V.H.டாகூர் B.A., என்பவர் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா. அவர் ஒருமுறை ஒரு சர்வே கோஷ்டியுடன் பெல்காமுக்கு (தெற்கு மஹாராஷ்ட்ரம்) அருகிலுள்ள வட்காவனுக்கு வந்தார். அங்கு அவர் கன்னட முனிவர் ஒருவரைக் கண்டு அவர் முன் வணக்கம் செலுத்தினார். நிச்சலதாஸின் 'விசார சாகரம்' என்ற நூலின் (வேதாந்தத்தைப் பற்றிய இயன்மதிப்பார்ந்த இலக்கியப் படைப்பு) ஒரு பகுதியை அவையோரின்முன் எடுத்து விளக்கிக் கொண்டிருந்தார். டாகூர் புறப்படுவதற்காக முனிவரிடம் விடை பெறும்போது அவர், "நீ இந்தப் புத்தகத்தைக் கற்கவேண்டும். அங்ஙனம் செய்வாயேயாகில் உனது விருப்பங்கள் நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் உனது அலுவலகக் கடமைகளின் நிமித்தமாக நீ வடக்கே செல்லும்போது உனது நல்ல அதிஷ்டத்தினால் ஒரு பெரிய முனிவரைக் காண்பாய். அவர் உனக்கு எதிர் காலத்திற்குரிய வழியைக் காண்பிப்பார். உனது மனதுக்கு ஓய்வுகொடுத்து உன்னை மகிழச் செய்வார்" என்று கூறினார்.
பின்னர் அவர் கல்யாணுக்கு உயர்ந்த பதவியில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நானா சாஹேப் சாந்தோர்கரின் பழக்கம் ஏற்பட்டது. சாயிபாபாவைப் பற்றி அவரிடமிருந்து நிரம்பக் கேள்விப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க விரும்பினார். அடுத்தநாள் நானா சாஹேப் ஷீர்டிக்குச் செல்வதாக இருந்தார், போகும்போது டாகூரையும் தன்னுடன் கூடவரும்படி அழைத்தார். டாகூரால் அவருடன் செல்ல இயலவில்லை. ஏனெனில், ஒரு சிவில் வழக்கு விஷயமாக அவர் தாணே சிவில் கோட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. எனவே, நானா சாஹேப் தனியாகச் சென்றார். டாகூர் தாணேவுக்குச் சென்றார். அனால், அங்கு விசாரணை ஒத்திப்போடப்பட்டது. பின்னர், அவர் தாம் நானா சாஹேபுடன் செல்லாததற்கு பச்சாதாபப்பட்டார். எனினும் அவர் ஷீர்டிக்குச் சென்றார். அங்கு சென்றபோது அதற்கு முதல் தினமே நானா சாஹேப் ஷீர்டியை விட்டுச் சென்றதாக அறிந்தார். அவ்விடத்தில் சந்தித்த அவருடைய மற்ற நண்பர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் பாபாவைத் தரிசித்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார். அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. அவர் உடம்பு புல்லரித்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் எங்கும் நிறை பேரறிவாளராகிய பாபா அவரைநோக்கி, "இவ்விடத்தினுடைய வழியானது கன்னடதேச முனிவரான அப்பாவின் உபதேசங்களைப் போன்றோ, நாணேகாட்டின் எருமைச் சவாரியைப் போன்றோ அவ்வளவு எளிதானதன்று. இவ்வாத்மிக வழியில், அது மிகவும் கடினமானதாகையால் நீர் உமது மிகச்சிறந்த முயற்சியைக் கைக்கொள்ளுதல் அவசியமாகும்" என்று கூறினார். தாம் மட்டுமே அறிந்த இத்தகைய உட்கருத்து வளஞ்செறிந்த அடையாளங்களையும், சொற்களையும் கேட்டு டாகூர் ஆனந்தக் களிப்பில் மூழ்கினார். கன்னடதேச முனிவரின் மொழிகள் உண்மையானதைத் தெரிந்துகொண்டார். பின்னர் அவர் தனது இருகரங்களையும் கூப்பி வணங்கித் தன சென்னியை பாபாவின் பாதங்களில் வைத்து, தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று வேண்டினார். பின்னர் பாபா கூறினார், "அப்பா உன்னிடம் சொன்னது சரியானதே. ஆனால், இவைகள் பயிலப்பட்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெறும் கல்வியினால் பயனேதும் இல்லை. நீங்கள் சிந்தித்து, கற்றபடி நெறியில் நிற்றல் வேண்டும். இல்லாவிடில் அவைகளால் ஒரு பலனும் இல்லை. குருவின் அனுக்கிரஹமின்மையும், ஆத்மானுபூதியின்றியும் உள்ள வெறும் ஏட்டுப் படிப்பால் பயனில்லை". விசார சாகரம் என்ற நூலின் கோட்பாட்டியல் பகுதி டாகூரினால் படிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஷீர்டியில் அவருக்கு நடைமுறையிலான வழி காண்பிக்கப்பட்டது. பின்னால் கொடுக்கப்பட்ட்ட மற்றொரு நிகழ்ச்சியும், இவ்வுண்மையை இன்னும் அதிக வன்மையுடன் வெளிக்கொணர்கிறது.

No comments :
Post a Comment