Wednesday, 8 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 22 - பகுதி 1

No comments


முன்னுரை:-

பாபாவை எங்ஙனம் தியானிப்பது?  கடவுளின் தன்மையையோ, ரூபத்தையோ ஆழ்ந்தறிய யாராலும் இயலாது.  வேதங்களும், ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனும்கூட அதை முழுமையாக விவரிக்க இயலவில்லை.  கடவுளின் ரூபத்தைத் தரிசிக்கவும், அறியவும் அடியவர்களால் மட்டுமே இயலும்.  ஏனெனில் அவர்தம் பாதங்கள் மட்டுமே அவர்களுடைய மகிழ்ச்சிக்குரிய ஒரே வழி என்பதை அவர்கள் அறிவார்கள்.  வாழ்க்கையின் உச்ச உயர் இலட்சியத்தை அடைய அவர்தம் பாதங்களைத் தியானிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறெவ்வித வழியும் தெரியாது.  ஹேமத்பந்த் தியானத்திற்கும், பக்திக்கும் ஒரு எளிய வழியைப் பின்வருமாறு தெரியப்படுத்துகிறார்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகக் கழிவுறுவதைப் போன்றே சந்திரனது ஒளியும், அதே நுட்ப அளவில் தேய்வடைகிறது.  அமாவாசையன்று நாம் சந்திரனையே பார்க்கமுடிவதில்லை.  அதனது ஒளியையும் பெறுவது இல்லை.  எனவே வளர்பிறை நாட்கள் தொடங்கும்போது மக்கள் சந்திரனைக் காண்பதில் மிக்க ஆவலாக இருக்கிறார்கள்.  முதல்நாள் அது தெரிவதில்லை.  இரண்டாம் நாளும்கூட அது தெளிவாகத் தெரிவதில்லை.  பின்னர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கு நடுவிலுள்ள திறப்பிலிருந்து அச்சந்திரனைப் பார்க்கும்படி மக்கள் கேட்க்கப்படுகிறார்கள்.

அவர்களும் ஆர்வத்துடனும், ஒரே கவனத்துடனும் நோக்கும்போது தூரத்திலுள்ள அவ்விளம்பிறை அவர்களின் காட்சி எல்லைக்கு எட்டுவதை அவர்கள் பேருவகையுடன் காண்கிறார்கள்.  இந்த வழிக்குறிப்பைத் தொடர்ந்தே நாம் பாபாவின் ஒளியைக் காண முயலுவோம்.  பாபாவின் தோற்ற அமைப்பைக் காணுங்கள்.  அது எவ்வளவு அருமையாக இருக்கிறது!  அவர் அட்டணக்கால் இட்டு அமர்ந்திருக்கிறார்.  வலதுகால் இடது முழங்கால் மேலும், இடது கையின் விரல்கள் வலது பாதத்திலும் படரப்பட்டு இருக்கின்றன.  வலதுகால் பெருவிரலில் அவர்தம் இரண்டு கைவிரல்கள் ஆள்காட்டிவிரலும், நடுவிரலும் படர்ந்திருக்கின்றன.

இத்தோற்ற அமைப்பால் பாபா குறிப்பிடுவதாகத் தோன்றுவதாவது, நீ எனது ஒளியைக் காண விரும்பினால் அஹங்காரமற்றவனாகவும், மிகமிகப் பணிவுடனும் இருப்பாயாக.  எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக.  அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றிடையே.  அதன்பின் நீ எனது ஒளியைக் காண இயலும்.  இதுவே பக்தியை அடைய மிகமிக எளிய வழியாகும்.  

சில கணங்கள் நாம் பாபாவின் வாழ்க்கையை நோக்குவோம்.  பாபாவின் வாசத்தால் ஷீர்டி ஒரு புண்ணிய ஷேத்திரமாக மாறியது.  எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் அங்கே கூடத் தொடங்கினார்கள்.  ஏழைகளும், பணக்காரர்களும் ஒன்றுக்கு மேலிட்ட பல வகைகளால் ஏதோ ஒரு ரூபத்தில் நன்மையடையத் தொடங்கினார்கள்.  பாபாவின் எல்லையற்ற அன்பையும், அவரின் வியத்தகு இயற்கையான ஞானத்தையும், அவரின் சர்வவியாபகத் தன்மையையும் யாரே விவரிக்க இயலும்!  இவைகளுள் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ யார் அனுபவிக்க வல்லரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

சில நேரங்களில் பாபா நீண்டநேரம் மௌனம் அனுஷ்டித்தார்.  அது ஒருவகையில் பிரம்மத்தைப் பற்றிய அவரின் நீண்ட விளக்கமாகும்.  மற்ற சிலநேரங்களில் தமது அடியவர்களால் சூழப்பட்டு உணர்ச்சிகளின் திரள், ஆனந்தம் இவைகளின் அவதாரமாகத் தோன்றினார்.  சில நேரங்களில் அவர் உருவகக் கதைகளால் பேசினார்.  மற்ற சில நேரங்களில் தமாஷுக்கும், நகைச்சுவைக்கும் அதிக இடம் கொடுத்தார்.  சில நேரங்களில் அவர் முழுவதும் ஐயமின்றியும், சில நேரங்களில் சீற்றம் கொண்டவர் போலும் தோன்றினார்.  சில சமயங்களில் தமது நீதியை இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.  வேறுசில சந்தர்ப்பங்களில் அதைப் பற்றி நெடிய விவாதம் நடத்தினார். பல சமயங்களில் அவர் மிகவும் வெளிப்படையாக இருந்தார்.  இவ்வாறாக அவர் பலருக்கும் வெவ்வேறுவிதமான செயல்துறைக் கட்டளைகளை அவரவர்களின் தேவைக்கேற்ப அளித்தார்.  எனவே அவர் வாழ்க்கையானது அறிவால் அறிந்துகொள்ள இயலாதது.  நமது மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது.  நமது புத்தி சாதுர்யத்தையும், மொழிகளையும் கடந்தது.  அவரது முகத்தைப் பார்க்க, அவருடன் பேச, அவரது லீலைகளைக் கேட்க இருக்கும் நமது பேரார்வமானது திருப்தி செய்யப்படவேயில்லை என்றாலும் நாம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறோம்.  மழையின் துளிகளை நாம் எண்ணிவிடலாம்.  காற்றைத் தோல் பையினுள் அடைத்துவிடலாம்.  ஆனால் அவரது லீலைகளை யாரே அளக்கமுடியும்!

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment