Thursday, 9 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 23 - பகுதி 1

No comments

முன்னுரை:-

உண்மையிலேயே இந்த ஜீவன் (மனித ஆத்மா) சத்துவம், ராஜஸம் என்ற மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறது.  ஆனால் மனிதன் மாயையால் மறைக்கப்பட்டுத் தனது இயற்பண்பான சச்சிதானந்தப் பெருநிலையை மறந்து தானே செய்விப்பவனும், அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு இவ்வாறாக முடிவற்ற இடர்ப்பாடுகளில் தன்னைத்தானே சிக்கவைத்துக் கொள்கிறான்.  விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்குப் புலப்படவில்லை.

குருவின் பாதங்களில் செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே விடுதலையடைவதற்கான ஒரே வழி.  சாயிபிரபு என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் அல்லது நடிகர், தம் அடியவர்களை மகிழ்வித்தார்.  அவர்களைத் தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்துகொண்டார்.

முன்னரே குறிப்பிட்ட காரணங்களால் சாயிபாபாவை நாம் ஒரு அவதாரமாகவே கருதுகிறோம்.  ஆனால் தான் கடவுளின் பணிவுள்ள ஒரு சேவகன் என்றே அவர் எப்போதும் கூறினார்.  அவர் தாமே ஓர் அவதாரமானபோதும்கூட எங்ஙனம் திருப்தியான வகையில் மக்கள் நடந்துகொள்ளவேண்டும், வாழ்க்கையில் தாங்கள் தங்கள், பணித்துறையிடத்திற்கேற்ற (வருணாஸ்ரம தர்மத்திற்கேற்ப) கடமைகளைச் செய்யவேண்டும் என்று வழி காண்பித்தார்.

அவர் ஒருபோதும் எந்த வகையிலும் மற்றவர்களைப் போட்டியிட்டு மேம்படும் முயற்சிகளைக் கொண்டதில்லை அல்லது தமக்காக ஏதேனும் செய்யும்படி அவர்களைக் கேட்டதில்லை.  இவ்வுலகின் அசையும், அசையாப் பொருட்கள் யாவற்றிலும் கடவுளைக் கண்ட அவருக்குப் பணிவுடைமையே மிகவும் பொருத்தமானதொன்றாகும்.  ஒருவரையும் அவர் புறக்கணித்ததில்லை அல்லது மதிக்காமல் இருந்ததில்லை.  நாராயணனை (கடவுளை) சர்வ ஜீவராசிகளிடமும் கண்டார்.  'நான் கடவுள்' என்று ஒருபோதும் அவர் சொன்னதில்லை.  ஆனால் தான் ஒரு பணிவுள்ள சேவகன் என்றும், எப்போதும் அவரை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார்.  'அல்லா மாலிக்' (இறைவனே எஜமான்) என்று எப்போதும் உச்சரிப்பார்.

பல்வேறு வகையான முனிவர்களையெல்லாம் நமக்குத் தெரியாது.  எங்ஙனம் அவர்கள் நடந்து கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எதைச் சாப்பிடுகிறார்கள் என்பதெல்லாம் நாமறியோம்.  அறியாமையிலுள்ள, பிணிக்கப்பட்ட ஆன்மாக்களை விடுவிப்பதற்காகக் கடவுள் அருளால் அவர்கள் இவ்வுலகத்தில் தங்களை அவதரித்துக்கொள்கிறார்கள். 
 
நல்வினைகளின் சேமிப்பு ஏதேனும் நமது கணக்கில் இருக்குமானால் முனிவர்களின் கதைகள் அல்லது லீலைகளைக் கேட்பதற்கு நமக்கு ஓர் ஆர்வம் அல்லது சுவாரசியம் ஏற்படுகிறது.  அல்லாவிடில் கேட்பதற்கு ஆர்வம் எழாது. இந்த அத்தியாயத்தின் முக்கிய கதைகளுக்கு இப்போது திரும்புவோம். 

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment