பாபாவின் ஒரு பண்புக்கூற்றினைப் பற்றி இங்கே நாம் கூறுகிறோம். எங்ஙனம் எதிர்பார்த்திருந்த, முன்னால் அறியப்பட்டிருந்த, பக்தர்களின் பேராபத்துக்கள் உரிய நேரத்தில் எச்சரிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டன என்பதைக் காண்போம்.
பாலா சாஹேப் மிரீகர்:-
கோபர்காவனில் மம்லதாரான பாலா சாஹேப் மிரீகர் (சர்தார் காகா சாஹேப் மிரீகர் என்பவரின் மகன்) சிதலீக்குச் சுற்றுப் பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். வழியில் அவர் ஷீர்டிக்கு சாயிபாபாவைப் பார்க்க வந்தார். மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்து பணிந்ததும், உடல்நலம் மற்றும் வேறு விஷயங்கள் பற்றிய வழக்கமான உரையாடல் துவங்கியது. பாபா எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை விடுத்தார். "உங்களுக்கு நம்முடைய த்வாரகாமாயியைத் தெரியுமா? " பாலா சாஹேபுக்கு இது புரியாததால் அவர் அமைதியாக இருந்தார்.
பாபா தொடர்ந்து, "நீங்கள் அமர்ந்துகொண்டிருக்கும் இதுவே நமது த்வாரகாமாயி. தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துக்களையும், கவலைகளையும் அவள் தடுத்து விலக்குகிறாள். இந்த மசூதி மாயி (அடக்கி ஆட்சி செய்யும் இதன் அம்பிகை) மிகவும் கருணையுள்ளவள். அவள் எளிய பக்தர்களின் தாயாவாள். அவர்களைப் பேராபத்துக்களிளிருந்து அவள் பாதுகாக்கிறாள். ஒரு மனிதன் அவளது மடியில் ஒருமுறை அமர்ந்தால் அவனது எல்லாக் கஷ்டங்களும் முடிவடைந்துவிடும். அவளது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர்" என்றார்.
பின்னர் பாபா அவருக்கு உதியை அளித்து தமது பாதுகாக்கின்ற கரங்களை அவர் தலையில் வைத்தார். பாலா சாஹேப் புறப்படப்போகும் அத்தருணத்தில், "உங்களுக்கு லம்பா பாபாவைத் தெரியுமா? (நீண்ட பெருந்தகை) அதாவது பாம்பை?" என்றார். பின்னர் இடது கை முட்டியை மூடிக்கொண்டு வந்து தமது இடது புஜத்தை பாம்பின் படம் போன்று ஆட்டிக்கொண்டு அவர் "அவன் எவ்வளவு பயங்கரமானவன், ஆனால் த்வாரகாமாயியின் குழந்தைகளை அவன் என்ன செய்யமுடியும்?! த்வாரகாமாயியானவள் பாதுகாக்கும்போது பாம்பு என்ன செய்யமுடியம்" என்று கூறினார்.
இவையனைத்திற்கும் பொருள், மிரீகருக்கு அதுபற்றிய சுட்டுக்குறியீடு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அங்கு பிரசன்னமாயிருந்த அனைவரும் ஆவலாய் இருந்தனர். ஆனால் ஒருவருக்கும் இதைப்பற்றி பாபாவிடம் கேட்கத் துணிவு இல்லை. பின்னர் பாலா சாஹேப் பாபாவை வணங்கிவிட்டு ஷாமாவுடன் மசூதியை விட்டுப் புறப்பட்டார். பாபா, ஷாமாவைத் திரும்ப அழைத்து பாலா சாஹேபுடன் கூடச் செல்லும்படியும் சிதலீ சுற்றுலாவை மகிழ்ந்தனுபவிக்கும்படியும் கூறினார்.
ஷாமா பாலா சாஹேபிடம் வந்து பாபாவின் விருப்பப்படி தாமும் அவருடன் வருவதாகக் கூறினார். அது அசௌகரியமாய் இருக்குமாதலால் அவர் வரவேண்டியதில்லையென்று பாலா சாஹேப் கூறினார். ஷாமா பாபாவிடம் திரும்பிவந்து பாலா சாஹேப் தம்மிடம் கூறியதைத் தெரிவித்தார். அப்போது பாபா, "நன்று, போகாதே, நாம் நல்லவற்றையே செய்யவேண்டும். எதுதானென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நிச்சயம் நடந்தேறும்" என்று கூறினார்.
இதற்கிடையில் பாலா சாஹேப் இதைப்பற்றி மீண்டும் சிந்தித்து ஷாமாவைக் கூப்பிட்டுத் தன்னுடன் வரச்சொன்னார். பின்னர் ஷாமா மீண்டும் பாபாவிடம் சென்று, அவரிடம் விடைபெற்றுக்க்கொண்டு பாலா சாஹேபுடன் ஒரு குதிரை வண்டியில் புறப்பட்டார். அவர்கள் சிதலீக்கு இரவு ஒன்பது மணிக்குப் போய்ச்சேர்ந்தார்கள். மாருதி கோவிலில் தங்கினார்கள். அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வரவில்லையாதலால் அவர்கள் கோவிலிலேயே பேசிக்கொண்டும், அரட்டையடித்துகொண்டும் அமர்ந்திருந்தனர்.
பாலா சாஹேப், பாயின் மீது அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அவரது மேல் வேட்டி இடுப்பின்மீது போடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியில் ஒரு பாம்பு கவனிக்கபடாமல் அமர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு சலசல சத்தத்துடன் நகர்ந்தது பியூனுக்குக் கேட்டது. அவன் ஒரு விளக்கு கொண்டுவந்து பாம்பைப் பார்த்துவிட்டு "பாம்பு... பாம்பு...!" என்று அபாயக்குரல் எழுப்பினான். பாலா சாஹேப் திகலடைந்து நடுங்கத் தொடங்கினார். ஷாமாவும் திகைத்தார். பின்னர் அவரும் மற்றவர்களும் சந்தடி செய்யாமல் தடிகளையும், குச்சிகளையும் எடுத்து வந்தனர். பாம்பு மெதுவாக இடுப்பைவிட்டுக் கீழிறங்கி பாலா சாஹேபை விட்டு அப்பால் செல்லத் தொடங்கியது. அது உடனே கொல்லப்பட்டது. இவ்விதமாக பாபாவின் தீர்க்க தரிசனத்தால் அறிவித்திருந்த பேராபத்து தடுக்கப்பட்டது. பாலா சாஹேபுக்கு பாபாவிடமுள்ள அன்பு மிகவும் ஆழமாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment