Wednesday, 8 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 21 - பகுதி 4

No comments

அனந்தராவ் பாடண்கர்:-

புனேவைச் சேர்ந்த  அனந்தராவ் பாடண்கர் என்னும் பெருந்தகை ஒருவர் பாபாவைக் காணவிரும்பினார்.  அவர் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.  அவரது கண்களில் ஆவல் நிறைவேறின.  அவர் மிகவும் ஆனந்தமடைந்தார்.  பாபாவின் பாதங்களில் வீழ்ந்து  உரிய வழிபாட்டை நிகழ்த்தியபின்பு, பாபாவிடம் "நான் ஏராளமாகப் படித்திருக்கிறேன்.  வேதங்கள், வேதாந்தங்கள், உபநிஷதங்கள் இவைகளைப் பயின்றும், புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன்.  என்றாலும் எனக்கு மன அமைதி ஏற்படவில்லை.  

எனவே, எனது கல்வியறிவு யாவும் பயனற்றவை என நினைக்கிறேன்.  எளிய, ஒன்றும் அறியாத பக்தியுள்ள மக்கள் என்னைவிடச் சிறந்தவர்கள்.  மனம் அடங்கினாலன்றி எந்த நூலறிவும் பயனில்லை.  தங்கள் திருநோக்கினாலும், விளையாட்டான மொழிகளாலும் தாங்கள் எளிதாக எவ்வளவோ மக்களுக்கு மனச்சாந்தி வழங்குகிறீர்கள் என்று நான் பலரிடம் இருந்து கேட்டிருக்கிறேன்.  எனவே, நான் இங்கு வந்திருக்கிறேன்.  தயவுசெய்து என்மேல் இரக்கம் காண்பித்து, என்னை ஆசீர்வதியுங்கள்" என்று கூறினார்.  இதற்கு பாபா அவருக்கு ஒரு உருவகக் கதை சொன்னார்.

ஒன்பது லத்தி உருண்டைகளின் கதை (நவவித பக்தி)  
                     
ஒருமுறை ஒரு வணிகன் இவ்விடம் வந்தான்.  அவன் முன்னால் ஒரு குதிரை லத்தி (சாணம்) இட்டது.  (ஒன்பது உருண்டை லத்தி) வணிகன் மனமார்ந்த அக்கறையுடன் தனது வேட்டியின் முனையை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் அதில் சேகரித்தான்.  அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை (மன அமைதி) அடைந்தான்.  

பாடண்கருக்கு இக்கதையின் உட்பொருள் விளங்கவில்லை.  எனவே, அவர் கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கரிடம் பாபா இதன்மூலம் என்ன போருல்கொல்கிறார் என்று கேட்டார்.  அவர் "எனக்கும் பாபா பொருள்கொள்வது, சொல்லுவது அனைத்தும் தெரியாது என்றாலும், அவருடைய தெய்வீக அகத்தூண்டுதலால் நான் தெரிந்துகொண்டதைக் கூறுகிறேன்.  குதிரையே கடவுளின் அருள்.  வெளிப்பட்ட ஒன்பது உருண்டைகள் பக்தியின் ரூபங்கள் அல்லது வகைகள்.  அவையாவன:

(1)  ஸ்ரணவம் - கேட்டல்
(2)  கீர்த்தனை - வேண்டுதல்
(3)  ஸ்மரணம் - நினைவுறுத்திக்கொள்ளுதல்
(4)  பாத சேவனம் - பாதங்களைத் தஞ்சமடைதல்
(5)  அர்ச்சனை - பூஜை
(6)  நமஸ்காரம் - வணங்குதல் 
(7)  தாஸ்யா - சேவை
(8)  சக்யத்வா - நட்பு 
(9)  ஆத்மா நிவேதனம் - தன்னையே இறைவனுக்குச் சமர்ப்பித்தல்

இவைகள் பக்தியின் ஒன்பது விதங்கள்.  இவைகளில் ஏதாகிலும் நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டால் பரமாத்மாவாகிய ஹரி மகிழ்வெய்தி பக்தனின் வீட்டில் தாமே வெளிப்படுவார்.  எல்லாச் சாதனைகளும் அதாவது ஜபம், தபம், யோகப்பயிற்சி, வேதபாராயணம் அவைகளின் வியாக்கியானப் பேச்சு ஆகியவை யாவும் பக்தியுடன் சேர்ந்திருந்தாலன்றி முழுவதுமாகப் பயனற்றவையே ஆகும்.  வேதஞானம் அல்லது பெரும் ஞானி என்ற புகழ், வெறும் சம்பிரதாய பஜனை இவற்றால் பயனில்லை.  அன்பான பக்தியே தேவைப்படுவதாகும்.  வணிகனைப் போன்றோ அல்லது உண்மையைத் தேடும் ஒருவனைப் போன்றோ உங்களைக் கருதிக்கொள்ளுங்கள்.  ஒன்பதுவகை பக்தியை விளைவிப்பதில் அல்லது ஒன்பதுவகை சேகரிப்பதில் அவன் கொண்டதைப் போன்ற கவலையுடனும், ஆர்வத்துடனும் இருங்கள்.  அப்போது நீங்கள் நிலையுறுதியையும், மனச்சாந்தியையும் எய்துவீர்கள்".

அடுத்தநாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்றபோது பாபா அவரை ஒன்பது லத்தி உருண்டைகளையும் சேகரித்தீரா எனக் கேட்டார்.  அதற்கு அவர் தான் ஒரு எளியவனாக இருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள்செய்ய வேண்டுமென்றும், பின்னர் அவைகளை எளிதாகச் சேர்க்கலாம் என்றும் தெரிவித்தார்.  அதன் பின் பாபா அவரை ஆசீவதித்து அவர் மன அமைதியையும், நமையும் அடைவார் என்று கூறி ஆறுதல் அளித்தார்.  இதைக்கேட்டு பாடண்கர் அளவுகடந்த இன்பமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)



No comments :

Post a Comment