்து பார்த்தபோது, காகா சாஹேபின் வேலைக்காரனான நாம்யாவின் சகோதரியான ஒரு சிறுமியால் அது பாடப்பெற்றதைக் கண்டார். அப்போது அச்சிறுமி பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தாள். அவளது மேனியில் கிழிந்த உடை ஒன்றே இருந்தது. அவளது வறுமையான நிலையையும், அவளது களிப்பான உளப்பாங்கையும் கண்டு தாஸ்கணு அவளுக்காகப் பரிதாபப்பட்டார். அடுத்தநாள் ராவ்பகதூர், M.V.ப்ரதான் என்பவருக்கு ஒரு ஜதை வேஷ்டி கொடுத்தபோது, அவரை தாஸ்கணு அந்த ஏழைச் சிறுமிக்கு புதிய உடை வங்கி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ராவ் பகதூரும் அழகிய பாவாடைத் தாவணி ஒன்றை வாங்கிவந்து அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.
பசியால் வாடும் ஒருவனுக்கு, அதிஷ்டவசமாக உண்பதற்கு நல்ல விருந்து கிடைக்கப்பெற்றதைப் போன்றே, அவளது களிப்பு கரைகாணாது போயிற்று. மறுநாள் புத்தாடையை அவள் அணிந்துகொண்டாள். பெருமகிழ்ச்சியுடனும், கொண்டாட்டத்துடனும் சுற்றிச்சுற்றி ஓடினாள். சுழன்று நடனம் ஆடினாள். மற்றச் சிறுமிகளுடன் ஃபுகடி (கோலாட்டம்) விளையாடி அவர்களை எல்லாம் வென்றாள். அதற்கடுத்த நாள் அதை வீட்டிலேயே வைத்துவிட்டுத் தனது பழைய கந்தலையே அணிந்து வந்தாள். ஆனால் முன்தினம் காணப்பெற்ற மாதிரியே அதேயளவு ஆனந்தத்துடன் காணப்பட்டாள். இதைக் கண்ணுற்ற தாஸ்கணுவின் இரக்கவுணர்ச்சி, புகழ்ச்சியாக மாறியது. அச்சிறுமி ஏழையானதால் கந்தலையே அணியவேண்டும். ஆனால் தற்போது அவளிடம் ஒரு புதிய உடை இருக்கிறது. அதை அவள் பத்திரப்படுத்தி இருக்கிறாள். பழைய கந்தலையே உடுத்தியும், எவ்வளவு துன்பமோ, மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக் கொண்டாள்.
இவ்வாறாக நமது மனத்தின் இன்ப, துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். இந்நிகழ்ச்சியைப் பற்றியே அவர் ஆழ்ந்து, ஆராய்ந்து கடவுள் முன்னும், பின்னும், எல்லாத் திசைகளிலும், எல்லாப் பொருட்களிலும் சூழ்ந்து ஊடுருவி இருக்கிறார் என்றும், கடவுளால் அவனுக்கு வழங்கப்பட்டவை அனைத்தும், உறுதியாக அவனது நன்மைக்கேயாகும் என்னும் மறக்கவியலாத திட நம்பிக்கையுடன் கடவுளால் தனக்கு அருளப்படவைகள் அனைத்தையும் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உணர்ந்தார்.
இக்குறிப்பிட்ட சம்பவத்தில் ஏழைச் சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புதுப்பாவாடைத் தாவணி, அதை அன்பளிப்பாகக் கொடுத்தவர், அன்பளிப்பைப் பெற்றவள், அதனை ஏற்றுக்கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே. அவரே எல்லாவற்றிலும் ஊடுருவிப் பார்த்து இருக்கிறார் என்று தாஸ்கணு உபநிஷதப் பாடத்தின், நடைமுறைச் சான்று விளக்கத்தினை இவ்விடத்தில் பெற்றார். எது நேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், கடைமுடிவாக அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியதானவைகளிடம் திருப்தி கொள்ளுதல் என்பதுமாகும்.

No comments :
Post a Comment