Wednesday, 8 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 21 - பகுதி 5

No comments

பண்டரீபுரத்து வக்கீல்:-     

பாபாவின் எங்கும்நிறை பேரறிவையும், மக்களைத் திருத்துவதையும், சரியான பாதையில் அவர்களை நேரிப்படுத்துவதையும் கூறி இவ்வத்தியாயத்தை முடிப்போம்.  ஒருமுறை பண்டரீபுரத்திலிருந்து ஒரு வக்கீல் ஷீர்டிக்கு வந்து மசூதிக்குச் சென்றார்.  சாயிபாபாவைக் கண்டார்.  அவர்தம் பாதத்தடியில் வீழ்ந்தார்.  கேட்காமலேயே சிறிது தட்ஷணை அளித்தார்.  ஒரு மூலையில் அமர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் உரையாடலைக் கேட்க ஆர்வமுள்ளவராக இருந்தார்.

பின்னர் பாபா, தமது முகத்தை அவர் பக்கம் திருப்பி, "மக்கள் தாம் எவ்வளவு வஞ்சனை உடையவர்களாக இருக்கிறார்கள்!  அவர்கள், பாதங்களில் விழுகிறார்கள், தட்ஷணை அளிக்கிறார்கள், ஆனால் அந்தரங்கமாக, காணாவிடத்தில் திட்டுகிறார்கள்.  இது அற்புதமாக இல்லையா? என்று கூறினார்.  இக்குல்லாய் (குறிப்பு) வக்கீலுக்குப் பொருத்தமாக இருந்தது.  ஒருவருக்கும் இக்குறிப்பு விளங்கவில்லை.  வக்கீல் இதைக் கிரகித்தார்.  ஆனால் அவர் அமைதியாய் இருந்தார்.    
  
அவர் வாதாவுக்குத் திரும்பியபோது, வக்கீல் காகா சாஹேப் தீஷித்திடம் சொன்னதாவது, "பாபா குறிப்பிட்டது சரிநுட்பமாக உண்மையே ஆகும்.  இக்கணை என்மேலேயே எய்யப்படடது.  அதாவது மற்றவர்களைத் திட்டுவதிலோ, அவதூறு பேசுவதிலோ, நான் மனம்போன போக்கில் போகக்கூடாது என்ற எனக்குரிய குறிப்பேயாகும்.  பண்டாரீபுரத்தின் முன்சீஃப் அல்லது சப்-ஜட்ஜ் (நூல்கர்) தமது உடல்நல முன்னேற்றத்தை முன்னிட்டு இவ்விடம் வந்து தங்கியிருந்தபோது, பண்டரீபுரத்தின் பார்-ரூமில் (வக்கீல்கள் அறை) இந்த விஷயத்தைப் பற்றிய விவாதம் (மற்ற பார் அறைகளில் நடப்பதுபோன்று) நடந்தது.

துன்புற்று வந்த நோய்கள் யாவும் சாயிபாபாவின் பின்னால் போவதால் மட்டுமே மருந்துகள் இன்றி குணப்படுத்தப்படும் வாய்ப்பு சிறிதேனும் உள்ளதா என்றும், சப்-ஜட்ஜைப் போன்ற படித்தவர்கள் இதைப்போன்ற முறைகளை அனுசரிப்பது சரியா என்றும் சொல்லப்பட்டது அல்லது விவாதிக்கப்பட்டது.  அதாவது மறைமுகமாக சாயிபாபா அவதூறு பேசப்பட்டார் அல்லது குறைகூறப்பட்டார்.  நானும் இந்த விஷயத்தில் கொஞ்சம் பங்கு கொண்டேன்.  இப்போது சாயிபாபா எனது ஒழுங்கீனத்தை எடுத்துக் காட்டினார்.  இது எனக்குரிய கண்டனமாகாது, ஆனால் ஓர் சகாயமாகும்.  ஓர் உபதேசமாகும்.  அதாவது நான் பிறரைத் தூற்றுவது, துஷ்பிரசாரம் செய்வது இவற்றில் தன்னிச்சையுடன் செயல்படக்கூடாது என்பது பற்றியும் அனாவசியமாகப் பிறர் காரியங்களில் தலையிடக்கூடாது என்பது பற்றியுமாகும்".

ஷீர்டி, பண்டாரீபுரத்திலிருந்து முந்நூறு (300) மைல் தூரத்தில் இருக்கிறது.  எனினும் அங்குள்ள பார் அறையில் என்ன நிகழ்ந்தது என்பதை பாபா தமது எங்கும் நிறை பேரறிவால் அறிந்திருந்தார்.  இடையில் உள்ள இடங்கள், ஆறுகள், காடுகள், மலைகள் யாவும் அவர்தம் அனைத்தையும் உணரும் பார்வைக்குத் தடை செய்வன அல்ல.  அவர் எல்லோருடைய இதயங்களையும் பார்க்க முடியும்,  படிக்க முடியும்.  எதுவும் அவருக்கு இரகசியமோ, மறைக்கப்பட்டதோ அன்று.  அண்மையிலோ, சேய்மையிலோ உள்ள ஒவ்வொன்றும் பட்டப் பகலொளியைப் போன்று தெட்டத் தெளிவாகவும், சுத்தமாகவும் அவருக்குத் தெரியும்.

ஒரு மனிதன் பக்கத்தில் இருந்தாலும் அவன் சாயிபாபாவின் எங்கும்நிறை கூர்ந்த பார்வையினின்று தப்ப முடியாது.  இதிலிருந்து மற்றவர்களைப் பற்றித் தூஷணையாகப் பேசக்கூடாது என்றும், தேவையில்லாமல் மற்றவரைக் குறைகூறக் கூடாது என்றும் வக்கீல் அறிந்துகொண்டார்.  இவ்வாறாக அவர்தம் கெட்டகுணம் முழுவதுமாக மறைந்து நல்வழிக்குத் திருப்பபட்டார்.  இக்கதை வக்கீலுக்கே என்றாலும், அனைவருக்கும் இது பொருந்துவதேயாகும்.  அனைவரும் இந்நியதியை உள்ளத்தில்கொண்டு, அதனால் வரும் பயனை அடையவேண்டும்.

சாயிபாபாவின் பெருமை ஆழங்காண இயலாதது.  அவ்வாறே அவர்தம் அற்புதமான லீலைகளுமாகும்.  அவர்தம் வாழ்க்கையும் அங்ஙனமேயாகும்.  ஏனெனில் அவரே பரப்பிரம்ம அவதாரம் ஆவார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                            (தொடரும்…)

No comments :

Post a Comment